அன்றுதான் ஷிஃப்ட் மாறியிருந்தது. முதல் நாள் பகலிரவு முடித்துவிட்டு உடனடியாக மறுநாள் அதிகாலை ஷிஃப்ட் எடுக்க வேண்டும். ஒரே ஷிஃப்ட் மூன்று மாதங்களுக்கோ, குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கோ தொடர்ந்தால்கூட சற்று பரவாயில்லாமலிருக்கும். வாரத்துக்கு ஒரு முறை மாறுவதும் ஆட்பற்றாக்குறையின் பொருட்டு ஒருவர் வராது போனாலும் அதையும் சேர்த்து எடுத்துப் பார்ப்பதும் உடலின் இயங்குவிதிகளுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம். ஆனால், வேறு வழியில்லை. பிழைப்பு இப்படி. ஷிஃப்ட் மாற்றத்தால் அதிகாலை சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டும் என்ற பரபரப்பிலேயே தூக்கம் சரியாககூடவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டு ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பித்தேன். கவனத்தை எண்களில், அவற்றின் வளைந்து நெளிந்த வடிவங்களில் குவிப்பதன் மூலம் சலனத்தைக் கட்டுப்படுத்தித் தூக்கத்தை வரவழைக்கும் உத்தி. பெரும்பாலான சமயங்களில் சரியாகவே வேலை செய்யும். சில நேரங்களில் ஆயிரங்களைத் தாண்டி எண்ணிக்கை மட்டும் ஓடிக்கொண்டிருக்கும். அன்று, அது சரியாக ஒத்துழைக்க, அப்போதுதான் சற்று கண்ணயர்ந்திருப்பேன். அழைப்பு மணி அடித்தது. பக்கத்திலிருந்த புவனாவை முழங்கையால் மெதுவாக இடித்தேன்.
சட்டென்று எப்படி ஆரம்பிப்பது? எதிலிருந்து தொடங்குவது? அது இயல்பாக இருக்க வேண்டும். சரியாக திட்டமிட்டுக்கொள்ளாவிட்டால் வார்த்தை தடுமாறி உளறுவதற்கே வாய்ப்பு அதிகம். சின்ன முகச் சுளிப்பொன்று போதும் அவளுக்கு. கண்டுபிடித்துவிடுவாள். பின்னர், காரியம் கெட்டுவிடும். அவளை நான் விசாரிப்பதற்குப் பதில் அவளின் விசாரணைக்கு நான் உட்பட வேண்டியிருக்கும். ஆனால், பதில் கண்டுபிடித்தே தீரவேண்டும். ஒரு மாதம் சேகரித்த தகவல்களில் மற்ற எல்லாவற்றையும் புறம் தள்ளினாலும் அந்த ‘ஒரு விசயம்’ உறுத்திக்கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் அச்சமாக இருக்கிறது. வேறு யாரிடமாவது கேட்கலாம் என்றால், வெளியே சொல்ல முடியாது. அத்தனையும் இரகசியம். கொஞ்சம் ஒப்பந்தத்தை மீறினாலும் பெரிய பிரச்சினையில்போய் முடியும். வேலைகூட போய்விட வாய்ப்புண்டு. ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது இப்படியான சிக்கல்களையெல்லாம் கற்பனைகூட செய்துபார்க்கவில்லை. ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம் ப்ளூ டூத் ஸ்பீக்கரில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தது. மீரா, ராபர்ட்டோ பொலேனோவின் ‘த ரொமாண்டிக் டாக்ஸ்’ புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அட்டையில் கறுப்ப