Skip to main content

பட்டினிக் கலைஞன் - ஃப்ரன்ஸ் காஃப்கா



டைவெளி சிற்றிதழின் ஆசிரியக்குழு கூட்டத்தில் பட்டினிக் கலைஞன் கதை பற்றி நடந்த விவாதத்தை கீழே ஒரு குறுங்கட்டுரையாகத் தொகுத்திருக்கிறேன்.

அவன் ஒரு பட்டினிக் கலைஞன். அவனால் நீண்ட நாட்களுக்கு ஒரு கவளம் கூட சாப்பிடாமல் இருக்கவியலும். இந்தக் கலையை பொதுமக்களுக்கு முன்னால் நிகழ்த்திக்காட்டி பிழைத்து வருகிறான். ஒரு காலத்தில் ஐரோப்பிய நகரங்கள் எங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தக் கலை நாளடைவில் மக்களிடத்தே செல்வாக்கை இழக்க ஆரம்பிக்கிறது. முன்பு போல கூட்டம் வருவதில்லை. அதன் பொருட்டு அவன் சார்ந்திருக்கும் நிறுவனத்திலிருந்து விலகி சர்க்கஸ் ஒன்றில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அங்கு குதிரைகள் கட்டிப் போடும் இடத்திற்கு அருகே அவனுக்கு ஒரு கூண்டு ஒதுக்கப்படுகிறது. அங்கும் அவனுக்கு பெரிய கவனமில்லை. குதிரைகளைப் பார்க்க வருபவர்கள் ஒன்றிரண்டு பேர் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவார்கள். ஆனாலும் தொடர்ந்து அவன் தன் பட்டினிக் கலையை நிகழ்த்துகிறான். ஒரு கட்டத்தில் உணவே எடுத்துக் காட்டாமல் அந்தக் கூண்டில் அவன் அமர்ந்திருக்கும் வைக்கோலுடன் வைக்கோலாகப் பொதிந்து இறந்தும் போகிறான். பின்பு, அதே இடத்தில் ஒரு இளம் சிறுத்தையை விடுகிறார்கள். அங்கே மக்கள் கூட்டம் குவிகிறது. இப்படியாக முடிகிறது கதை.

அதிகம் கொண்டாடப்பட்ட காஃப்காவின் கதைகளுள் முக்கியமான கதை இது. இந்தக் கதை முழுவதும் ஒரு பார்வையாளனின் கோணத்தில், செய்தி அறிக்கையின் மொழியில் சொல்லபட்டிருக்கிறது. கதையில் பட்டினிக் கலைஞன் என்றே சொல்லப்பட்டிருந்தாலும், கிடைக்கப்பெற வேண்டிய உரிய கவனத்தைப் பெறாமல் வெதும்பும் அத்தனை கலைஞர்களின் கதையையுமே இது பேசுகிறது.

இந்தக் கதையை அசோகமித்திரன் எழுதிய 'புலிக் கலைஞனுடன்' பொருத்திப் பார்க்கலாம். இவன் பட்டினிக் கலைஞன். அவன் புலிக் கலைஞன். இருவரும் அவரவர் கலையில் விற்பன்னர்கள். இவன் தன் பட்டினிக் கலைக்கு போதிய வரவேற்பில்லாமல் சர்கஸ்ஸில் சேருகிறான். அவன் புலிவேசக் கலைக்கு மக்களிடம் வரவேற்பில்லாமல் சினிமாக் கம்பெனியில் வாய்ப்பு தேடி வருகிறான். இருவருமே தற்தம் கலையின் அழிவுக்கு ஒருவகையில் காரணமாக இருந்த மற்றொரு நிறுவனத்தினிடமே வந்து சேர்கிறார்கள். (காஃப்கா நிறுவன அமைப்புகளுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது ) கடைசியில் அங்கும் தன்னைப் பொருத்திக் கொள்ளவியலாமல் ஒருவன் தொலைந்து போகிறான். மற்றொருவன் இறந்தே போகிறான். இந்தக் கதையில் அவன் இறந்ததும், அவனிடத்தில் வந்து அவனுக்கு கிடைக்காத அனைவரின் கவனத்தையும் தன்னிடத்தில் ஈர்க்கும் இளம் சிறுத்தை ஒரு முக்கியமான உருவகம். சினிமாவென்னும் மாபெரும் வெளிச்சத்தின் முன்பு கரைந்து போகும் புலிக்கலைஞன் போலவே இக்கதையில் வரும் சிறுத்தை அவனிருந்த சுவட்டைக் கூட முற்றிலும் அழித்துவிடுகிறது. ஒரு வேளை அசோகமித்திரன் இந்தக் கதைக்கு பட்டினிக் கலைஞன்தான் இன்ஸ்பிரேஸனாக இருந்திருக்குமோ? தெரியவில்லை. அப்படியே ஒரு வேளை இருந்திருந்தாலும் கூட அதனதன் அளவில் இரண்டு கதைகளுமே மிக மிக முக்கியமான கதைகள்.

தன்னுடைய கலைக்கு மக்களிடத்தே உரிய கவனமும் பாராட்டும் கிடைக்கவில்லை என்றாலும் அவன் அதில் தொடர்ந்து இயங்குகிறான். இந்த இடத்தில் பாரதியையும், புதுமைப்பித்தனையும் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கதை முழுவதும் தன் கலையின் மீது அவன் கொண்ட தீராப்பற்றினைப் பற்றியே கூறப்பட்டிருக்கும். நாற்பது நாட்களுக்கும் மேலாகக் கூட அவனால் பட்டினி கிடக்கவியலும். அவனுடைய கலையின் மீதான பசியின் வழியே தான் அவன்தன் உடலின் பசியை வெல்கிறான். இப்படியாக சொல்லிக் கொண்டே வந்து, கடைசியாக ஓர் இடத்தில் தனக்கு 'திருப்தியான உணவு' கிடைத்திருந்தால் தான் ஏன் இந்தப் பட்டினிக் கலையில் ஈடுபடப் போகிறேன் என்று கூறுவான். இந்த இடத்தில் சுரா தன் பேட்டியில் சொன்ன ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது - "கலைஞன் ஓர் அதிருப்தியாளன்". ஆம், அவன் கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடே கலையாக பிரவாகமெடுக்கிறது. காஃப்காவிடம் எழுத்தாகவும், வான்காவிடம் ஓவியமாகவும்.

வாழ்வின் மீது திருப்தி கொண்ட ஒரு கலைஞன் கூட இருக்க முடியாது. அகம், புறம் என தான் எதிர் கொள்ளும் ஏதோ ஒரு வாழ்வியல் சிக்கலே எந்த ஒரு கலைஞனையும் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.

O

Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால