மு ன்பு காலச்சுவடு இதழில், கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக் எழுதி வெளியாகியிருந்த "நிர்வாணம்" சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்லதொரு கதையை வாசிக்கும் போதே அதனை எழுதியவரின் பெயரும் தன்னாலே மனதில் வந்து விழுந்து விடுகிறது. அப்படியாக அவருடைய சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருந்த போது ஜெயமோகன் தளத்தில் அவரே மொழிப்பெயர்த்திருந்த விவேக்கின் சிறுகதைகள் சில வாசிக்கக் கிடைத்தன. இன்னும் கிடை க்கின்றன. இதன் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடாக விவேக் ஷான்பாக் எழுதிய "காச்சர் கோச்சர்" நாவலை வாங்கினேன். இதை மொழிப் பெயர்த்தவர் கே.நல்லதம்பி. எழுதப்பட்ட மொழியிலேயே வாசிப்பதைப் போன்ற உணர்வைத் தரும், சற்றும் தொய்வில்லாத கச்சிதமான மொழிப்பெயர்ப்பு. பெங்களூருவைக் களமாக வைத்து எழுதப்பட்ட நாவல் என்று இதன் பின்னட்டைக் குறிப்பில் கன்னட எழுத்தாளர் கிரீஷ் கார்னட் எழுதியிருக்கிறார். ஆனால், நாவலில் பெங்களூரு என்று வரும் இடத்தில் எல்லாம் சென்னை என்றோ மதுரை என்றோ குறிப்படப்பட்டிருந்தாலும் சின்ன நெருடல் கூட ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை. வறுமையின் விள...