Skip to main content

மேய்ப்பரின் கருணை ( காலச்சுவடு - ஜனவரி 2018)



ளர்ந்து தொங்கிய தூய்மையான வெள்ளை நிற ஆடை அவரது உடலை நிறைத்துக் கால்களைத் தழுவி, மண்ணிலும் கொஞ்சம் பட்டுப் படர்ந்திருக்கிறது. அதற்கு மேலே பெரிய சிவப்பு நிற துண்டொன்றை இடப்பக்கமாய்ச் சுற்றியிருக்கிறார். நெஞ்சோடு சேர்த்தணைத்துப் பிடித்திருந்த ஆட்டுக்குட்டி அவரது இடதுகைச் சுட்டுவிரலைத் தன் நாவால் மெதுவாக வாஞ்சையுடன் நக்குகிறது. நெகிழ்வும் நிறைவும் தந்த அந்தச் சுவரோவியத்தில் நான் தோய்ந்துகொண்டிருந்த போது பின்னால் இருந்தவன் அடித்த ஹாரன் சத்தத்தில்தான் சுதாரித்தேன். முன்னால் பத்தடிக்கு மேல் வண்டிகள் நகர்ந்துவிட்டிருந்தன. சிக்னல் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறியிருந்தது. நியூட்ரலில் இருந்து முதல் கியருக்கு மாற்றி முன்னகர்ந்தேன்.

வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. புலர்காலையில் நல்ல மழை பெய்து முடித்து இப்போது வெறும் தூறல் மட்டும் இருந்தது. அதற்கே சாலையில் நீர் தேங்கி, வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. 'எஃப்-எம்'மில் ஓடிக் கொண்டிருந்த பாடலை இடை நிறுத்தி ப்ளூடூத் வழியாக என்னுடைய பாஸ் இணைப்பில் வந்தார்.

"ப்ரதீப்.. குத்தே அஹே(ஸ்) து?" - எனக்கு மராட்டி தெரியும் என்பதால் என்னிடம் மட்டும் தனிப்பட்ட அழைப்புகளில் மராட்டியில்தான் பேசுவார். அவருக்குச் சொந்த ஊர் மஹாராஷ்ராவிலுள்ள பூனே. என்னுடைய அப்பா 'ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா'வில் மேனேஜராக இருந்தவர். கல்லூரிக்காலம் வரையில் வட இந்தியா முழுவதும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தோம். அப்போது நாசிக்கில் மட்டுமே 4 வருடங்களுக்கு மேல் தங்கல். அதனால் தந்தை மொழியான தமிழுடன், தாய் மொழியான சிந்தியும், கூடவே இந்தியும், மராட்டியும் எனக்கு அத்துப்படி. ஆங்கிலம் தவிர மற்ற எல்லாமே அரைகுறை என்பது வேறு விசயம்.

"இப்போதான் பாஸ்.. திருவான்மியூர் சிக்னல். இங்க மழை தூறுது. இன்னும் ஆபிஸ் வந்து சேர எப்படியும் அரைமணி நேரமாவது ஆகும்"

"ஒண்ணும் பிரச்சனையில்லை. மெதுவா வா. நான் இப்போ ஒரு ரிவியூ மீட்டிங் போய்ட்டு இருக்கேன். நடுவுல ஒரு சின்ன வேல வந்துருக்கு. ஒரு 'பிங்க் ஹேண்ட்ஷேக்'. இந்த முறை கொஞ்சம் பெரிய தல. மீட்டிங் இருக்கிறதால என்னால ஹாண்டில் பண்ண முடியாது. நீதான் பாத்துக்கணும் மைபாய்"

எனது "ஓ.கே பாஸ்"களுக்கிடையே அவரே தொடர்ந்தார், "பேரு விஜயராகவன். சீனியர் ப்ராஜக்ட் மேனஜர். மற்ற எல்லா விபரங்களையும் உனக்கு டீட்டெய்ட்ல்டா மெயில்ல அனுப்பிருக்கேன். பார்த்துட்டு கொஞ்சம் தயாராப் போ. தைரியமாப் பண்ணு. சீனியர் எம்பளாயிங்கிறதால கொஞ்சம் அக்ரஸிவா பிகேவ் பண்ணவும் வாய்ப்பிருக்கு. போல்டா ஹாண்டில் பண்ணு. ஆல் தி பெஸ்ட். ஏதும் பிரச்சனைனா பிங் பண்ணாத மெயில் பண்ணு. நானே கால் பண்றேன்"

