Skip to main content

தனித்தலையும் நட்சத்திரம்





சட்டென்று எப்படி ஆரம்பிப்பது? எதிலிருந்து தொடங்குவது? அது இயல்பாக இருக்க வேண்டும். சரியாக திட்டமிட்டுக்கொள்ளாவிட்டால் வார்த்தை தடுமாறி உளறுவதற்கே வாய்ப்பு அதிகம். சின்ன முகச் சுளிப்பொன்று போதும் அவளுக்கு. கண்டுபிடித்துவிடுவாள். பின்னர், காரியம் கெட்டுவிடும். அவளை நான் விசாரிப்பதற்குப் பதில் அவளின் விசாரணைக்கு நான் உட்பட வேண்டியிருக்கும். 

ஆனால், பதில் கண்டுபிடித்தே தீரவேண்டும். ஒரு மாதம் சேகரித்த தகவல்களில் மற்ற எல்லாவற்றையும் புறம் தள்ளினாலும் அந்த ‘ஒரு விசயம்’ உறுத்திக்கொண்டே இருக்கிறது.  சொல்லப்போனால் அச்சமாக இருக்கிறது. வேறு யாரிடமாவது கேட்கலாம் என்றால், வெளியே சொல்ல முடியாது. அத்தனையும் இரகசியம். கொஞ்சம் ஒப்பந்தத்தை மீறினாலும் பெரிய பிரச்சினையில்போய் முடியும். வேலைகூட போய்விட வாய்ப்புண்டு. ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது இப்படியான சிக்கல்களையெல்லாம் கற்பனைகூட செய்துபார்க்கவில்லை. 

ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம் ப்ளூ டூத் ஸ்பீக்கரில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தது. மீரா, ராபர்ட்டோ பொலேனோவின் ‘த ரொமாண்டிக் டாக்ஸ்’ புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அட்டையில் கறுப்பு பூனைப்படம் போட்டிருந்தது. அவள் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலிக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த ஸ்டூலில், பார்ப்பதற்கு ஒரு சிறிய பூனைக்குட்டியைப் போலிருந்த ஸ்பீக்கர் வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் மேலும் இரண்டு புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. புத்தகக் குறிப்பு அட்டைகள் இரண்டு புத்தகங்களிலும் நடுவில் சொருகப்பட்டிருந்தன. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் அவளுக்கு உண்டு. ஹாலுக்கு தமிழ்ப் புத்தகங்கள், டாய்லட்டுக்கு மாத,வார இதழ்கள் என்று வகை பிரிப்பெல்லாம் உள்ளதை கவனித்துக் கண்டறிந்திருக்கிறேன். கேட்டுக்கொண்டதில்லை. ஆனால், அப்படித்தான் என்பது தெரியும்.

அகில் டென்னிஸ் கோச்சிங் போயிருக்கிறான். படிப்பில் சற்று சுணங்கினாலும், விளையாட்டில் படு சுட்டி. அவன் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்த பிறகுதான் நான் அவ்விளையாட்டின் விதிகளை கற்றுக்கொண்டேன். அவனும் நானும் வீடும் முற்றிலுமாக மீராவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுவிட்டோம். அவனுக்காகவே தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டவள், அவன் பற்றிய சின்னச் சின்ன விசயங்ளில் கூட அதீத அக்கறையும், பொறுப்பும் காட்டுபவள். ஆனால், ஏன் அப்படி நடந்துகொள்கிறாள்? அவனை ஏன் அப்படிப் போட்டு அடிக்கிறாள்? எங்கிருந்து அவளில் குடியேறியது இப்படியொரு வன்மம்? நேரில் கொஞ்சமாய் சத்தம்போட்டுத் திட்டிவிட்டு அவன் முகம் சோர்ந்து போயிருந்தால்கூட நாள் முழுவதும் வாடி வதங்கிக் கிடப்பவளால் கனவில் எப்படி இரத்தம் தோயத் தோய அவனை அடிக்க முடிகிறது? 

