Skip to main content

இரு கோப்பைகள்


ஞாயிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தேன். 

முதலில் அந்தச் சத்தம் பக்கத்து வீடுகளில் யாரோ மெதுவாக சுவரில் ஆணியடிப்பதைப் போன்று கேட்டது. அடுத்த முறை அந்தச் சத்தம் நொய்டாவின் தெருவோர தேநீர்க் கடைகளில் சூடான தேநீருக்கு இஞ்சியைத் தட்டிப் போடுவதற்காக தட்டுவதைப் போன்று 'தொப் தொப்'பென்று கேட்டது.

ஆனால் ஞாயிற்றுக் கிழமை இரவு பதினோறு மணிக்கு இவை இரண்டுமே சாத்தியமில்லை. அதுவும் இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரடங்கிப் போய்விடுகின்ற, பொதுப் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட அடுத்தவர்களுக்கு கேட்டுவிடாத கிசுகிசுக் குரலில் பேசும் மக்கள் வாழ்கின்ற சிட்னி போன்ற ஒரு பெரு நகரத்தில்  சுவர் ஆணிக்கோ, இரவுத் தேநீருக்கோ இந்நேரத்தில் வாய்ப்பு மிகவும் குறைவு. 

"யாரோ கதவத் தட்டுற மாதிரியில்ல" என்று பக்கத்தில் படுத்திருந்த காவ்யா கேட்கும் போதுதான் அதை உணர்ந்தேன். எங்கள் வீட்டுக் கதவு தான் தட்டப்படுகிறது.

"இந்த நேரத்துல யாராயிருக்கும்" என்ற அவளின் கேள்வியில் பதற்றமும் மெல்லிய பயமும் ஏறியிருந்தது. எனக்கும் அதே பதற்றமும் பயமும் இருந்தது. ஆனாலும், நாங்கள் வசிப்பது மிகப் பாதுகாப்பான தொரு அடுக்ககக் குடியிருப்பு. உரிய அனுமதியில்லாமல் யாரும் அவ்வளவு எளிதில் உள்ளே வந்துவிட முடியாது. எனவே இங்கே பக்கத்தில் வசிப்பவர்கள் யாராவதாகத் தான் இருக்க வேண்டும் என்றென்னைச் சமாதானப் படுத்திக் கொண்டு, டீ-சர்ட்டை அணிந்து கொண்டே ஹாலுக்குச் சென்றேன். டீ சர்ட்டை தலை வழியாக நுழைத்து கைகளை உள்ளேவிட்டு எடுக்கும் இடைப் பட்ட நேரத்தில், மெல்பர்னில் இனவெறித் தாக்குதலுக்குட்பட்ட மலையாளி ஒருவர் கொடுத்த பேட்டி ஒருமுறை மின்னலடித்துப் போனது. 

ஹாலில் விளக்கைப் போட்டுவிட்டு, "யாரது?" என்று வினவினேன்.

"கொஞ்சம் கதவைத் திறக்க இயலுமா?" என்று அட்சர சுத்தமான ஆங்கிலத்தில் ஒலித்த அந்தக் குரலுக்கு வயது அறுபதுக்கும் மேலிருக்க வேண்டும். 

"இந்த நேரத்தில் ஏன் கதவைத் தட்டுகிறீர்கள்? யார் நீங்கள்?" 

"என் பெயர் மார்க்... மார்க் ஹூ.  உங்களுக்குப் பக்கத்தில் வீட்டில் தான் வசிக்கிறேன். தயவு செய்து கதவைத் திறங்கள். உங்களிடம் ஓர் உதவி தேவைப் படுகிறது"

எங்களுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு முதிய தம்பதிதாம் வசிக்கிறார்கள். அவர்களுக்கும் வயது எழுபதுக்கு மேல் இருக்கும். எங்கள் வீட்டுப் பால்கனியிலிருந்து பார்த்தால் அவர்களது பால்கனி நன்றாகத் தெரியும்.  ஒரே அடுக்ககக் குடியிருப்பு என்பதால் இருவரது வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே அமைப்பு கொண்டவை. இரண்டு கட்டில்கள் போட்டாலும் ஒரு குழந்தை சுற்றி விளையாட இடமிருக்கும் அளவுக்குப் பெரிய பால்கனிகள் கொண்டவை. எங்கள் வீட்டுப் பால்கனியில் பார்பிக்யூ செய்யும் கனல் அடுப்பு ஒன்றை வீட்டு உரிமையாளர் வைத்துவிட்டுப் போயிருந்தார். நண்பர்கள் கூடும் நாளில் பால்கனியில் அமர்ந்து பார்பி க்யூவில் சுட்ட கறி சாப்பிடுவதுண்டு. 

அவர்கள் பால்கனியில் மூங்கில்களால் செய்யப்பட்ட ஒரு காபி டேபிளும், பச்சை வண்ண குஷன் போட்ட இரண்டு மூங்கில் சேர்களும் போடப் பட்டிருக்கும். வரிசையாக தொட்டிச் செடிகள் வைக்கப் பட்டிருக்கும். தினமும் மாலைப் பொழுதுகளில் எதிரெதிராக சேர்களைப் போட்டமர்ந்து தம்பதிகள் இருவரும் தேநீர் அருந்துவார்கள். மழை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் ஒரு சடங்கு போல தவறாமல் இது நடக்கும். பால் சேர்க்காத தேநீரில் கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து, பீங்கான் கோப்பைகளில் கரண்டியால் கலக்கும் போது அவர்கள் எழுப்பும் 'க்ளிங்க் க்ளிங்க்' சத்தம் மிகப் பிரத்யோகமானது. இருவரும் பேசிக் கொண்டே மெதுவாக ஆற அமர அந்தத் தேநீரைச் சுவைப்பதைப் பார்க்கவே அத்தனை பாந்தமாக இருக்கும். அவர்களிடையே பகிர்ந்து கொள்வதற்கு தீராதப் பிரியங்களும், நேரமும், கூடவே தேநீரும் எப்போதும் இருந்தது. இது போன்ற தருணங்களில் எதேச்சையாக சந்தித்துக் கொள்ளும் போது பொதுவாக புன்னகைத்து வைப்போம். 

சனிக்கிழமை காலைப் பொழுதுகளில் பக்கத்தில் இருக்கும் இந்திய மளிகைக் கடைக்கு நாங்கள் பொருட்கள் வாங்கச் செல்லும் போது, அவர்கள் தள்ளும் வசதி கொண்ட சாமான்கள் வைக்கும் பை ஒன்றை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஃப்ளமிங்டன் காய்கறிச் சந்தைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள். அப்படியாக எதிர்ப்படும் நேரங்களில் ஒரு சிறு தலையசைப்பு. குறு நகை. அவ்வளவுதான் எங்களுக்கும் அவர்களுக்கும் இதுவரையான இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த தகவல் பரிமாற்றங்கள். 

கதவைத் திறந்ததும் அவர் தான் நின்று கொண்டிருந்தார். 

"உள்ளே வாருங்கள். உங்களுக்கு நான் எப்படி உதவ இயலும்?"

வெள்ளை நிறத்தில் ஒரு மெல்லிய காட்டன் சட்டையும், பச்சை நிறத்தில் தடித்த முட்டி வரையிருந்த கால் சராயும் அணிந்திருந்தார். சோபாவில் அமரச் சொன்னதற்கு மறுத்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

"இந்த நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நானும் என் மனைவியும் இன்று பக்கத்திலிருக்கும் பார்க்கில் நடை பழகிவிட்டு சாயுங்காலம் ஐந்து மணி போல வீட்டுக்கு வந்தோம். வந்ததும் தனக்கு மிகவும் களைப்பாக இருப்பதாகவும் அதனால் கொஞ்சம் நேரம் படுத்துறங்கப் போகிறேன் என்று சொல்லி தூங்கச் சென்றாள். இரண்டு மணி நேரம் கழித்து இரவு உணவுக்கு அழைக்கப் போனேன். அவள் எழவில்லை. அதன் பிறகு இப்போது வரை ஏழு எட்டுத் தடவைகள் எழுப்பிவிட முயற்சித்தேன். அவள் எழுவது போலவே இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. மூளை உறைந்துவிட்டதைப் போலிருக்கிறது. நீங்கள் கொஞ்சம் எழுப்பிப் பார்க்கிறீர்களா?"

மெல்லிய குரலில் இதை அவர்ச் சொல்லி முடிக்கும் போதும் அவர் குரல் பிசிரவில்லை. சீனர்களுக்கே உரித்தான அந்தச் சின்னக் கண்களில் அதற்கு மேல் எந்த உணர்வையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. 

தன் வீட்டுக் கதவைப் பூட்டாமல் சாத்திவிட்டு வந்திருக்கிறார். தொட்டுத் தள்ளியதும் திறந்து கொண்டது. வீடு அதி சுத்தமாக இருந்தது. மரத்தாலான உணவு மேசையில் இரவு உணவு தயார் செய்யப்பட்டு மூடி வைக்கப் பட்டிருந்தது.  கூடவே இரண்டு பீங்கான் தட்டுகளும் தயாராக வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு மேல் சுவரில் ஒரு குதிரையின் புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது. நேற்று தான் வாங்கி விரித்தது போல கார்பட் புத்தம் புதிதாக இருந்தது. ஹாலில் டி.வி கூட இல்லை. ஹாலை ஒட்டி உள்ளே சென்ற ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். 

"இதுதான் என் மனைவி சோஃபியா. இப்படியொரு தருணத்தில் அறிமுகப் படுத்துமாறு நேர்ந்து விட்டது. மறுபடியும் தொந்தரவுக்கு மன்னியுங்கள்"

"சோஃபி எழுந்திரும்மா. சோஃபி.. உன்னைப் பார்ப்பதற்காக பக்கத்து வீட்டு இளைஞர் வந்திருக்கிறார். எழுந்துகொள்ளம்மா" என்றார் அதிர்வற்ற குரலில். 

மிகவும் தர்ம சங்கடமான நிலையில் நான் நெளிந்து கொண்டிருந்தேன். படுத்துறங்கியது போலிருந்தவரின் கால் பக்கத்தில் இருந்து, "மேடம் சோஃபியா. எழுந்திருங்கள். எழுந்திருங்கள்" என்று எழுப்ப முயற்சிக் கொண்டிருக்கும் போதே மூச்சு வந்து போகிறதா என்று கவனித்தேன். அவரிடத்தே சிறு சலனமும் இல்லை. இருந்தாலும் அவர் பாதங்களைத் தொட்டு எழுப்ப முற்பட்டேன். அவை சில்லிட்டுப் போயிருந்தன. 

முதியவரை வெளியே ஹாலுக்கு அழைத்து வந்து, "நாம் ஏன் 000 வை அழைக்கக் கூடாது?" என்று கேட்டேன். 

"அது தேவைப்படாது. எனக்கும் தெரியும். இருந்தாலும் இந்தப் பாழும் மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. உள்ளே கொந்தளிக்கும் உணர்ச்சிகளால் எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னால் எதையுமே யோசிக்கக் கூட முடியவில்லை. அதனால் தான் உங்களை அழைத்து வந்தேன். தயவு செய்து மன்னித்து விடுங்கள் " 

"உங்களது பிள்ளைகளின் அலைபேசி எண்கள் இருந்தால் தாருங்கள். நான் அழைத்துத் தகவலைச் சொல்கிறேன்."

"எங்களுக்கு இப்போது பிள்ளைகள் யாரும் கிடையாது. இருந்த ஒரே மகளும் சிறுவயதிலேயே ஜன்னி கண்டு இறந்துவிட்டாள்"

"நண்பர்கள் யாராவது?"

"வில்லியமுக்கு அழைத்து தகவல் சொல்ல முடியுமா. வில்லியம் தாமஸ். எங்களுடைய குடும்ப நண்பர்"

அவர் கொடுத்த எண்ணுக்கு அழைத்துத் தகவலைச் சொன்னேன்.  வில்லியம் தான் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் "ஜீசஸை" அழைத்துக் கொண்டார். தான் 'பெண்டில்கில்'லில் இருந்து வர வேண்டும். எப்படியும் அரை மணி நேரமாவது ஆகும். அதுவரை மார்க்குக்குத் துணையாக இருக்க இயலுமா என்று கேட்டுக் கொண்டார். அவர் அப்படிக் கேட்டிருக்காவிட்டாலும் கூட எப்படி இந்நிலையில் உதவி கேட்டு வந்த முதியவரை தனியே விட்டு வர இயலும்.

வில்லியம் வந்து கொண்டிருக்கும் தகவலைக் கூறி, மார்க்கை சோபாவில் அமரச் செய்தேன். ஹாலோடு இணைந்திருந்த கிச்சனுள் சென்று அவருக்கு ஒரு கிளாசில் தண்ணீர் கொடுத்தேன். வாங்கி இரண்டு மிடறு குடித்தார். எங்கள் இருவருக்கிடையில் மெளனம் இரை விழுங்கிய பாம்பொன்றைப் போல ஜீவித்திருந்தது. சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். அவர் கண்கள் அங்கே தொங்கவிடப் பட்டிருந்த குதிரைப் படத்தின் மீது குத்திட்டிருந்தன.   

"நீங்கள் சிட்னியின் புகழ்பெற்ற 'விட்டோரியா காபி'யைச் சுவைத்திருக்கிறீர்களா? " என்று கேட்டார்.

சில நொடித் தயக்கத்துப் பிறகு, "காபி அதிகம் குடிப்பதில்லை. எப்போதாவது மட்டுமே" என்றேன்.

"விட்டோரியா காபியை சிட்னியில் அறிமுகப் படுத்தியவர்கள் இரண்டு இத்தாலியச் சகோதரர்கள். சிட்னியில் இன்று பார்க்கும் இடமெல்லாம் இருக்கும் காபி கடைகளுக்கு ஒரு வகையில் வித்திட்டவர்கள் அவர்கள் தாம். அவர்களின் ஆரம்பக் காலக் கடையொன்றில் தான் நான் முதன் முதலில் சோஃபியாவைச் சந்தித்தேன். முதல் பார்வையில் ஈர்க்கும் வசீகரம் சோஃபியாவைப் போன்ற சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. நான் வேலை பார்த்த அந்தக் கடையில் அவளும் வேலைக்குச் சேர்ந்தாள். அப்போது நாங்கள் இருவரும் எங்களது இருபதுகளில் இருந்தோம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறிய போலந்து குடும்பம் அவளுடையது. அவளது அப்பா போலந்து இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். எனது மூதாதையர்கள் ஆஸ்திரேலியாவுக்கு தங்க வேட்டைக்காக சீனாவின் சியாமென் பகுதியிலிருந்து வந்தவர்கள். பல்வேறு காரணங்களால் பலரும் ஊருக்குத் திரும்பி விட்டனர். அப்படித் திரும்பாமல் தங்கிவிட்ட ஒரு சில குடும்பங்களில் ஒன்று எங்களுடையது. ஆஸ்திரேலியர்களாக மாறவும் முடியாமல் சீனர்களாகத் திரும்பவும் முடியாமல் தவித்தவர்களின் மிச்சம் நான். 

தூரத்தில் இருந்து அழகிகளை எவ்வளவு வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால் அவர்களையே பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பதைப் போன்ற அவஸ்தை வேறொன்றும் இல்லை. அப்படித்தான் நான் சில காலம் தலையால் நடந்து கொண்டிருந்தேன். 

நல்ல மணமுள்ள காபி போலத்தான் இருந்தது என்னுடைய காதலும், எத்தனை மூடி மறைத்தாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் காட்டிக் கொடுத்து விட்டிருந்தது. அவளும் அதை உணர்ந்திருந்தாள். ஆனால் ஏனோ இருவருமே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அப்போதுதான் 'மெல்பர்ன் கோப்பை' குதிரைப் பந்தயம் வந்தது. கேள்விப் பட்டிருப்பீர்களே. இங்கு மிகவும் பிரசிதம். அப்போட்டி நடக்கும் சில நிமிடங்கள் மொத்த ஆஸ்திரேலியாவும் ஸ்தம்பித்துப் போகும். அதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக 'மழைக் காதலன்' என்ற குதிரையே தொடர் வெற்றி பெற்றிருந்தது. அந்த ஆண்டும் அக்குதிரையே வெற்றி பெறும் என்று திடமாக நம்பினேன். 

ஊரே மாறி மாறி பந்தயம் வைத்துக் கொண்டிருந்த போதுதான் நானும் சோபியாவும் எங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டோம். மழைக் காதலன் வெற்றி பெற்றால் அதுவரை என்னிடம் பகிர்ந்து கொள்ளாத ரகசியம் ஒன்றை சோஃபியா சொல்லிவிட வேண்டும். ஒரு வேளை அது தோற்றுப் போனால் அதுவரை அவளிடம் பகிர்ந்து கொள்ளாத ரகசியம் ஒன்றை நான் சொல்லிவிட வேண்டும். இதுதான் பந்தயம். 

பந்தயத்தில் மழைக் காதலனும், நானும் தோற்றுப் போனோம். ஆனால், அதையே சாக்காக வைத்து அவளிடம் என் காதலைச் சொல்லிவிட்டேன். பந்தயத்தில் நான் தான் தோற்றேன் என்றாலும், அவள் என்னிடம் அந்த ரகசியத்தைச் சொன்னாள். அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி, விவகாரத்தும் ஆகியிருந்தது. மேலும் அப்போது அவளுக்கு இரண்டு வயது மகளும் இருந்தாள். 

நான் எப்படி அவளை நேசித்தேனோ அதே போல அவளுடைய மகளான, நீல நிறக் கண்களைக் கொண்ட ஹெலினாவையும் நேசிக்க ஆரம்பித்தேன். அடுத்த ஆறாவது மாதத்தில் எங்கள் திருமணம் நடை பெற்றது. எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தபோது ஒரு நாள் எங்கள் மகள் ஹெலினா கொள்ளை நோயொன்று கண்டு இறந்து போனாள். அன்றைக்கு அழுததைப் போல் சோஃபியா என்றுமே அழுததில்லை. அப்போது அவளுக்கு வாக்கு ஒன்று கொடுத்தேன் 'எக்காலத்திலும் அவளைத் தனித்துவிட்டுப் பிரிய மாட்டேன்' என்று. இதோ என் வாக்கைக் காப்பாற்ற வாய்ப்பளித்துப் போய்விட்டாள் புத்தி கெட்டவள். புத்தி கெட்டவள்! பைத்தியக்காரி!  "

இத்தனையும் சொல்லி முடிக்கும் போது எங்கே அழுதுவிடுவாரோ என்று அஞ்சினேன். நல்லவேளை அப்படியொன்றும் நடக்கவில்லை. சிறிது நேரத்தில் வில்லியம் வந்ததும் விடைபெற்றுக் கொண்டேன். 


O


அந்த வாரம் முழுவதும் அத்தனை அலுவலக நெருக்கடிகளுக்கு இடையிலும் என் மனது முழுவதும் மார்க்கும் சோஃபியாவும் ஆக்கிரமித்து இருந்தார்கள். வெள்ளிக் கிழமைதான் அந்த வாரம் முழுக்க எங்குமே முதியவர் மார்க்கைப் பார்க்கவில்லை என்ற உண்மை உறுத்தியது.

தினமும் காலைப் பொழுதில் வெறும் துண்டை மட்டும் தோளில் போட்டவாறே, முட்டியைத் தொடாத டவுசர் அணிந்து கொண்டு, கைகளை நீட்டி முன்புறமும் பின்புறமும் வெயிலுக்குக் காட்டியபடி பால்கனியில் நின்று கொண்டிருப்பார். காவ்யாவைக் கூப்பிட்டு எங்கேனும் கடைகண்ணிக்குச் செல்லும் வழியில் அவளாவது அவரைப் பார்த்தாளா என்று விசாரித்தேன். அவளும் பார்த்திருக்கவில்லை. எனக்கு என்னவோ சரியாகப் படவில்லை. நேராக அவர் வீட்டுக்குச் சென்று பார்த்து விடலாம் என்று முடிவு செய்தேன்.

அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை. நேராக அவரது வீட்டின் கதவைத் தட்டினேன். திறக்கவில்லை. சில பல முறை தட்டல்களுக்குப் பிறகும் கதவு திறக்கப் படாததால் அவர் அங்கு இல்லை என்று யூகித்துக் கொண்டென்.

மறுநாள் காலையிலும் முதல் வேளையாக சென்று அவரது வீட்டுக் கதவைத் தட்டினேன். பதிலில்லை. அன்றைக்கு இருந்த மன நிலையில் வில்லியம்ஸின் அலைபேசி எண்ணைக் கூட வாங்கயிருக்க வில்லை. இருந்திருந்தால் அவரிடமாவது ஒரு வார்த்தை மார்க்கைப் பற்றி விசாரித்திருக்கலாம். 

எப்படி மனதை ஒதுக்கி விட்டாலும், பூமராங் போல மார்க்கிடமே வந்து நின்றது. அன்றைய இரவு தூக்கமே சரியாக இல்லை. மறு நாள் மதியம் கொஞ்ச நேரம் தூங்கிச் சரி செய்து கொண்டேன். தூக்கம் கலைந்து சோபாவில் அமர்ந்து இளையராஜாவை ஒலிக்கவிடத் தேடிக் கொண்டிருந்தபோதுதான் அந்த 'க்ளிங்க் க்ளிங்க்' என்ற ஒலி கேட்டது. மடியிலிருந்த மடிக்கணினியை அப்படியே தரையில் கிடத்திவிட்டு பால்கனிக்கு ஓடினேன்.

அங்கு மார்க் எனக்கு முதுகு காட்டிவாறு அமர்ந்து தேநீரைக் கலக்கிக் கொண்டிருந்தார். அவர் இருக்கிறார் என்பதே எனக்கு அப்போதைக்குப் போதுமாய் இருந்தது. மெதுவாக உள்ளே செல்ல எத்தனித்த போதுதான் கவனித்தேன். அவருக்கு எதிர்ப்புறம் காலியான இருக்கைக்கு முன்பாக ஒரு கோப்பை நிறைய தேநீர் வைக்கப் பட்டிருந்தது. நன்றி : கபாடபுரம் மின்னிதழ் 


Comments

Post a Comment

Popular posts from this blog

புள்ளிக்குப் பதிலாக வட்டம்

மா மரக் கட்டையில் செய்த அறையின் கதவுகள் அதிக சிரமம் தரவில்லை. இழுத்து ஓங்கி அடித்ததில் தாழ்ப்பாளைப் பிணைத்திருந்த அதன் திருகாணிகள் கழன்று கொண்டன. அப்பாவின் வேட்டியினைக் கயிறாகத் திரித்துச் சுருக்கிட்டுத் தொங்கிக்கொண்டிருந்தான். எதிரே இருந்த புகைப்படத்தில் அவன் அப்பா கம்பீரமாக புன்னகைத்துக் கொண்டிருந்தார். அப்புகைப்படம் மாட்டப்பட்ட சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேசையின் மேலே, மருந்துப்புட்டியின் கீழே படபடத்த மருத்துவப் பரிந்துரைச்சீட்டின் ரீங்காரம் அந்த அறையின் அமைதியைக் குலைத்தது. அதன் அருகே ஒரு டயரியும் அதில் சில குறிப்புகளும் இருந்தன.  குறிப்பு 1.  வாழ்வில் ஊறிய கசப்பு முழுவதையும் உள்ளிழுத்துப் புகையாக்கி வெளித்தள்ளிக் கொண்டிருந்தேன். நான் புகைப்பது பற்றி அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். அது குறித்து அவருக்குப் புகார்கள்கூட இருந்திருக்கலாம். ஆனால் தன் வாழ்வின் கடைசிக் கணம் வரை அதைப்பற்றி ஒரு வார்த்தையும் கேட்டுக்கொண்டதில்லை. யாரிடத்தும் தனக்குத் தெரிந்ததாகக்கூட அவர் காட்டிக்கொண்டதில்லை. அவரின் பிள்ளைகளில் அவரிடம் அதிகம் பிணக்கும் சிடுக்கும் கொண்ட பிள்ளையாக நானே இருந்திருக்கிறேன்.  தள்ள

முன் நகரும் காலம்

சூ ரியனை மேகங்கள் மறைத்து நின்றன. வெம்மையும் புழுக்கமும் உள்ளுக்குள் இருந்ததைப் போலவே வெளியேயும் வியாபித்திருந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. வழமை போலவே கிழவிகள் பட்டியக்கல்லில் அமர்ந்து ஊர்க்கதைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளை பள்ளிக்குக் கிளப்பி, கணவனை அலுவலகத்துக்கோ கடைக்கோ அனுப்பிவைத்துவிட்டு குளித்துக் கிளம்பி கோவிலுக்குப் போய்த் திரும்பிக் கொண்டிருந்த பெண்களில் ஒருத்திக்கு அப்படியே மல்லி சித்தியின் சாயல். தலைக்கு குளித்து சடையைப் பின்னாமல் கடைசியில் ஒரு முடிச்சுப் போட்டு இருந்தாள். மேலே சூட்டப்பட்டிருந்த கையகல கனகாம்பரமும் அவளைப் போலவே. ஆறு மாதங்களுக்குப் பின் ஊருக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனாலும் யாரிடமும் முகம் கொடுத்துப் பேசப் பிடிக்கவில்லை. போனமுறை ஊருக்கு வந்திருந்த போது கூட அத்தை வீட்டுக்குப் போயிருக்கவில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு போய் நிற்பது? ஆனால் இந்த முறை அப்படி இருந்துவிட முடியாது. அது முறையுமல்ல. சின்னத்தாயி கிழவிதான் கூப்பிட்டாள். அவளுக்குத்தான் அப்படியொரு கட்டைக் குரல் உண்டு. சிறு வயதில் அவள் வீட்டு முன் இருந்த சிறிய பொட்டலில்தா