நாட்டின் புகழ்பெற்ற மேனேஜ்மண்ட் கல்லூரியில் மனிதவளத்துறையில் பட்டம் பெற்றேன். வலது கையில் பட்டத்தை வாங்கும் முன்பே இடது கையில் வேலையைத் தந்துவிட்டார்கள். ஆறிலக்கச் சம்பளம் வாங்க ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. முதலில் ஐ.டி கம்பெனியில் ஹெச்.ஆராகச் சேர்வது குறித்துக் கொஞ்சம் தயக்கமிருந்தது. இப்போது யோசித்துப் பார்த்தால் இங்கிருக்கும் சவால்கள் பிடித்திருக்கிறன. அவை ஒவ்வொரு நாளையும் சுவாரஷ்யப்படுத்துகிறன. நேற்று போல் இன்றில்லை. நாளை என் கையில் இல்லை. இந்த நிச்சயமற்ற தன்மைதான் என்னை இங்கு பிடித்து நிறுத்தியிருக்கிறது. இதற்கு முன் ஹேமந்த் இத்தனை அழுத்தம் கொடுத்து எந்த வேலையையும் கொடுத்ததில்லை. ஏற்கனவே அன்றைக்கான வேலைகள் குவிந்திருந்தபோதும் அத்தனை பேரையும் விட்டுவிட்டு தேர்ந்தெடுத்து என்னிடம் வேலை சொல்லும் பாஸிடம் எப்படி "நோ" சொல்லுவது? அதுவும் அவர் போக வேண்டிய இடத்தில் என்னை நிறுத்துகிறார். அலுவலகம் வந்து லாப்டாப்பைத் திறந்தேன். ஹேமந்த் என்னிடம் கூறியபடியே தெள்ளத் தெளிவாக ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதில் அந்த விஜயராகவனைப் பற்றிய குறிப்பும் மற்ற புள்ளிவிபரங்களும் இருந்தன. விஜய் கடந்த பதினேழு வருடங்களாக இந்த நிறுவனத்தில் இருக்கிறார். இதுவே அவரது முதல் நிறுவனமும் கூட. கோவையின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்தவர். 'கோபாலு'ம், 'சி'யும் ஐ.டி. உலகை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில் வளாகத் தேர்வின் வழியே உள்ளே வந்தவர் 2008 ஆம் ஆண்டு வந்த பொருளாதாரச் சரிவு போன்ற கடுமையான காலகட்டங்களையெல்லாம் வெற்றிகரமாகக் கடந்து வந்திருக்கிறார். அவர் இங்கே 'கோட்' அடித்துக்கொண்டிருந்த நேரத்தில் நான் என்னுடைய ஏழாம் வகுப்பு கணிதச் சமன்பாடுகளைத் தீர்க்கவியலாமல் விழித்துக்கொண்டிருந்திருப்பேன். அவர் உள்ளே வந்த காலத்தில் இருந்த 'ஒய்2கே' பிரச்சனையை வெகு சாமர்த்தியமாகத் தீர்த்து வைத்த குழுவில் இருந்தவர். அன்றிலிருந்து அவருக்கு இங்கு ஏறுமுகமே. நடுவில் மூன்று வருடங்கள் அமெரிக்காவிலும் ஒரு வருடம் டோக்கியாவிலும் எங்கள் கம்பெனியின் கிளைகளில் வேலை பார்த்துள்ளார். விஜயராகவனுக்கு 'கேரியர் டிஸ்கஸன்' என்று தலைப்பிட்டு என்னை நேரில் வந்து சந்திக்கும்படி நான் அமர்ந்திருக்கும் 'காபின்' எண்ணையும் எனது அலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதை டைப் செய்யும் போது என்னையறியாமல் எனது விரல்கள் மெள்ள நடுங்கின. கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்துக் கொண்டேன். மூன்று முறை மூச்சை இழுத்துப்பிடித்து வெளியிட்டேன். பத்து நிமிடங்கள் கழித்து, எனதறையின் கண்ணாடிக் கதவை ஒருக்களித்துத் திறந்தவாறே, "உள்ளே வரலாமா?" என்றார். அவருடைய ஆங்கிலத்தில் தமிழின் தாக்கம் அதிமாக இருந்தது. வெள்ளிக்கிழமைகளில் ஜீன்சும், டிசர்ட்டும் அணிய அனுமதி உண்டு. ஆனாலும் அவர் வெளிர் நீல நிற சட்டை, கச்சிதமாகத் தேய்த்து அணிந்திருந்த பான்ட் என்று வெகு நேர்த்தியாக வந்திருந்தார். காலையில் தான் சவரம் செய்திருப்பார் போல. "ப்ளீஸ் உள்ள வாங்க விஜய். நான் ப்ரதீப். ப்ரதீப் பாலக்குமார். ஹேமந்த் டீம்". "ஓ.. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. ஏதோ "கரியர் டிஸ்கஸன்" என்று மெயில் அனுப்பியிருந்தீர்கள். டீம் அப்ரைசல் பத்தியோ பதவிஉயர்வு சம்பந்தமாகவோ இருந்தால் அதைப்பற்றி வரும் திங்கள் மாலையில் விவாதிக்கலாமா? திங்கள் காலை முக்கியமான 'கஷ்டமர் டெமோ' ஒன்று இருக்கிறது. மொத்த டீமும் அதற்காகத் தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். நான் இப்போது அங்கு இல்லை என்றால் அவ்வளவு நன்றாக இருக்காது" என்று உட்காரக்கூட செய்யாமல் பரபரத்துக்கொண்டிருந்தார். மெல்லிய புன்னகை பூத்த முகம் அவருக்கு இருந்தது. "மிஸ்டர் விஜய். இல்லை. அதுக்கு அவசியம் இருக்காது. கவலை வேண்டாம் விடுங்கள். தயவு செய்து கொஞ்சம் உட்காருங்கள்" "ப் பு..புரியவில்லை நீங்கள் சொல்ல வருவது" எதிரே இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தார். "என்னை மன்னிக்கணும். உங்களைக் கம்பெனியை விட்டு நீக்குவதாக முடிவு செய்திருக்கிறார்கள். டிஸ்மிஸல் கிடையாது. பயப்பட வேண்டாம். நீங்களே உங்களது ரிஸைனேசனை சமர்ப்பிக்கலாம். செட்டில்மண்ட் உள்ளிட்ட எல்லா விபரங்களையும் உங்களுக்கு மெயில் பண்ணியிருக்கிறேன். சரி பார்த்துக் கொள்ளுங்கள். இரண்டு மாதச் சம்பளமும் முன்பணமாக நாளையே உங்களது அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும். அக்கவுண்ட் டிப்பார்ட்மண்ட்டுக்கு தகவல் கொடுத்தாகிவிட்டது." "இல்ல.. புரியல்ல.. நீங்க என்ன சொல்றீங்க. நான் எதுக்கு ரிசைன் பண்ணனும்?" தமிழில் பேச ஆரம்பித்திருந்தார். முகம் முற்றிலுமாக மாறிவிட்டிருந்தது. கழுத்திலும் நெற்றி ஓரங்களிலும் வியர்வை ஓடிச் சட்டையை நனைத்தது. உதடு உலர்ந்து இறுகிற்று. அவரிடமிருந்த அந்தப் புன்னகை காணாமலாகியிருந்தது. அவர் கொஞ்சம் அணுக்கமாகவும், தளர்வாகவும் உணரக்கூடும் என்பதால் நானும் தமிழிலேயே பதில் சொல்ல ஆரம்பித்தேன். "ஆமா விஜய். இது மேலிடத்து உத்தரவு. உங்களுக்கு இரண்டு மாசம் முழுசா டைம் இருக்கு. இதைவிடப் பெட்டரா உங்களுக்கு வெளியில வாய்ப்பு கிடைக்கும்" "ப்ரதீப்.. இங்க நான் பதினேழு வருசமா வேலை பாக்குறேன். நீங்க இரண்டு மாசம் டைம் கொடுக்கிறீங்க" "விஜய்.. இந்த இரண்டு மாசமும் நீங்க ஆபிஸ் வரக்கூடத் தேவையில்லை. இன்னைக்கே நீங்க புது வேலையத் தேட ஆரம்பிக்கலாம். உங்களோட திறமைக்கு வெளியில ஈசியா வேலை கிடைச்சுடும்" "அப்போ இங்கயிருந்து ஏன் அனுப்புறீங்க? இப்போ நான் பாத்துக்கிட்டு இருக்கிற நாலு ப்ராஜ்க்ட்ஸை யாரு பார்ப்பாங்க? கஷ்டமர் கேட்டா என்ன பதில் சொல்வீங்க?" "அதைப்பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் விஜய். நாங்க பாத்துக்கிறோம். ரிலீவிங் ஃபார்மால்ட்டிஸ் பத்தி ஏதாவது சந்தேகம் இருந்தா மட்டும் கேளுங்க. உங்களுக்கு உதவத் தயாரா இருக்கேன்." நான் சற்று கடுமையாகவே பதில் சொல்ல வேண்டியிருந்தது. என்னிடமிருந்து இப்படியான பதிலை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்த ஐ.டி. கம்பெனியில் மாற்றம் செய்யவியலாத இடம் ஒன்றே கிடையாது. தவிர்க்கவியலாதவர்கள் என்று யாருமே இங்கில்லை. ஒரு கம்பெனியில் சி.இ.ஓ-வையே வெளியே விரட்டிவிட்டு அடுத்த இரண்டு மாதத்தில் புதிதாக ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிடவில்லையா? நாளை விஜய் சென்றவுடன் கஷ்டமர்கள் கேட்பார்கள்தாம். அவருடைய தனிப்பட்ட மருத்துவக் காரணங்களுக்காக திடீரென்று இரண்டு வாரங்கள் விடுப்பெடுத்துக் கொண்டார் என்று அறிவிப்போம். அவருக்குப் பதில் வேறு ஒருவரை அங்கு நிறுவுவோம். இரண்டு வாரத்தில் அந்தப் புதியவர் அச்சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வார். அவ்வளவுதான் மூன்றாவது வாரத்தில் கஷ்டமர்கள் விஜய் என்ற பெயரையே மறந்திருப்பார்கள். இது இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும் என்றாலும், தனக்கு அப்படி நேராது என்றே எல்லாரும் நினைத்துக் கொள்கிறார்கள். "இல்ல.. என் மேல என்ன தப்புன்னு தெரிஞ்சுக்கலாமா? போன அப்ரைசல்ல கூட நல்ல ரேட்டிங் தானே வாங்கியிருந்தேன்.. இப்போ என்ன திடீர்ன்னு.. எனக்கு ஒண்ணும் புரியல" அவர் குரல் இப்போது தணிந்திருந்தது. குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் அவரது முகமே வெளிறிப் போயிருந்தது. "விஜய் நீங்க உங்க ரேட்டிங்க மட்டுமே பார்க்கக் கூடாது. ப்ராஜக்ட்டோட ரேட்டிங்கையும் பாக்கணும். நேத்து வந்த 'சி-சாட் ரேட்டிங்'* ரொம்ப மோசமா இருக்கு. அதோட உங்க ப்ராஜக்ட்டோட 'ப்ராஃபிட் மார்ஜின்'* ரொம்பக் கம்மியா இருக்கு. வெறும் 17% தான் இருக்கு. குறைஞ்சது 20% இருக்கணும். அடுத்த வருசத்துக்குள்ள 22% டார்கெட் இருக்குது. இதெல்லாம் நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்ல" "லாபம்தானே குறைஞ்சுருக்கு.. நஷ்டம் ஒண்ணும் வந்திடலயே. இது புது ப்ராஜக்ட்டுங்க.. மெதுவாத்தானே ஒரு வழிக்கு வரும். ரெண்டு குவார்ட்டராவது காத்திருக்கணும்ங்க.. இதெல்லாம் உங்களுக்குப் புரியலனா உங்க சீனியர் யார்கிட்டயாவது கொஞ்சம் கேட்டுத் தெரிஞ்சுட்டு வந்து பேசுங்க சார்" கோபத்தில் குரலை உயர்த்தினார். பதற்றத்திலும் கோபத்திலும் அவரது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அவர் "சார்" என்பதை உச்சரிக்கும் போது இருந்த அழுத்தம் என்னுடைய ஈகோவைக் கிளறிவிட்டது. "ஸாரி விஜய்.. இப்போ அதைப் பத்திப் பேசி பிரயோஜனமில்ல அதுக்கு நேரமுமில்ல.. ரிலீவிங் ஃபார்மால்ட்டிஸ் பத்தி வேற ஏதாவது உங்களுக்கு கேள்விகள் இருந்தா கேளுங்க" அவருடைய எந்த உணர்வுகளுக்கும் இடமளிக்காமல் பதிவு செய்து ஒலிக்கவிடபட்டது போன்ற குரலில் பதில் கூறினேன். 'ப்ரதீப்.. இப்படித் திடீர்ன்னு சொன்னா எப்படிங்க.. இரண்டு பசங்க படிச்சுட்டு இருக்காங்க. ஒருத்தன் எட்டாவது படிக்கான். பொண்ணு இப்போத்தான் அஞ்சாவது. ஒய்ஃப் கூட வீட்லதான் இருக்காங்க. இரண்டு பேருக்கும் ஸ்கூல் ஃபீஸ், வீட்டு இ.எம்.ஐ, அம்மாவோட மெடிக்கல் செலவு, பர்சனல் லோன், கிரடிட் கார்ட் பில், லொட்டு லொசுக்குன்னு எத்தன விசயம் என் ஒருத்தன் சம்பளத்தை நம்பியிருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?" என்னைப் பார்க்காமல் டேபிளைப் பார்த்து குனிந்தபடியே யாரிடமோ பேசும் பாவனையில் கூறினார். "மிஸ்டர் விஜய்.. இது என்னோட தனிப்பட்ட முடிவு இல்லங்கறத நீங்க புரிஞ்சுக்கணும்.. 