Skip to main content

"காச்சர் கோச்சர்" - விவேக் ஷான்பாக் (காலச்சுவடு வெளியீடு, மொழிப்பெயர்ப்பு - கே. நல்லதம்பி)



முன்பு காலச்சுவடு இதழில், கன்னட எழுத்தாளர் விவேக் ஷான்பாக் எழுதி வெளியாகியிருந்த "நிர்வாணம்" சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்லதொரு கதையை வாசிக்கும் போதே அதனை எழுதியவரின் பெயரும் தன்னாலே மனதில் வந்து விழுந்து விடுகிறது. அப்படியாக அவருடைய சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருந்த போது ஜெயமோகன் தளத்தில் அவரே மொழிப்பெயர்த்திருந்த விவேக்கின் சிறுகதைகள் சில வாசிக்கக் கிடைத்தன. இன்னும் கிடைக்கின்றன.

இதன் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடாக விவேக் ஷான்பாக் எழுதிய "காச்சர் கோச்சர்" நாவலை வாங்கினேன். இதை மொழிப் பெயர்த்தவர் கே.நல்லதம்பி. எழுதப்பட்ட மொழியிலேயே வாசிப்பதைப் போன்ற உணர்வைத் தரும், சற்றும் தொய்வில்லாத கச்சிதமான மொழிப்பெயர்ப்பு.

பெங்களூருவைக் களமாக வைத்து எழுதப்பட்ட நாவல் என்று இதன் பின்னட்டைக் குறிப்பில் கன்னட எழுத்தாளர் கிரீஷ் கார்னட் எழுதியிருக்கிறார். ஆனால், நாவலில் பெங்களூரு என்று வரும் இடத்தில் எல்லாம் சென்னை என்றோ மதுரை என்றோ குறிப்படப்பட்டிருந்தாலும் சின்ன நெருடல் கூட ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை.

வறுமையின் விளிம்பில் உழலும் கீழ் மத்திய வர்க்கத்தையும், அவர்களின் மன நிலையையும், பின் அவர்கள் மெதுவாக உழைத்து முன்னேறி அடுத்த கட்டத்துக்கு நகரும் போது அவர்களிடம் ஏற்படும் லெளகீக மற்றும் மனோபாவ மாற்றங்களையும் "சுருக்"கென்ற அதிர்வைத் தரும் ஒரு முடிவுடன் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

இதில் ஓச்ர் இடத்தில், கதை சொல்லியின் அப்பா வேலையை இழந்துவிடுவார். வீடே அமைதியிலும் ஒருவித அழுத்தத்திலும் உறைந்து போயிருக்கும். பொதுவாக அதிகம் உரையாடாத அப்பா வேலை போன அன்று எதையாவது பேசுவது, தேவையற்ற கேள்விகளைக் கேட்பது என்று வலிந்து திணிக்கப்பட்ட உற்சாகத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வார். மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகும் நேரங்களில் கலகலப்பாய் இருப்பவர்கள் அமைதியாவதைப் போல அமைதியானவர்கள் சமநிலை தவறிவிடுகிறார்கள். அது முன்னதைவிட இன்னும் கொடுமையானது.

இப்படியாக நாவல் நெடுக வரும் நுட்பமான சித்தரிப்புகளும், அதன் மூலம் விவேக் முன் வைக்க விரும்பும் அபத்தங்களுமே இந்நாவலை முக்கியமான இடத்திற்கு நகர்த்துகின்றன.
அளவில் மிகச்சிறிய நாவல். நூறே பக்கங்கள். ஒரே அமர்வில் வாசித்துவிடலாம். நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.