எப்போதோ ஒரு முறை என்றால்கூட வேறு ஏதேனும் காரணங்களைக் கற்பித்து ஒதுக்கிவிடலாம். கடந்த மூன்று மாதங்களாக அவளுடைய கனவுகளைக் கண்காணித்து வருகிறேன். இந்த ஒரு கனவு மட்டும் அவளுக்குத் திரும்பத் திரும்ப வருகிறது. அதில் எப்போதும் அகில் எங்கள் வீட்டு மாடிப்படியிலிருந்து மெதுவாக இறங்கி வருகிறான். மீரா சோபாவின் மீதமர்ந்து வழமைபோல புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கிறாள். இவன் வந்ததும் பக்கத்திலிருக்கும் பெல்ட்டால் அவனை மாறி மாறி அடிக்கிறாள். அவன் வலி பொறுக்காமல் கைகூப்பி இறைஞ்சுகிறான். அவள் அடித்துக்கொண்டே அழுகிறாள். இக்கனவுகளில் வரும் ஒரே மாறுதல் அவள் அவனை அடிக்கப் பயன்படுத்தும் ஆயுதங்கள் மட்டுமே. சிலமுறை கைத்தடி. சிலமுறை சாட்டை போன்ற வஸ்து. ஆனால், அவள் கண்களில் மினுக்கும் ஆத்திரமும் கோபத்தில் சுருங்கும் முகமும் துளியும் மாறுவதில்லை.

கோபத்தால் விகாரமடையும் அவளுடைய அந்த முகத்தை எங்கள் திருமண வாழ்வின் ஆரம்பக் காலகட்டத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் பெரும்பாலும் சின்னச் சின்ன புரிதற்குறைகளால் ஏற்படும் மனச்சங்கடங்கள். அற்ப விசயங்களில் துளிர்க்கும் சண்டைகள். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மாறியது. அதுவும் அகில் பிறந்ததும் இன்னும் குறைந்தது. அவனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது ஒரு நாள் நாங்கள் சண்டை போட்டதைப் பார்த்துக் கதறி அழுதான். அழுதழுது வாந்தி எடுத்தான். அன்றிலிருந்து அவன் முன் நாங்கள் சண்டையிடுதை முற்றிலும் நிறுத்திக்கொண்டோம். அதன் பிறகு அவளுடைய அந்த முகத்தை இக்கனவுகளில்தான் காண்கிறேன். எவன் பொருட்டு எல்லாம் நின்றுபோனதோ அவன் மீதே அவையத்தனையும் வெளிப்படுவதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், அதே நேரத்தில் நேரில் அவளிடத்தில் வன்மத்தின் நிழலைக்கூட காண முடிவதில்லை. 

என்றாவது ஒரு நாள் அவளறியாமல் அவளின் கனவுகளைக் கண்காணித்து வரும் உண்மை தெரிந்தால் அந்த நிழல் முகத்தின் நிஜச் சுவடுகளைக் காண நேரிடலாம். ஆரம்பத்தில் விளையாட்டும் குறுகுறுப்பும் இருந்ததென்னவோ உண்மைதான். மெது மெதுவாகத்தான் நான் இறங்கியிருந்த காரியத்தின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. இப்போது, பாதியில் நிறுத்த முடியாது. இத்திட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுவிட்டு, நானே அதிலிருந்து விலகினால் சரியாக இருக்காது. அதுவும் எங்கள் நிறுவனத்தின் மிக முக்கியமான செயல்திட்டம். இது மட்டும் வெற்றிபெற்றால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும். இதுவரையில் கிடைக்கும் தகவல்களைத் திரட்டித் தொகுக்கும் நிறுவனமாக மட்டுமே எங்களது பார்க்கப்படுகிறது. இதோடு செயற்கை நுண்ணறிவும், சில மருத்துவத் தொழில்நுட்பங்களும் சேரும்போது ஒரு மாயாஜாலமே நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதை நிரூபிக்கப் போகிறோம். ‘மாயா பஜார்’ போன்ற பழைய கறுப்பு வெள்ளை மந்திர தந்திரப் படங்களில் வருமே உள்ளத்தைக் காட்டும் ஓர் அபூர்வக் கண்ணாடி! கிட்டத்தட்ட அதைத்தான் கொண்டுவரப் போகிறோம்.

உறக்கத்தின் பல்வேறு படிநிலைகளில் ஒருவர் உடலில் நடக்கும் பல வேதியல் மாற்றங்கள், நரம்பு மண்டலங்களில் பரிமாறப்படும் செய்திகள் இவற்றைக்கொண்டு அவர் கண்ட கனவை நாங்கள் திரும்ப நிகழ்த்துகிறோம். அக்கனவின் வழியே அவரின் ஆழ் மன விருப்பங்களைக் கண்டறிந்து அவற்றுக்கு உரியவற்றை அவருக்குச் சந்தைப்படுத்துவதே எங்களின் பிரதான நோக்கம். இதன் வழியே, விளம்பர நிறுவனங்களுக்குத் தேவையான வியாபார நுணுக்கங்களை அறியத் தருவதே முதலில் எங்களின் குறிக்கோளாக இருந்தது. ஆனால், உள்ளே இறங்கிய பிறகுதான் இங்கு அதைவிட மிகப்பெரியதொரு வாய்ப்பு இருப்பதைக் கண்டுகொண்டோம். 

ஒரு தனி மனிதனின் கனவுகளில் அவனின் தனிப்பட்ட ஆழ்மனப் பதிவுகளைவிட ஒரு சமூகத்தின் கூட்டு நனவிலி ஒன்றும் கூடவே செயல்படுவதைக் கண்டுகொண்டோம். அதன் வழியே ஒட்டுமொட்ட சமூகத்தின் போக்கையே அறிந்துகொள்ள முடிகிறது. சமூக ஊடகங்கள், டி.வி. நிகழ்ச்சிகள் என்று பல வகையிலும் விமர்சிக்கப்பட்ட ஒரு சம்பவம், உண்மையில் தனி மனிதனின் ஆழ்மனதில் எப்படிப் போய்ச் சேர்கிறது. அது ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படிப் பாதிக்கிறது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? அவற்றின் சாதக பாதகங்கள் யார் யாருக்கு என்று பல்வேறு விசயங்களை கனவுகளின் சமன்பாட்டின் வழியேக் கண்டறிய முடியும். இதற்கு தேவைப்படுவதெல்லாம் ஒரே ஒரு ஸ்மார்ட் வாட்ச். அதில் எங்களின் மென்பொருளை உள்ளேற்றிவிட்டால் மற்றவற்றை அது பார்த்துக்கொள்ளும். 

இதன் ஒரு பகுதியாகத்தான், இத்திட்டக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களுக்கு நெருக்கமான ஒருவரின் கனவுகளைத் தொடர்ந்து பதிவு செய்து ஆராய்வது என்று முடிவானது. அதையும் சார்ந்தவர்கள் அறியாமல் செய்ய வேண்டும். ஏனெனில், தான் கண்காணிக்கப்படுவதை உணர்ந்தால் அவர்களின் உண்மையான ஆழ்மனம் வெளிப்படாமலே போகக்கூடும். 

முதலில் இதை மீராவின் மீது செயல்படுத்திப் பார்த்தபோது, இதுவரை யாருக்குமே வெளிப்படுத்தப்படாத மீராவின் ரகசியப் பக்கங்களின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியது. வேலை, சோதனை, வெற்றி என்பதையெல்லாம் தாண்டி இது கொடுத்த கிளர்ச்சி அபரீதமானதாக இருந்தது. 