'காஸ்ட் கட்டிங்'* பண்ணச் சொல்லி மேல இருந்து பயங்கர பிரஷர். வேற வழியே இல்லீங்க. நீங்க மட்டும் இல்ல. நீங்க குறைஞ்சபட்சம் உங்களோட திறமைகள காலத்துக்கு ஏத்தமாதிரி கொஞ்சம் புதுப்பிச்சு இருந்தா கூட எப்படியாவது சமாளிச்சு இருக்கலாம். ப்ளாக் செயின், ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ், டெவ் ஆப்ஸ் அப்படியிப்படி.. அதையும் பண்ணல. நீங்க கடைசியா புதுசா டிரைனிங் எடுத்து இரண்டு வருசமாச்சு. தேதி கூட என்னால சொல்லமுடியும்" "ரொம்ப சரிங்க. கடந்த ஒண்ணற வருசமா இந்தப் புதுப் பிராஜக்ட் கிடைக்கிறதுக்காக, ஏற்கனவே பார்த்துக்கிட்டு இருந்த ப்ராஜக்ட்டோட சேர்த்து இதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா. எத்தனை நாள் நைட் இரண்டு மணிக்கும், மூணு மணிக்கும் வீட்டுக்குப் போயிருக்கேன். சனி, ஞாயிறு கணக்கெல்லாம் பார்த்ததே கிடையாதே. என் பெண்டாட்டி தம்பி கல்யாணத்துல கூட லேப்டாப்பும் கையுமா சுத்திட்டு இருந்தவன் நான்" பெரிதாக மூச்சை இழுத்துவிட்டுவிட்டு, ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அவரே தொடர்ந்தார், "ப்ரதீப்.. அடுத்து நீங்க எதிர் பார்க்குற 'ப்ராஃபிட் மார்ஜின்' மீட் பண்ற வரைக்கும் எனக்கு எந்த ஹைக்கும், போனஸும் கூட வேண்டாம். நான் வேணா அதை லெட்டரா எழுதிக்கூடத் தாரேன்" புதிதாக ஒரு வழியைக் கண்டுகொண்டவர் போல கொஞ்சம் உற்சாகமாகி இருக்கையின் நுனிக்கு வந்துவிட்டு என் முகத்தையே பார்த்தார். "நோ விஜய்.. அப்படி ஆஃப்சன்லாம் உங்களுக்குத் தரவே இல்ல" அவரது கண்களைப் பார்த்து சற்று அழுத்தமாகவே கூறினேன். ஒரு நிமிடம் இருவரும் எதையும் பேசவில்லை. அறையெங்கும் வியாபித்திருந்த மெளனத்தை அவரே கலைத்தார். "இப்போ வாங்குற சம்பளத்துல பாதிக் கொடுத்தா கூட போதும் ப்ரதீப். அப்படியே கன்ட்டினியூ பண்ண தயாரா இருக்கேன். பதினேழு வருசம் ஒரே கம்பெனி. நடுவுல எவ்வளவோ ஆஃபர்ஸ் வந்துச்சு அப்பக்கூட வேறெங்கெயும் போகல. ஏதாவது பண்ண முடியுமான்னு கேட்டுச் சொல்றீங்களா?" இதைச் சொல்லும் போது அவரது குரல் உடையத் தொடங்கியது. அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டார். "இல்ல விஜய்.. அதுக்கு வாய்ப்பேயில்லை. உங்களோட பொஸிஷனே காலியாகுது. உங்களை வேறெங்கயும் போட முடியாது. நாங்களும் எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணிட்டு கடைசியா வேற வழியே இல்லாமத்தான் இந்த முடிவுக்கு வர வேண்டியிருந்தது. தயவு செய்ஞ்சு புரிஞ்சுக்கோங்க." அதற்குமேல் பதிலேதும் பேசாமல், வலிய வரவழைத்த புன்னகையுடன் "தேங்க்ஸ்" என்று கூறி எழுந்தார். கதவைத் திறந்து வெளியே போகும் போது அவரை அழைத்தேன். "உங்க ஐ.டி.கார்டை கழட்டி கொடுத்துப் போங்க ப்ளீஸ்" தனது ஐ.டி கார்டைக் கழற்றி எனது மேசையில் வைத்தார். மனது கனத்து இருந்தது. கண்களை மூடி இருக்கையில் சற்று தலை சாய்த்தேன். காலையில் பார்த்த அந்த ஏசுவின் ஓவியம் மனதில் வந்து வந்து போனது. அவரது கைகளை நக்கும் அந்த ஆட்டுக்குட்டியும்.


O


சி-சாட் ரேட்டிங் : ஐ.டி நிறுவன சேவை குறித்து அதன் வாடிக்கையாளர்கள் தரும் தர மதிப்பீடு
ப்ராஃபிட் மார்ஜின் : லாப விகிதம்
காஸ்ட் கட்டிங் : நிர்வாக செலவைக் குறைக்கும் உத்திகள்

Comments

Popular posts from this blog

மிருகம்

    அதிகாலையில் வரும்  வாட்ஸப்   குறுஞ்செய்திகளின்   கீச்சிடல்கள்   எரிச்ச லை க் கிளப்பத்   தொடங்கியிருந்தன . அவை  எதைப்   பற்றியதாக  இருக்கும் என்று  லஸண்ட்ராவுக்குத்  தெரியும்.  அப்பார்ட்மண்ட்டின்   அசோஸியேஸன் குழுமத்திற் கென்றே   தனியாகப்  பிரித்து  எலி   சத்தமிடுவதைப்   போல க்   கீச்சிடு ம் ஒலியைத்  தேர்ந்தெடுத்து  வைத்திருந்தாள்.    காலை யி லேயே   அதைப்  பார் த்து அன்றைய  தினத்தைக்   கெடுத்துக்கொள்ள வேண்டாம்  என்று முடிவு  செய் தவளாக ,   படுக்கை யை  உதறி  எழுந்தாள் . வானம்  மேகமூட்டமாயிருந்தது .  இரவில்  வரைந்து வைத்திருந்த  அக்ரலிக்  ஓவியத்தைப் பார்த்தாள்.  கருப்பு ,  மஞ்சள் ,  சாம்பல்  வண்ணங்களில்   தீட்டப்பட்ட   அரூப உருவங்க ள் பின் இருக்க ,  முன்னே  மரத்தாலான   ஒரு  பழைய   நாற்காலியை வரைந்து வைத்திருந்தாள்.  அது  ஒருவிதமான ...

திற - சாதத் ஹசன் மண்ட்டோ

அ ந்தச் சிறப்பு ரயில் அம்ரிஷ்டரிலிருந்து மதியம் இரண்டு மணிக்குப் புறப்பட்டு, எட்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு முகல்புராவை அடைந்தது. பயணிகளில் பலர் வழியிலேயே கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். இன்னும் சிலர் தொலைந்து போயினர். மறுநாள் காலை சிராஜூதின் கண் விழித்து பார்த்த பொழுது, தான் அகதிகள் முகாமின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பதை உணர்ந்தார். அவரைச் சுற்றி, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அடங்கிய ஒரு கூட்டம் குமுறிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் கண்டு பதற்றமடைந்த அவர் தூசு நிரம்பிய வானத்தை வெகு நேரமாக  வெறித்துக் கொண்டிருந்தார். அந்த முகாமெங்கும் ஒரே சத்தமாக இருந்தது. ஆனால் எதுவும் சிராஜூதினின் காதில் விழவில்லை. இவரைப் பார்த்த யாரும், ஏதோ ஆழ்ந்த துயரச் சிந்தனையில் இருக்கிறார் என்று யூகித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர் மனது வெறுமையாய் இருந்தது. சூரியன் கண்ணில் படும் வரையிலும் அவர் அந்த தூசு நிறைந்த வானத்தையே உற்று நோக்கியபடி இருந்தார். சூரியனின் வெப்பம் அவரின் ஒவ்வொரு நரம்பிலும் பாய்ந்தது. ஏதோ ஒரு துடிப்பில் எழுந்தார். அந்த துர்சம்பவக் காட்சி அவர் கண் முன்னே எழுந்தது - தீ...

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய...