அதிகாலையில் வரும் வாட்ஸப் குறுஞ்செய்திகளின் கீச்சிடல்கள் எரிச்சலைக்கிளப்பத் தொடங்கியிருந்தன. அவை எதைப் பற்றியதாக இருக்கும் என்று லஸண்ட்ராவுக்குத் தெரியும். அப்பார்ட்மண்ட்டின் அசோஸியேஸன்குழுமத்திற்கென்றே தனியாகப் பிரித்து எலி சத்தமிடுவதைப் போலக் கீச்சிடும்ஒலியைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள்.
காலையிலேயே அதைப் பார்த்து அன்றைய தினத்தைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்தவளாக, படுக்கையை உதறி எழுந்தாள். வானம் மேகமூட்டமாயிருந்தது. இரவில் வரைந்து வைத்திருந்த அக்ரலிக் ஓவியத்தைப் பார்த்தாள். கருப்பு, மஞ்சள், சாம்பல் வண்ணங்களில் தீட்டப்பட்ட அரூப உருவங்கள் பின் இருக்க, முன்னே மரத்தாலான ஒரு பழைய நாற்காலியைவரைந்து வைத்திருந்தாள். அது ஒருவிதமான ரஸ்டிக் தன்மையுடன் நன்றாக வந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. ஒரு மாதக் காலமாக இதைத்தீட்டிக்கொண்டிருக்கிறாள். நேற்று ஓரளவுக்கு நிறைவு பெற்றுவிட்டது என்ற நம்பிக்கை வந்த பின்புதான் தூங்கச் சென்றாள். காலையில் எழுந்து பார்த்தால், வரைந்த வரை எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, இருந்தும் ஏதோ ஒன்று குறைகிறதோ என்று தோன்றியது.
அதைப் பற்றி யோசித்தபடி பால்கனியின் பிரஞ்ச் மாடல் கதவைத் திறந்தாள். குளிர்காற்று காது மடல்களை உரசிச் சென்றது. கேத்தரீன் ஆன்ட்டி வெளியே சென்றிருப்பாள் போல. அவளுடைய அறை காலியாக இருந்தது.
வாசல் கதவில் நகங்கள் பிறாண்டும் சத்தம் கேட்டது.
வந்துவிட்டானா?
மணியைப் பார்த்தாள். சரியாக எட்டு. பிரிட்ஜில் எடுத்து வைத்திருந்த சாதத்தைக்குழைவாகப் பிசைந்து அதில் பாலைக் காய்ச்சி ஊற்றினாள். பூனை உணவு கொஞ்சம் வாங்கி வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். சுவரில்ஒட்டி வைத்திருந்த மளிகை பட்டியலில் குறித்துக்கொண்டாள்.பிசைந்ததிலிருந்து ஒரு கை சாதத்தைத் தனியே எடுத்து ஒரு கிண்ணத்தில்வைத்தாள்.
கதவைத் திறந்ததும் பழுப்புக்கோடன் நின்று கொண்டிருந்தான். முதுகைக்கீழ்ப்பக்கமாக வளைத்து முகத்தை மட்டும் ஏறிட்டு அவளைப் பார்த்தான். அவள் அவனுக்கான கிண்ணத்தில் நொசித்த பால் சாதத்தை அள்ளி வைத்தாள்.சாப்பிடத் தலை குனிந்தவன் நிமிரவே இல்லை. ‘சளக் சளக்’ சத்தம் மட்டும் வந்தது. ஒரே மூச்சில் எல்லாவற்றையும் காலி செய்துவிட்டான். சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று இவள் ஒருமுறை பார்த்துக்கொண்டாள். யாருமில்லை. வராந்தா காலியாக இருந்தது. பெரியவர்களைவிடச்சிறுவர்களைப் பார்த்தால்தான் பயம். அவர்கள்தாம் இவள் பழுப்புக்கோடனுக்குச்சோறிடுவதைப் போட்டுக்கொடுத்திருக்கிறார்கள்.
சாப்பிட்டு முடித்துவிட்டு நாவால் ஒரு முறை முகத்தைச் சுற்றி சுழற்றினான்.பின்பு அவளை வாஞ்சையாக அண்ணாந்து பார்த்தான். இவள் குனிந்து, “சரி கிளம்பு கிளம்பு” என்று கிசுகிசுத்து ஜாடை செய்தாள். கதவைச் சாத்தப்போனபோது வழக்கம்போல அவன் அங்கிருந்து நகர்ந்திருக்கவில்லை. கதவு திறந்திருந்த இடுக்கின் வழி வால் மட்டும் மெதுவாக அசைந்துகொண்டிருந்தது. “உஷ்” என்று சத்தமெழுப்பினாள். வாலை உள்ளிழுத்துக்கொண்டு கிளம்பினான்.
லஸண்டராவுக்கும் பழுப்புக்கோடனுக்கும் இடையில் இது ஓர் உரையாடலாகநிலைபெற்றுவிட்டது. அவன் கிளம்புவதற்கு அவளிடமிருந்து அந்தச் சத்தம் வர வேண்டும். அது ஒருவிதமான விடைபெறல்.