அவளுடைய சுவராஸ்யமான கனவொன்று உண்டு. கொத்துக் கொத்தாய் நட்சத்திரங்கள் குவிந்து கிடக்கும் பால்வீதியில் அவள் இலக்கில்லாமல் பயணிக்கிறாள். மொத்த பிரபஞ்சத்துக்கும் வெளியே சென்று பார்த்துவிடுவது போன்ற ஆர்வத்தில் பறக்கிறாள். இரவுப் போர்வையில் சிதறிக்கிடக்கும் நட்சத்திர முத்துக்களை தன் வயிற்றுப் பிள்ளைகளைப் போல் பாவிக்கிறாள். தொடுகிறாள். அன்பாய்த் தடவுகிறாள். ஒவ்வொன்றாய் எடுத்து மடியில் ஏந்தி முத்தமிட்டு முத்தமிட்டு மறுபடியும் அவற்றை மிதக்க விடுகிறாள். 

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் திருமணமான புதிதில் தமிழக கேரள எல்லையில் இருக்கும் வாகைமானுக்குச் சென்றிருந்தோம். இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டின் உள்ளேயே மெதுநடைக்குக் கிளம்பினோம். மதியம் நன்கு மழைபெய்து வெறித்திருந்ததால் குளிர் அவ்வளவாக இல்லை. வானமும் மேகமின்றி தெளிவாக இருந்தது. நிலவுகூட இல்லை. அதனால் நட்சத்திரக்கூட்டங்கள் துல்லியமாகத் தெரிந்தன.

வழியில் இருந்த ஒரு பலகையில் உட்கார்ந்தபடி மீரா அந்த நட்சத்திரங்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளே சொல்லட்டும் என்று நான் காத்துக்கொண்டிருந்தேன்.

“நித்தில், உனக்கு நட்சத்திரங்கள் பத்தின கதை தெரியுமா?”

“எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நிலாவில் பாட்டி வடை சுட்ட கதைதான்.”

“நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போது எங்க அப்பா எனக்கு நட்சத்திரங்கள் பத்தின கதை ஒண்ணு சொல்லிருக்கார். நமக்குப் பிடிச்சவங்க யாராவது கடவுள்கிட்ட போயிட்டா, கடவுள் அவங்களை நமக்காக ஒரு நட்சத்திரமா மாத்தி வானத்தில வச்சுருவாராம். அந்த நட்சத்திரம் எப்பவும் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சவங்களுக்கு மட்டும் கண்ணுக்குத் தெரியுமாம். இப்போ எனக்கு எங்க அப்பா ஒரு நட்சத்திரமா இருக்கிறது தெரியுது.” இதைச் சொல்லிவிட்டு வானத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். 

இதுவே மற்றொரு நாளாக வேறொரு இடமாக இருந்திருந்தால் நான் அவளை காலாகாலத்துக்கும் கிண்டல் செய்து நோகடித்திருப்பேன். அன்று, அப்படியொரு இரவில் அவள் கண்களில் தேங்கி ஒளிர்ந்த நீரைக் கண்ட பிறகு அப்படிச் செய்யத் தோன்றவில்லை. எங்களுக்கும் அன்றைக்குப் பிறகு அப்படியானதொரு இரவு வாய்க்கவும் இல்லை. 

இப்படியாக திரும்பத் திரும்ப வரும் கனவுகளை அதற்குத் தொடர்புடைய நிகழ்வொன்றின் வழியெ அர்த்தப்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால், அவள் அகிலிடம் வெளிப்படுத்தும் மூர்க்கமும், கோபமும், இரத்தம் பார்க்கும் வெறியும்தான் புரிந்துகொள்ள முடியாதவொன்றாக கிடந்து படுத்தியது.

அவளிருந்த அறைக்குள் நுழைந்ததை முதலில் அவள் பொருட்படுத்தவில்லை. ஹாலுக்கு வந்தேன். எதையாவது பேசிக் கிளறி விசயங்களைப் பெற வேண்டும். மறுபடியும் அவள் அறைக்குள் நுழைந்தேன்.

“ஏம்ப்பா.. ஏதாவது தேடிக்கிட்டு இருக்கியா?” 

“இல்ல மீரா.. ஒண்ணுமில்ல. சும்மாதான்”

ஸ்பீக்கரில் ஒலியை நிறுத்தி வைத்தவள், “டீ போடணுமா?” 

“இல்லயில்ல.. அதெல்லாம் வேண்டாம்.” என்றேன். என் முகத்தை ஒருமுறை உற்றுப் பார்த்தவள், தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கவிழ்த்தி வைத்துவிட்டு, போனில் நேரம் பார்த்தாள்.

மெதுவான குரலில் தயங்கியபடி, “அகில் வர்ற நேரமாச்சு.. ப்ளீஸ் இப்போ வேணாமே” என்றாள்.

“அய்யோ மீரா.. சத்தியமா நான் அதுக்கு வரல. சும்மா பேசலாம்ன்னுதான் வந்தேன்.” 

ஒலித்துக்கொண்டிருந்த இசையை இப்போது முற்றிலுமாய் நிறுத்தினாள். கவிழ்த்தியிருந்த புத்தகத்தில் குறிப்பட்டையைச் சொருகி மூடி வைத்தாள். 

“அகில் அடுத்து நைன்த் போறான் இல்லியா?”

“இல்லை எய்த்”

“ஓ ஸாரி.. எய்த். எய்த். அகில் குட்டிய அடுத்த வருசத்திலேருந்து போர்டிங் ஸ்கூல் போடலாமா? என் ஃப்ரெண்டோட பையன் படிக்கிறான். ரொம்ப நல்லா இருக்காம். நீ என்ன சொல்ற?”

“நோ வே நித்தில்.. நோ வே.. இருக்கிறது ஒரே ஒரு பையன். அவனையும் போர்டிங்ல போட்டு நாம ரெண்டு பேரும் நடு வீட்டுல விட்டத்தப் பார்த்து உட்கார்ந்திருப்போமா? ஏன் திடீர்ன்னு இப்படியெல்லாம் உனக்கு யோசனை வருது. அவன் நம்ம கண்ணு முன்னாடியே இருக்கட்டும். அங்க என்ன சொல்லித் தருவாங்களோ அதை நான் இங்கேயே அவனுக்கு சொல்லித்தறேன். ப்ளீஸ் இதைப் பத்தி எங்கிட்ட அடுத்து எதுவுமே பேச வேண்டாம். ப்ளீஸ்”

அவளை சமனப்படுத்திவிட்டு ஹாலுக்கு வந்தேன். அவள் பேச்சில் சிறு இடறல் இல்லை. சந்தேகிக்கவே முடியாத உண்மையான அன்பு அவளுடையது. எனக்குத்தான் மண்டை பிளந்துகொண்டு வந்தது.

சிக்கலான விடை கண்டறியாத விசயங்களை  மனதின் ஓரத்தில் போட்டுவிட்டு அப்படியே விட்டுவிட வேண்டும். தக்க நேரம் வரும்போது தன்னாலே விடை கிடைக்கும். எனவே அவளுடைய கனவையும் அப்படி ஓரத்தில் போட்டு வைத்திருந்தேன்.

மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஒரு நாள் அகில் சிறுவர்களுக்கான மாநில அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தான். மீரா உற்சாகமாகியிருந்தாள். பெரிய ஆர்வமில்லை என்றாலும் அவர்கள் இருவரின் சந்தோசம் என்னையும் பற்றிக்கொண்டது. அன்றிரவு இரவு உணவுக்கு ஓட்டலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். 

உணவு மேசையில் ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருக்கும்போது பள்ளிக்கால நண்பனிடமிருந்து வாட்ஸப்பில் குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. அகில் டென்னிஸ் உடையில் கையில் ராக்கெட்டுடன் இருக்கும் புகைப்படத்தை என்னுடைய ஸ்டேட்டஸாக வைத்திருந்தேன். அதற்குத்தான் அவன் பதில் அனுப்பியிருந்தான்.

“இது அகில் இல்லை. என்னுடன் எட்டாம் வகுப்பு படித்த நித்திலன்தான். அப்படியே இருக்கிறான்!” என்று அனுப்பியிருந்தான். 

ஒரே வரியில் எனக்கு எல்லாம் விளங்கியது. எங்களின் பன்னிரெண்டு வருடத் திருமண வாழ்வும் அடுத்த பத்து நிமிடங்களில் கண்முன்னே காட்சி காட்சியாக விரிந்தது. அவ்விடத்திலிருந்து முற்றிலும் துண்டித்துப் போயிருந்தேன். 

ஒரே ஒரு உண்மை மட்டும் புரிந்தது. ஒரு வேளை மீராவுக்கு முன்னால் நான் இறக்க நேரிட்டால் அவள் கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரமாய் தனித்து அலைந்துகொண்டிருப்பேன். 


O


நன்றி : காலச்சுவடு 

ஓவியம் : பூண்டி ஜெயராஜ் 

Comments

Popular posts from this blog

மிருகம்

    அதிகாலையில் வரும்  வாட்ஸப்   குறுஞ்செய்திகளின்   கீச்சிடல்கள்   எரிச்ச லை க் கிளப்பத்   தொடங்கியிருந்தன . அவை  எதைப்   பற்றியதாக  இருக்கும் என்று  லஸண்ட்ராவுக்குத்  தெரியும்.  அப்பார்ட்மண்ட்டின்   அசோஸியேஸன் குழுமத்திற் கென்றே   தனியாகப்  பிரித்து  எலி   சத்தமிடுவதைப்   போல க்   கீச்சிடு ம் ஒலியைத்  தேர்ந்தெடுத்து  வைத்திருந்தாள்.    காலை யி லேயே   அதைப்  பார் த்து அன்றைய  தினத்தைக்   கெடுத்துக்கொள்ள வேண்டாம்  என்று முடிவு  செய் தவளாக ,   படுக்கை யை  உதறி  எழுந்தாள் . வானம்  மேகமூட்டமாயிருந்தது .  இரவில்  வரைந்து வைத்திருந்த  அக்ரலிக்  ஓவியத்தைப் பார்த்தாள்.  கருப்பு ,  மஞ்சள் ,  சாம்பல்  வண்ணங்களில்   தீட்டப்பட்ட   அரூப உருவங்க ள் பின் இருக்க ,  முன்னே  மரத்தாலான   ஒரு  பழைய   நாற்காலியை வரைந்து வைத்திருந்தாள்.  அது  ஒருவிதமான ...

திற - சாதத் ஹசன் மண்ட்டோ

அ ந்தச் சிறப்பு ரயில் அம்ரிஷ்டரிலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டு, எட்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு முகல்புராவை அடைந்தது. பயணிகளில் பலர் வழியிலேயே கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். இன்னும் சிலர் தொலைந்து போயினர். மறுநாள் காலை சிராஜூதின் கண் விழித்து பார்த்த பொழுது, தான் அகதிகள் முகாமின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பதை உணர்ந்தார். அவரைச் சுற்றி, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அடங்கிய ஒரு கூட்டம் குமுறிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் கண்டு பதற்றமடைந்த அவர் தூசு நிரம்பிய வானத்தை வெகு நேரமாக  வெறித்துக் கொண்டிருந்தார். அந்த முகாமெங்கும் ஒரே சத்தமாக இருந்தது. ஆனால் எதுவும் சிராஜூதினின் காதில் விழவில்லை. இவரைப் பார்த்த யாரும், ஏதோ ஆழ்ந்த துயரச் சிந்தனையில் இருக்கிறார் என்று யூகித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர் மனது வெறுமையாய் இருந்தது. சூரியன் கண்ணில் படும் வரையிலும் அவர் அந்த தூசு நிறைந்த வானத்தையே உற்று நோக்கியபடி இருந்தார். சூரியனின் வெப்பம் அவரின் ஒவ்வொரு நரம்பிலும் பாய்ந்தது. ஏதோ ஒரு துடிப்பில் எழுந்தார். அந்த துர்சம்பவக் காட்சி அவர் கண் முன்னே எழுந்தது - தீ...

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய...