Skip to main content

அனோஜனின் பச்சை நரம்பு



எனது டொரினா தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் "தமிழ்ச் சிறுகதைகளில் உலவும் பதின்பருவ அக்காக்களைக் குறித்து எவரேனும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம்" என்று எழுதியிருப்பார். அப்படியான அக்காக்களின் கதைகள் இத்தொகுப்பிலும் இரண்டு உண்டு. 'இச்சை' கதையும் 'பச்சை நரம்பு'ம் பால்யகால அக்காக்களைப் பற்றிய கதைகளே.

'பச்சை நரம்பில்' அவள் செல்லமக்கா. கதையின் முடிவில் அம்மா கழுத்துப் பச்சை நரம்பு அக்காவிடம் தெரியுமிடம் வரை சரி, அது தீபாவிடமும் தெரிவதாக முடித்திருப்பது இக்கைதையை அளவுக்கதிகமாக ரொமாண்டிஸைஸ் செய்துவிடுகிறது.

இவரின் பெரும்பாலான கதைகள் பால்யத்தின் நினைவுச்சரட்டிலிருந்தே பின்னப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு சூழலில் பாலியல் ரீதியான தாக்குதலுக்குள்ளான சிறுவர்கள் இவரது கதைகளில் திரும்பத் திரும்ப வருகிறார்கள். 'இச்சை' கதையில் அந்த நண்பர்களுடன் நடக்கும் உரையாடலில் கதையின் சாரம் இருக்கிறது. ஆனால் அது கதையில் தீர்க்கமாக வெளிப்படவில்லை. சிறுவயதில் நடத்தப்பட்ட பாலியல் துஷ்பரயேகம் எத்தனை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும்? மாறாக இங்கே வெறும் கிளர்ச்சியாக வெளிப்பட்டு ஒதுங்கி நிற்கிறது.

மன நிழலும், வலியும் அவர் முன்மொழியும் அரசியலைப் பேசும் கதைகள். இதில் மனநிழல் ஒரு முக்கியமான கதை. குற்ற உணர்ச்சியை மறைத்துத் தவித்துத் தழும்பும் இடங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.

"வெளிதல்" - பரத்தையர் உலகம், தமிழில் அதிகம் புனையப்பட்ட கதைக்களம். ஜி.நாகராஜன் இதில் மாஸ்டர். இப்படியான ஒரு களத்தில், புதிதாக ஏதேனும் ஒன்று இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் பதில் ஏமாற்றமே. கதையின் முடிவு புனிதப்படுத்துமிடத்தில் மிகவும் சோகையாகிறது. வாசகன் இட்டு நிரப்ப வேண்டிய வெளியை ஆசிரியனே நிரப்பும் தவறு, இளம் எழுத்தாளர்கள் எல்லாருக்கும் பொதுவானது. அனோஜனுக்கும் இதில் விலக்கல்ல.

"நானூறு ரியால்" - கதை ஒரு குறும்படத்துக்கு இணையான வேகத்துடன் இருக்கிறது. மனிதர்களின் மீதான் நம்பிக்கையின்மையைப் பற்றி பேசுகிறது. இதில் என்னால் சில விசயங்களை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. எப்போதும் வெளி நாடுகளில் இருக்கும் காலங்களில் நம் நாட்டினர் மீது தனிப்பற்று வந்து ஒட்டிக் கொள்ளும். உனக்கு நான், எனக்கு நீ என்பது போன்ற சுயநலம் கலந்த பற்றுதான் என்றாலும். அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள். சிட்னியில் இரண்டு வருடங்கள் இருந்தவன் என்ற முறையில் என்னால் இதை உறுதியாகவே சொல்ல முடியும். அப்படியிருக்க, நானூறு ரியால் என்பது வெறும் ஆறாயிரத்துச் சொச்சம் ரூபாய்களே! புனைவில் இத்தனை தர்க்கம் பார்க்கத் தேவையில்லை என்றாலும், ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது.

அனோஜனின் தனித்துவம் மிளிரும் கதைகளாக 'கிடாய்' கதையையும், 'வாசனை' கதையையும் சொல்வேன். இரண்டுமே அப்பா-மகள் உறவுச் சிக்கல்களை முற்றிலுமாக எதிரெதிர் துருவங்களில் இருந்து பேசும் கதைகள். வாசனை - அப்பாவின் பிம்பத்தையையும் வாசனையையும் வாழ்வில் எதிர்ப்படும் ஆண்களிடத்தே தேடும் பெண்ணொருத்தியைப் பற்றிய நுட்பமான கதை. அடங்காக் காமமும் அதன்பொருட்டு எழும் தன்னிறக்கமும் நிறையப் பெற்ற தகப்பன் ஒருவனின் நிலையை உளவியல் ரீதியாக முன்வைக்கு கதை - கிடாய்.

அனோஜனிடம் அட்டகாசமான மொழி இருக்கிறது. சொல்முறையிலும் நல்ல தேர்ச்சி தெரிகிறது. அவருக்கான தளத்தை அவர் தேடிக் கண்டடையும் போது தமிழின் தவிர்க்கவியலாத கதை சொல்லியாக நிற்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

O

Comments

Popular posts from this blog

மிருகம்

    அதிகாலையில் வரும்  வாட்ஸப்   குறுஞ்செய்திகளின்   கீச்சிடல்கள்   எரிச்ச லை க் கிளப்பத்   தொடங்கியிருந்தன . அவை  எதைப்   பற்றியதாக  இருக்கும் என்று  லஸண்ட்ராவுக்குத்  தெரியும்.  அப்பார்ட்மண்ட்டின்   அசோஸியேஸன் குழுமத்திற் கென்றே   தனியாகப்  பிரித்து  எலி   சத்தமிடுவதைப்   போல க்   கீச்சிடு ம் ஒலியைத்  தேர்ந்தெடுத்து  வைத்திருந்தாள்.    காலை யி லேயே   அதைப்  பார் த்து அன்றைய  தினத்தைக்   கெடுத்துக்கொள்ள வேண்டாம்  என்று முடிவு  செய் தவளாக ,   படுக்கை யை  உதறி  எழுந்தாள் . வானம்  மேகமூட்டமாயிருந்தது .  இரவில்  வரைந்து வைத்திருந்த  அக்ரலிக்  ஓவியத்தைப் பார்த்தாள்.  கருப்பு ,  மஞ்சள் ,  சாம்பல்  வண்ணங்களில்   தீட்டப்பட்ட   அரூப உருவங்க ள் பின் இருக்க ,  முன்னே  மரத்தாலான   ஒரு  பழைய   நாற்காலியை வரைந்து வைத்திருந்தாள்.  அது  ஒருவிதமான ...

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய...

இரு கோப்பைகள்

ஞா யிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தேன்.  முதலில் அந்தச் சத்தம் பக்கத்து வீடுகளில் யாரோ மெதுவாக சுவரில் ஆணியடிப்பதைப் போன்று கேட்டது. அடுத்த முறை அந்தச் சத்தம் நொய்டாவின் தெருவோர தேநீர்க் கடைகளில் சூடான தேநீருக்கு இஞ்சியைத் தட்டிப் போடுவதற்காக தட்டுவதைப் போன்று 'தொப் தொப்'பென்று கேட்டது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை இரவு பதினோறு மணிக்கு இவை இரண்டுமே சாத்தியமில்லை. அதுவும் இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரடங்கிப் போய்விடுகின்ற, பொதுப் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட அடுத்தவர்களுக்கு கேட்டுவிடாத கிசுகிசுக் குரலில் பேசும் மக்கள் வாழ்கின்ற சிட்னி போன்ற ஒரு பெரு நகரத்தில்  சுவர் ஆணிக்கோ, இரவுத் தேநீருக்கோ இந்நேரத்தில் வாய்ப்பு மிகவும் குறைவு.  "யாரோ கதவத் தட்டுற மாதிரியில்ல" என்று பக்கத்தில் படுத்திருந்த காவ்யா கேட்கும் போதுதான் அதை உணர்ந்தேன். எங்கள் ...