உஷ்!
O
சோம்பல் முறித்துக்கொண்டு அடுப்பில் பிளாக் டீயை வைத்தாள். எடுத்து வைத்திருந்த அந்தப் பால் சாதத்தில் சர்க்கரையை ஒரு ஸ்பூன் அள்ளி நிரவினாள். மெதுவாக ஒவ்வொரு ஸ்பூனாக அள்ளி வாயில் போட்டுக்கொண்டாள்.
டீ கொதிப்பதற்காகக் காத்திருந்த இடைவெளியில் அவளை அறியாமலேதன்னிச்சையாக மொபைலை எடுத்து வாட்ஸப்பை பார்த்துவிட்டாள். அசோஸியேஸன் க்ரூப்பில் வரிசையாகச் செய்திகள் வந்து குவிந்திருந்தன. ‘எலிப் புழுக்கைகள்’ என்று திட்டி முணுமுணுத்துக்கொண்டே அவற்றை வாசிக்க ஆரம்பித்தாள்.
“பூனைகள் ஒன்றும் அவ்வளவு மோசமானவை கிடையாது. இருப்பவற்றிலேயேஅவைதான் சுத்தம் பேணுபவை. செல்வத்தையும் குபேரனையும்கொண்டுவருபவை.”
“இங்கே நாம் வளர்ப்புப் பிராணிகளைப் பற்றிப் பேசவில்லை. வளர்ப்புப்பூனைகள் வேண்டுமானால் ஒரு வேளை சுத்தமாக இருக்கலாம். ஆனால், தெருவில் திரியும் பூனைகள் சுத்தமாக இருக்கும் என்று நம்புவதற்கில்லை.அதிலும் நோயுற்றவையாகவோ அவற்றைப் பரப்புபவையாகவோ இருந்தால் என்ன செய்வீர்கள்?”
“உண்மைதான். இதிலும் அர்த்தமிருக்கிறதுதான்.”
“மியாவ்!!!”
“இங்கே தீவிரமான விவாதம் நடக்கும்போது மீம்களையும் ஜிப்களையும் அனுப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் – செயலாளர்.”
“இப்போதெல்லாம் இந்தப் பூமியே மனிதர்களுக்கானது மட்டும் என்று எண்ணிக்கொள்ளும் சுயநலம் அதிகமாகிவிட்டது.”
“பூனையோ புலியோ பூமியில் உல்லாசமாக உலா வருவது குறித்து யாருக்கும் புகாரில்லை. அப்பார்ட்மண்ட்டுக்குள் அவற்றை அனுமதிப்பதும் சோறிடுவதுமேஇங்கே பிரச்சினை.”
“பூனையிருந்தா எலித் தொல்லை இருக்காது.”
“Cats are connoisseurs of comfort!”
“எகிப்திய நாகரிகத்தில் அவை அற்புத அவதாரங்கள். அவர்களின் நம்பிக்கைப்படி அவை நன்மையைத் தம்மோடு அழைத்து வருகின்றன.”
“இது எகிப்து இல்லை. பாரத்!”
“பாரத் இல்லை. இந்தியா.”
“தனி வீடாக இருந்தால் யார் கேட்கப் போகிறார்கள்? உங்கள் வீடு உங்கள் சுதந்திரம். இது அப்பார்ட்மண்ட். மற்றவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.”
“பூனை பிடிக்காதவர்கள் நாயை வளர்த்துக்கொள்ளலாம். நாய் குரைக்கும்போதுபூனை ஓடிவிடும். ஹா ஹா!!”
“லஸண்ட்ராதான் தெளிவாகச் சொல்லிவிட்டாரே, அவரைத் தேடி வந்து கதவைத் தட்டும் பூனையைத் தன்னால் விரட்ட இயலாது என்று. அப்பூனைஅவ்வீட்டாரைக் காக்கும் தேவதையாகப் பார்க்கிறது. இதற்கு மேல் அவர்களின் உறவில் நாம் தலையிடுவது அநாகரிகம்.”
“பூனைகள் சுத்தமானவை, அவர்களுக்கு இடையே இருப்பது உன்னதமான அன்பு என்பதெல்லாம் இருக்கட்டும். பூனைகள் நோயுற்றவர்களுக்கும்முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தானவை. அதிலும் தெருப்பூனைகள். தெரு நாய்கள் குழந்தைகளைத் துரத்திச் சென்று குதறி எடுக்கும் வீடியோக்களை இதே வாட்ஸப் குழுமத்தில்தானே யாரோ பகிர்ந்திருந்தார்கள். எல்லாவற்றையும் பார்த்தும் இப்படிச் சிலர் பேசுவது வேதனைக்குரியது. ஒருவருக்குப் பூனையின் மீது உண்மையில் அக்கறை உள்ளதென்றால் அவற்றை அனுமதிக்கும் அப்பார்ட்மண்ட்கள் இங்கே ஆயிரம் உள்ளன. அவற்றில் ஒன்றைத்தேர்வு செய்துகொள்ளட்டும்.
மற்ற பிராணிகளிடம் காட்டும் அன்பை ஏன் நீங்கள் மனிதப் பிறவிகளிடம்காட்டுவதில்லை. வயதான தொழுநோயுற்ற பிச்சைக்காரன் பிச்சை கேட்டு வந்து நீங்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் பிரியாணி கொடுத்தால் அவன் தினம் அதே வேளை வந்து கேட்கத்தான் செய்வான். அதற்காக அவனை உள்ளே அழைத்துக்கூப்பிட்டு வைத்துக்கொள்ளும் அன்னை தெரேஸாக்களா பூனைகளைக்கொஞ்சும் எல்லோரும்?”
“உண்மைதான்”
“உண்மை”
“வாஸ்தவம்”
“எல்லோருடைய ஒப்புதலும் முக்கியம்.”
வரிசையாக அசோஸியேஸன் குழுமத்தில் நடைபெற்ற வாக்குவாதங்களைவாசித்து முடித்த பின்னர் அவளுக்கு எரிச்சலும் கோபமும் மண்டியது. போனை எடுத்து “பக் ஆப்” என்று எழுதி அந்த குழுமத்தில் அனுப்பிவிட்டு, அந்தக் குழுவிலிருந்து வெளியேறினாள்.
O
அவள் அதை அனுப்பிய ஐந்தாவது நிமிடத்தில் கேத்தரீன் ஆன்ட்டியிடமிருந்துஅழைப்பு வந்தது. அவள் எதற்காக அழைத்திருக்கிறாள் என்ன கேட்கப்போகிறாள் என்று வார்த்தை தவறாமல் லஸண்ட்ராவுக்குத் தெரியும். அதுவும் காலையில் அந்தப் போதனைகளைக் கேட்க நேரமோ பொறுமையோ இல்லை.மழை தூறியபடி இருக்கும் இந்தக் காலநிலைக்கு அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்திருக்கலாம். பால்கனி கதவைத் திறந்துவிட்டு, மழை கழுவியிருக்கும் ரேடியல் சாலையையும் அதற்கு அந்தப் பக்கமிருக்கும்ஏரியையும் பார்த்தபடி வேலை செய்வது அவளுக்குப் பிடிக்கும். ஆனால், அந்த வாட்ஸப் செய்திகள் அவளுடைய மனநிலையைக் கெடுத்துவிட்டிருந்தன. உடனே அங்கிருந்து வெளியேற வேண்டும். தன் அமைதியைக் கெடுக்கும் எதையும் பொறுத்துக்கொள்ளத் தயாராக இல்லை. ஏற்கெனவே இப்படிப்பொறுத்தும் சகித்தும் தான் அனுபவித்ததெல்லாம் போதும் என்று எண்ணிக்கொண்டாள்.
இப்படித்தான் மனத்தை அரிக்கும் எதொன்றும் தன் பழைய நினைவுகளைக்கிளறுவதில் கொண்டுபோய் நிறுத்தும். இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதீப்அழைத்திருந்தான். இன்னும் அவனிடம் இயல்பாகப் பேசும் அளவுக்குத் தான்இன்னும் சமநிலைக்குத் திரும்பவில்லை என்பதை அவள் அறிவாள்.
‘பின்னர் ஒரு நாள் நானே அழைக்கிறேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
‘பிரச்சினையில்லை, தேவையான நேரம் எடுத்துக்கொள்’ என்று அவ்வளவு நாகரிமாகப் பதில் அனுப்பிவிட்டு நிறுத்திக்கொண்டான். அதன் பிறகு அழைப்போ குறுஞ்செய்தியோ இல்லை. அவ்வப்போது இன்ஸ்டாவில்அவனுடைய ஸ்டோரிகளைப் பார்த்துக்கொள்வாள். உடனிருந்தபோது தன் மீதுஅவ்வளவு ஆக்கிரமிப்புகளைச் செலுத்தியவன், விலகி வந்ததும் இவ்வளவு நல்லவனாகவும் புரிந்துகொள்பவனாகவும் நடந்துகொள்வது அவளுக்கே ஆச்சரியமாகத் தெரிந்தது. இது நடிப்பில்லை. ஆனால், அதுவும் பொய்யில்லை. இரண்டும்தான் அவன்.
மெதுவாக தன் அடி வயிற்றைத் தடவிக் கொண்டாள். நெஞ்சு பக்கென்றுஅடைத்தது. மூச்சை இழுத்துவிட்டாள். “இட்ஸ் ஆல்ரைட்!” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அலுவலகத்துக்குச் செல்லத் தயாரானாள்.
அலுவலகத்திலிருக்கும்போது மதியம் ஒரு தடவை, கிளம்பும் முன்னர் சாயங்காலம் ஒரு தடவை என்று கேத்தரீன் ஆன்ட்டி அழைத்திருந்தாள்.வீட்டுக்குப் போய் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்து அழைப்புகளைஎடுக்கவேயில்லை.
