சட்டென்று எப்படி ஆரம்பிப்பது? எதிலிருந்து தொடங்குவது? அது இயல்பாக இருக்க வேண்டும். சரியாக திட்டமிட்டுக்கொள்ளாவிட்டால் வார்த்தை தடுமாறி உளறுவதற்கே வாய்ப்பு அதிகம். சின்ன முகச் சுளிப்பொன்று போதும் அவளுக்கு. கண்டுபிடித்துவிடுவாள். பின்னர், காரியம் கெட்டுவிடும். அவளை நான் விசாரிப்பதற்குப் பதில் அவளின் விசாரணைக்கு நான் உட்பட வேண்டியிருக்கும். ஆனால், பதில் கண்டுபிடித்தே தீரவேண்டும். ஒரு மாதம் சேகரித்த தகவல்களில் மற்ற எல்லாவற்றையும் புறம் தள்ளினாலும் அந்த ‘ஒரு விசயம்’ உறுத்திக்கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் அச்சமாக இருக்கிறது. வேறு யாரிடமாவது கேட்கலாம் என்றால், வெளியே சொல்ல முடியாது. அத்தனையும் இரகசியம். கொஞ்சம் ஒப்பந்தத்தை மீறினாலும் பெரிய பிரச்சினையில்போய் முடியும். வேலைகூட போய்விட வாய்ப்புண்டு. ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது இப்படியான சிக்கல்களையெல்லாம் கற்பனைகூட செய்துபார்க்கவில்லை. ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம் ப்ளூ டூத் ஸ்பீக்கரில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தது. மீரா, ராபர்ட்டோ பொலேனோவின் ‘த ரொமாண்டிக் டாக்ஸ்’ புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அட...