O

Comments

Popular posts from this blog

இரு கோப்பைகள்

ஞா யிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தேன்.  முதலில் அந்தச் சத்தம் பக்கத்து வீடுகளில் யாரோ மெதுவாக சுவரில் ஆணியடிப்பதைப் போன்று கேட்டது. அடுத்த முறை அந்தச் சத்தம் நொய்டாவின் தெருவோர தேநீர்க் கடைகளில் சூடான தேநீருக்கு இஞ்சியைத் தட்டிப் போடுவதற்காக தட்டுவதைப் போன்று 'தொப் தொப்'பென்று கேட்டது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை இரவு பதினோறு மணிக்கு இவை இரண்டுமே சாத்தியமில்லை. அதுவும் இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரடங்கிப் போய்விடுகின்ற, பொதுப் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட அடுத்தவர்களுக்கு கேட்டுவிடாத கிசுகிசுக் குரலில் பேசும் மக்கள் வாழ்கின்ற சிட்னி போன்ற ஒரு பெரு நகரத்தில்  சுவர் ஆணிக்கோ, இரவுத் தேநீருக்கோ இந்நேரத்தில் வாய்ப்பு மிகவும் குறைவு.  "யாரோ கதவத் தட்டுற மாதிரியில்ல" என்று பக்கத்தில் படுத்திருந்த காவ்யா கேட்கும் போதுதான் அதை உணர்ந்தேன். எங்கள் ...

மிருகம்

    அதிகாலையில் வரும்  வாட்ஸப்   குறுஞ்செய்திகளின்   கீச்சிடல்கள்   எரிச்ச லை க் கிளப்பத்   தொடங்கியிருந்தன . அவை  எதைப்   பற்றியதாக  இருக்கும் என்று  லஸண்ட்ராவுக்குத்  தெரியும்.  அப்பார்ட்மண்ட்டின்   அசோஸியேஸன் குழுமத்திற் கென்றே   தனியாகப்  பிரித்து  எலி   சத்தமிடுவதைப்   போல க்   கீச்சிடு ம் ஒலியைத்  தேர்ந்தெடுத்து  வைத்திருந்தாள்.    காலை யி லேயே   அதைப்  பார் த்து அன்றைய  தினத்தைக்   கெடுத்துக்கொள்ள வேண்டாம்  என்று முடிவு  செய் தவளாக ,   படுக்கை யை  உதறி  எழுந்தாள் . வானம்  மேகமூட்டமாயிருந்தது .  இரவில்  வரைந்து வைத்திருந்த  அக்ரலிக்  ஓவியத்தைப் பார்த்தாள்.  கருப்பு ,  மஞ்சள் ,  சாம்பல்  வண்ணங்களில்   தீட்டப்பட்ட   அரூப உருவங்க ள் பின் இருக்க ,  முன்னே  மரத்தாலான   ஒரு  பழைய   நாற்காலியை வரைந்து வைத்திருந்தாள்.  அது  ஒருவிதமான ...

பெயரெச்சம்

அன்றுதான் ஷிஃப்ட் மாறியிருந்தது. முதல் நாள் பகலிரவு முடித்துவிட்டு உடனடியாக மறுநாள் அதிகாலை ஷிஃப்ட் எடுக்க வேண்டும். ஒரே ஷிஃப்ட் மூன்று மாதங்களுக்கோ, குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கோ தொடர்ந்தால்கூட சற்று பரவாயில்லாமலிருக்கும். வாரத்துக்கு ஒரு முறை மாறுவதும் ஆட்பற்றாக்குறையின் பொருட்டு ஒருவர் வராது போனாலும் அதையும் சேர்த்து எடுத்துப் பார்ப்பதும் உடலின் இயங்குவிதிகளுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம். ஆனால், வேறு வழியில்லை. பிழைப்பு இப்படி. ஷிஃப்ட் மாற்றத்தால் அதிகாலை சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டும் என்ற பரபரப்பிலேயே தூக்கம் சரியாககூடவில்லை.  கண்களை இறுக மூடிக்கொண்டு ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பித்தேன். கவனத்தை எண்களில், அவற்றின் வளைந்து நெளிந்த வடிவங்களில் குவிப்பதன் மூலம் சலனத்தைக் கட்டுப்படுத்தித் தூக்கத்தை வரவழைக்கும் உத்தி. பெரும்பாலான சமயங்களில் சரியாகவே வேலை செய்யும். சில நேரங்களில் ஆயிரங்களைத் தாண்டி எண்ணிக்கை மட்டும் ஓடிக்கொண்டிருக்கும். அன்று, அது சரியாக ஒத்துழைக்க, அப்போதுதான் சற்று கண்ணயர்ந்திருப்பேன். அழைப்பு மணி அடித்தது. பக்கத்திலிருந்த புவனாவை முழங்கையால் மெதுவாக இடித்தேன்...