O
கேத்தரீன் ஆன்ட்டி இரவு உணவாக சப்பாத்தியும் லஸண்ட்ராவுக்குப் பிடித்தமுந்திரி அரைத்துவிட்ட கேப்ஸிக்கம் கிரேவியும் செய்து வைத்திருந்தாள். அவள் உடைமாற்றி வந்து சாப்பிட்டு முடிக்கும் வரை அதைப் பற்றி எந்தப் பேச்சையும்எடுக்கவில்லை. பசியிலிருக்கும் சமயங்களில் அவள் புலி போல உறுமுவாள் என்பது கேத்தரீனுக்குத் தெரியும். சாப்பிட்டு முடித்து, பொன் மஞ்சள் ஒளியின்கீழ் சோபாவில் அமர்ந்து டி.வி.யைப் போட்டாள். பாதியில் நிறுத்தியிருந்தநெட்பிளிக்ஸ் தொடரை ஓடவிட்டாள்.
மறுநாளிற்கான காய்கறிகளை நறுக்கியபடி கேத்தரீன் ஆன்ட்டி “காலையில் பாலன் கூப்பிட்டிருந்தார்” என்றாள்.
“ஹவுஸ் ஓனர் பாலனா?”
“ஆமா”
“என்னவாம்?” கண்களை டி.வி.யை விட்டு நகர்த்தாமல் கேட்டாள்.
“அவரும் அந்த வாட்ஸப் குரூப்ல இருக்கார். ஏன் இப்படி பண்றீங்க. பெட்ஸ்வளர்க்கக் கூடாதுங்கிறது அசோஸியேஸன் ரூல்தானே. அது நம்மஅக்ரிமண்ட்லயும் இருக்கு. பின்னே ஏன் இவ்ளோ பிரச்சினைன்னு கேட்டார்.”
இப்போது ஓடிக்கொண்டிருந்த படத்தை நிறுத்திவிட்டு,
“சொல்ல வேண்டிதானே நீங்க.. இதொண்ணும் வீட்ல வச்சு வளர்க்கல. அதுவாவருது. போகுதுன்னு.”
“நாம சோறுபோடப் போயிதானே வருது.”
“ஆன்ட்டி.. அது இத்துனூண்டு குட்டி. அதுக்குச் சோறு போடுறதுல நாம என்ன குறைஞ்சிடப் போறோம்?”
“அப்படியில்ல லஸ்ஸி. நாலு பேரு சேர்ந்திருக்கிற இடத்துல எல்லாரையும் அனுசரிச்சுப் போறதுதானே முறை?’
“அந்த நாலு பேருல ஒரு ஆளா ஒரு பூனை வரக்கூடாது. இல்ல?”
“வயசானவங்கலாம் இருக்காங்கன்னு..”
“நீங்களும் இந்த அப்பார்ட்மண்ட் ஆளுங்க மாதிரி பேசாதீங்க ஆன்ட்டி. நான் போயி தெருவுலருந்து அந்தக் குட்டிய இங்க தூக்கிட்டு வரல. அதுவா என் வீட்டு வாசலுக்கு வந்துச்சு. பாவம், நான் சோறு போட்டேன். அவ்ளோதான். எவன் என்ன சொன்னாலும் பாத்துக்கலாம்.”
“பாலனே வீடு மாறச் சொன்னா என்ன பண்றது?”
“என்ன என்ன பண்றது? இவ்ளோ பெரிய ஊர்ல நமக்கு வீடா இல்ல. மாறிப்போம்ஆன்ட்டி. விடுங்க.”
“லஸ்ஸி.. எல்லாத்துலயும் எடுத்தேன் கவுத்தேன்னு முடிவு எடுக்கிறது அவ்ளோசரியாப்படல எனக்கு. பொறுமையா யோசி. இது நல்ல வீடு. நல்ல அப்பார்ட்மண்ட். உனக்கும் ஆபிஸ்க்கு ரொம்பப் பக்கம். பதினைஞ்சு நிமிசம். அதுவுமில்லாம இந்த வீட்டுக்கு நாம எவ்வளோ செலவு பண்ணிருக்கோம். பைப், பால்கனி கார்டன், மேட் ப்ளோர் அது இதுன்னு அம்பதாயிரமாச்சும்ஆகியிருக்கும். எல்லாத்தையும் அப்படியே போட்டுப் போயிட முடியுமா?”
“ஏன் பாலன் காலி பண்ணச் சொன்னாரா?”
“அவர் எதுவும் சொல்லல. இப்போ நீதான் சொல்ற. எல்லாத்துலயும் அவசர அவசரமா, யோசிக்காம கொள்ளாம ஒத்த வார்த்தையப் பிடிச்சுட்டு நீதான் இப்படி நிக்கிற.”
“ஆன்ட்டி ப்ளீஸ். சுத்தி சுத்தியெல்லாம் பேசாதீங்க. பழசை எடுக்காதீங்க. தயவுசெய்து விட்டுருங்க.” என்று சொல்லிவிட்டு டி.வி.யை அணைத்துவிட்டு தன் அறைக்குள் போய்ப் பூட்டிக்கொண்டாள்.
வெறுமையாக இருந்தது. ஒரே ஒரு பூனையை ஆதரிப்பது அவ்வளவு குற்றமா? இந்தச் சின்ன முடிவுக்குக்கூட மற்றவர்களிடம் கூனி கை கட்டி வாய் பொத்தி அனுமதி கேட்டு நிற்க வேண்டுமா? இதைத்தானே பிரதீப் விசயத்தில் அப்பா சொன்னார். குழந்தை விசயத்தில் பிரதீப் சொன்னான். இருவரையும் விட்டு வந்தாகிவிட்டது. என் வாழ்க்கை மீதும் என் உடல் மீதுமே எனக்குச் சுதந்திரம் இல்லையா? இதையெல்லாம் யோசித்தபடி தூங்கிப் போனாள்.
O
அடுத்தடுத்த நாட்களில் பழுப்புக்கோடன் வருவதும் அவனுக்கு இவள் சோறிடுவதும் நிற்கவில்லை. கேத்தரீன் ஆன்ட்டி இரவில் இவளுடன் சேர்ந்துசாப்பிடாமல் தனியாகச் சாப்பிடுவதன் மூலமாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தாள். லஸண்ட்ராவோ இது எதையும் பொருட்படுத்தியதாகக்காட்டிக்கொள்ளவில்லை இருந்தாலும் அவள் மனத்துள் எல்லாம் ஓரமாக எறும்பைப் போல ஊர்ந்துகொண்டிருந்தது.
லஸண்ட்ரா சென்னையின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றின்மனிதவளத் துறையில் பிரதானப் பொறுப்பிலிருக்கிறாள். அன்றுஅதிகாலையிலேயே முக்கியமான பணியாளர் பயிற்சி வகுப்புகளைஒருங்கிணைக்க வேண்டியிருந்தது. நாள் முழுவதும் ஓட்டமும் நடையுமாகக்கழிந்தது. களைப்பின் காரணமாகச் சாயங்காலம் திட்டமிட்டிருந்த முக்கியமான சந்திப்பு ஒன்றை ரத்துசெய்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள்.
சாம்பல் வெளிச்சத்தில் வீட்டுக்கு வருவது அவளுக்குப் பிடிப்பதில்லை. வழியில் யாராவது பார்த்து பழுப்புக்கோடனைப் பற்றி விசாரிப்பார்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று அறிவுரை கூறுவார்கள். அப்போது அவர்கள் அதுவரை பார்த்திராத தன்னுடைய இன்னொரு முகத்தைக் காண நேரிடும். அப்படியானசந்தர்ப்பத்தைத் தவிர்க்க விரும்பினாள். அவளே தன்னை அமைதியானவளாகவும் எல்லாவற்றையும் இலகுவாகக் கடந்துபோபவளாகவும்மாற்றிக்கொள்ளும் முயற்சியிலிருக்கிறாள்.
பழுப்புக்கோடனைப் பார்த்ததும் அவளுள் பொங்கி வரும் அன்பும் ஆசுவாசமும்ஏனோ இந்த மனிதர்களைப் பார்த்தால் வருவதில்லை.
அப்பார்ட்மண்ட் கார் பார்க்கிங்கில் தன்னுடைய ஆல்ட்ரோஸை நிறுத்திவிட்டு வரும்போது வழியில் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்ததைக்கவனித்தாள். பையில் ஏதாவது சாக்லேட்டுகள் இருக்கிறதா என்று பார்த்தாள். இரண்டு மூன்று கேட்பரி டாட்ஸ் சாக்லேட்டுகள் கிடந்தன. வழக்கமாக இவளைப்பார்த்ததும் கையசைத்து ‘ஹாய் ஆன்ட்டி’ என்று சொல்லிப் புன்னகைக்கும்யாரும் அன்று இவளைக் கண்டுகொள்ளவேயில்லை. விளையாட்டு மும்மரமாயிருக்கும் என்று சமாதானம் கொண்டாலும் அதை உறுதிப்படுத்துவதற்காக இவளே அவர்கள் பக்கத்தில் போய், “ஹாய் சோட்டூஸ்” என்றாள்.
விளையாட்டு தடைப்பட்டது. அவர்களுக்குள் கண்களால் ஏதேதோ ஜாடை பேசினார்கள். நீண்ட தயக்கத்துக்குப் பிறகு சோனு மட்டும் ‘ஹாய் ஆன்ட்டி’என்றாள். வாட்ஸப் குரூப்பில் தொழு நோயாளிகள் பற்றிய கருத்தை முன்வைத்தபாயலின் பெண்தான் சோனு என்றழைக்கப்படும் சோனம்.
இவள் அவளைப் பார்த்து சாக்லேட்டை நீட்டினாள். எப்போதுமில்லாத வழக்கமாக அதை வாங்க மறுத்துவிட்டாள்.
ஏன் என்ன என்று சுதாரிப்பதற்குள் அவர்கள் அனைவரும் அங்கிருந்துஆளுக்கொரு திசையில் ஓடி மறைந்தார்கள். ஒரு நிமிடம் அந்த மொத்த அப்பார்மண்ட்டில் தான் மட்டும் தனியே நின்று கொண்டிருப்பதாய்த்தோன்றியது. சாக்லேட்டை தூக்கி அப்படியே தரையில் எறிந்துவிட்டு தன் வீட்டுக்குச் செல்ல மாடிப்படியில் ஏறினாள். கால் சோர்ந்து துவண்டன.
O
கழற்றி வீசப்பட்ட ஒரு துணியைப் போல சோபாவின் மேல் கிடந்தாள். மனம் வெறுமையாக இருந்தது.
கேத்தரீன் ஆன்ட்டி, “டீ வைக்கட்டுமா?” என்று கேட்டாள்.
அவளை அண்ணாந்து பார்த்து, “யெஸ் ப்ளீஸ்!” என்றாள்.
“டிரஸ் மாத்திட்டு வந்துடுறியா?”
“இல்ல.. நீங்க டீ எடுத்துட்டு வாங்க.” என்று சொல்லிவிட்டு, “உங்களுக்கும் சேர்த்து” என்பதை அழுத்திச் சொன்னாள்.
கேத்தரீன் ஆன்ட்டி சிரித்தபடி தலையாட்டினாள். தன்னுடைய எதிர்ப்பு கவனிக்கப்படுவதும் அது குறித்து லஸண்ட்ரா கவலை கொண்டிருப்பதும்கேத்தரீனுக்கு உள்ளுக்குள்ளே மகிழ்ச்சியைக் கொடுத்தது.
பால்கனியின் திரைச் சீலைகளை விலக்கிவிட்டு இரண்டு கதவுகளையும் திறந்து வெளிக் காற்று உள்ளே வர அனுமதித்தாள். சில்லென்று வாடைக் காற்று வீசியது. கேத்தரீன் டீ கோப்பைகளைக் கொண்டு வந்து டீப்பாயின் மேல் வைத்தாள்.
மழை பெய்யும் நாட்கள் எவ்வளவு சுலபமாக ஒரு உரையாடலைத் தொடங்க உதவுகின்றன என்று நினைத்தப்படி, “இன்னிக்கும் மழை வரும் போல இருக்கே!” என்று கேத்தரீன் ஆன்ட்டியைப் பார்த்துக் கேட்டாள்.
“ஆமா, தெனம் இதே வேலை. சாயங்காலம் சாயங்காலம் மழ வந்துடுது.. ச்சைக்”
“அட.. மழை வந்தா நல்லதுதானே ஆன்ட்டி.”
“எனக்கு வெயில்தான் புடிக்கும்.”
இன்னும் அவள் கோபத்திலிருக்கிறாள். அப்படியான பொழுதுகளில்தான்சம்பந்தமில்லாமல் இவள் பேசும் எல்லாவற்றுக்கும் எதிர்த்துச்சொல்லிக்கொண்டிருப்பாள். அதை நீவிச் சரி செய்ய உடலோ மனமோஒத்துழைக்கவில்லை. எனவே பதிலுக்குப் பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“இன்னிக்கு பிரதீப் வீட்டுக்கு வந்திருந்தார்.”
அப்பெயரைக் கேட்டதும், லஸண்ட்ராவுக்குத் தூக்கிவாறிப்போட்டது. அதுவரை தளர்வாக முதுகைச் சாய்த்து அமர்ந்திருந்தவள் சட்டென ஈட்டிபோல நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்.
“எங்கிட்ட அவன் ஒரு வார்த்தை சொல்லல”
“அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார்.”
“என்ன விசயமாம்?”
“மெல்பர்ன் கிளம்புறாராம்.”
“மெல்பர்னுக்கா?”
“ஆமா.. ஏதோ ஏஆரோ பிஆரோ வந்துடுச்சாம். கிளம்புறேன்னு சொல்லிட்டுப்போக வந்தார்.”
இதைக் கேட்டதும் அவளுக்கு சட்டென தலைபாரம் அழுத்தியது. ஏற்கெனவே உடலும் மனமும் இளகிப் போயிருந்த நேரத்தில் இந்தச் செய்தி அவளை இன்னும் இளக்கியது.
“பிஆர் கிடைச்சிடுச்சா. எங்கிட்ட அதைப் பத்தி ஒண்ணும் சொல்லவே இல்ல.”
“உனக்கு கால் பண்ணாராம். நீதான் பிறகு கூப்பிடுறேன்னு சொல்லிட்டுபின்னாடி கூப்பிடவே இல்லயாமே. உன்னத் தொந்தரவு பண்ண வேணாமேன்னுதான் நீ இல்லாத நேரம் வீட்டுக்கு வந்துட்டு போயிருக்கார்.”
“பிறகு கூப்பிடுறேன்னு சொல்லிட்டுக் கூப்பிடலனா, இன்னொரு தடவ கூப்பிட மாட்டானாமா? ஒரு வார்த்தை சொல்றதுல என்ன குறைஞ்சிடும்?”
“லஸ்ஸி.. நாமளும் அவர் சொன்னத ஒரு வார்த்தை கேட்டிருந்தா இந்த நிலைமைக்கே வந்திருக்க மாட்டோமே?” என்றதும் லஸண்ட்ராவுக்குக் கோபம் தலைக்கேறியது. அதை வெளிக்காட்டும் தெம்பு இல்லாமல் உடையத்தொடங்கினாள். அவள் முன்னால் அழுதுவிடக்கூடாது என்று எண்ணியபடிபார்வையை பால்கனிப் பக்கம் திருப்பினாள்.
கேத்தரீன் அவள் பக்கமாக வந்து அமர்ந்தாள். அவளுடைய முதுகைத்தடவியபடி, “பிரதீப்கிட்ட பேசுறியா? நான் கால் பண்ணித்தரவா?” என்றாள்.
“ஒரு மண்ணும் வேண்டாம்” என்று தலையை ஆட்டினாள்.
“நல்ல பொண்ணுல. ஒரு தடவை பேசு. அவர் மெல்பர்ன் போறதைக்கூட தள்ளி வச்சுடுவார். அவர் எல்லாத்தையும் மறந்துட்டார். மன்னிச்சுடுவார். நீ ஒரே ஒரு முறை..” என்று சொல்லி முடிக்கும் முன்பே, இவள் கத்தத் தொடங்கினாள்.
“அவன் யாரு என்னை மன்னிக்கிறதுக்கு. இதுல என் தப்பு எதுவுமே இல்ல. ப்ளீஸ்யு ஸ்டாப் வித்தின் யுவர் லிமிட்ஸ்!” ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
அந்தச் சத்தத்தில் கேத்தரீன் ஆன்ட்டி பதறி எழுந்தாள். அவள் கண்ணும்கலங்கிப் போனது. “உங்கிட்ட வந்து பேசினது என் தப்புத்தான். யார் சொன்னாலும் கேட்கக்கூடாதுன்னு முடிவு பண்ணிருக்க. அவ்வளவு அடம். மொத்த அப்பார்ட்மண்ட்டே ஒரு விசயத்தை வேண்டாம் சொல்லுது. மீறி, அப்படித்தான் பண்ணுவேன்னு அவ்ளோ அடம் பிடிக்கிற. அது வெறும் மிருகம். ஞாபகம் வச்சுக்கோ. மக்கள் மனுசர் முக்கியம். நாளைக்கு நீ தனியா இருக்கும்போது அந்தப் பூனையா உன்கூட நிக்கும்? அந்தப் பூனைக்குச் சோறு போட்டு எல்லாப் பாவத்தையும் கழுவிக்கிடலாம்னு பாக்கிற. இல்ல?”
“ஷிட்.. ஷிட்.. உங்க எல்லாத்துக்கும் அந்தப் பூனைதான் பிரச்சினை இல்லையா? விடுங்க அதை நான் பாத்துக்கிறேன்.” என்று கோபமாகச் சொல்லியபடிவீட்டைவிட்டு வெளியே கிளம்பினாள். வெளியேறும்போது வாசற் கதவை அடித்துச் சாத்தியதில் டொப்பென்று சப்தமெழுப்பியது.
O
காரை எடுத்துக்கொண்டு எந்த இலக்குமின்றி தோன்றிய பக்கமெல்லாம் போனாள். மழை அடித்துப் பெய்தது. இ.சி.ஆர். சாலையில் ஓரமாகக் காரை நிறுத்தி அழுதாள். மழை நின்றதும் வீட்டுக்குத் திரும்பினாள்.
அவளுக்கான இரவு உணவு சாப்பாட்டு மேசை மேல் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. பசி இல்லை. ஆனால், தலை வலித்தது. எல்லோருக்கும் என்ன பிரச்சினை? பூனையா? இல்லை, அவள் அவளாக இருப்பதுதான் பாயலில்ஆரம்பித்து அப்பா வரை அத்தனை பேரையும் உறுத்துகிறதா?
இவள் வந்த சற்று நேரத்தில் வாசல் கதவைப் பிறாண்டும் சத்தம் கேட்டது.கேத்தரீன் ஆன்ட்டியின் அறை உட்புறமாகச் சாத்தப்பட்டிருந்தது. வேகமாகப்போய் கதவைத் திறந்தாள். பழுப்புக்கோடன் நின்றுகொண்டிருந்தான். மழையில்நனைந்திருப்பான் போல, முடிகள் உடலோடு ஒட்டியிருந்தன. இடது முன்னங்காலால் உடலின் முடிகளைக் கோதிக்கொண்டான்.
சட்டென கதவைச் சாத்தினாள். திக்கற்று அப்படியே நடு ஹாலில்நின்றுகொண்டிருந்தாள். மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள் கலைந்ததேனீக் கூட்டத்தைப் போல ஓடிக்கொண்டிருந்தன. மெதுவாக மூச்சை இழுத்து உள் வாங்கி வெளியிட்டாள். சமையலறைக்குச் சென்று மதியம் மீதமிருந்தசாதத்தை எடுத்தாள். இவளுக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த பாலை அடுப்பில் வைத்து லேசாகச் சுட வைத்தாள். மனம் படபடவென அடித்துக்கொள்ளவெளியே வாங்கி வந்ததையும் அதோடு சேர்த்துக் கலந்தாள்.
அதை எடுத்துக்கொண்டு அதற்கென்றே வைக்கப்பட்டிருந்த பிரத்தியேகக்கிண்ணத்தில் ஊற்றினாள். கைகள் நடுங்கின.
எப்போதும் ஊற்றியதும் ஓடிப் போய் தலையைக் கவிழ்த்துக்கொள்ளும். அன்று பக்கத்தில் போனதும் ஒரு கணம் தயங்கியது. உடலைக் குறுக்கி மெதுவாக நிமிர்ந்து இவளை அண்ணாந்து பார்த்தது. கள்ளமற்ற ஒளியுமிழும் அதன் கண்களை இவளால் பார்க்க முடியவில்லை. சட்டென தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள். நுகர்ந்து பார்த்துவிட்டுத் தயங்கியபடி ஒருமுறை நக்கிப் பார்த்தது. மீண்டும் அதே போலத் தயங்கித் தயங்கி இரண்டு மூன்றுமுறைநக்கிய பின் மொத்தமாக எல்லாவற்றையும் குடித்து முடித்தது.
அது குடித்து முடித்ததும் கதவைச் சாத்தும் போது எட்டிப் பார்த்தாள். அதுஅவளுக்காகக் காத்திருக்காமல் அங்கிருந்து கிளம்பிப் போயிருந்தது. உடல் முழுதும் கனத்தது. அவளுடைய பாரத்தையே அவளால் தாங்க முடியவில்லை. சோபாவில் போய் பொத்தென அமர்ந்தாள்.
கொட்டும் மழையில் பாழடைந்த அந்த அப்பார்ட்மண்ட்டின் கார் பார்க்கிங்கின்வெளிப்புறம் தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கிறாள். சுற்றிலும் இருளும்மழையும் தவிர ஒன்றுமில்லை. அடித்துப் பெய்யும் மழையில் தன்னையே கரைத்துக்கொள்ள விரும்புகிறவளைப் போல வானத்தை அண்ணாந்து பார்த்து நின்றுகொண்டிருந்தவளின் காலை பழுப்புக்கோடன் வந்து உரசியது. அந்நேரம்சரியாக அடி வானத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு மின்னல் வெட்டியது. மின்னலின் ஒளி கண்ணில் பட்டுக் கூச விழித்துக்கொண்டாள். பின்னர் மிகச் சத்தமாக இடி இடித்தது. நடுங்கும் கைகளால் காதுகளைப்பொத்திக்கொண்டாள்.
களைப்பில் அப்படியே சோபாவிலேயே தூங்கிப் போயிருந்தவள் கடிகாரத்தைப்பார்த்தாள். மணி மூன்றரை. வெளியில் மழை அடித்துப் பெய்துகொண்டிருந்தது. எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.
முடிக்கப்படாத அந்த அரூப நாற்காலி ஓவியத்தைத் தீட்டத் தொடங்கினாள். தேன் வண்ணத் தைலம் கொண்டு தீட்டப்பட்டிருந்த அந்த நாற்காலியின் மேல் பழுப்புக்கோடனை வரைந்தாள். அவளைக் கடைசியாக அண்ணாந்து பார்த்த அந்தக் கள்ளமற்ற கண்களைக் கொண்டுவர அவள் நிறைய மெனக்கெடவேண்டியிருந்தது. ஒருவழியாக பழுப்புக்கோடனை அந்த நாற்காலியில்வரைந்து முடித்து அந்த ஓவியத்தை நிறைவு செய்யவும் வெளியே மழை நின்று செந்தளிர் வெளிச்சம் வரவும் சரியாக இருந்தது. இனி எப்போதும் நிரந்தமாகப்பழுப்புக்கோடனைத் தன்னோடே வைத்துக்கொள்வாள்.
சற்று தள்ளி வந்து மெத்தையில் அமர்ந்தபடி அந்த ஓவியத்தைப் பார்த்தாள். எல்லாமும் சரியாக வந்திருந்தது. பழுப்புக்கோடனின் வால் மட்டும் கேன்வாஸைவிட்டு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அவள் ‘உஷ்!’ என்றாள். பழுப்புக்கோடன் தன் வாலை உள்ளிழுத்துக்கொண்டது.
O
Comments
Post a Comment