Skip to main content

முன் நகரும் காலம்




சூரியனை மேகங்கள் மறைத்து நின்றன. வெம்மையும் புழுக்கமும் உள்ளுக்குள் இருந்ததைப் போலவே வெளியேயும் வியாபித்திருந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. வழமை போலவே கிழவிகள் பட்டியக்கல்லில் அமர்ந்து ஊர்க்கதைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளை பள்ளிக்குக் கிளப்பி, கணவனை அலுவலகத்துக்கோ கடைக்கோ அனுப்பிவைத்துவிட்டு குளித்துக் கிளம்பி கோவிலுக்குப் போய்த் திரும்பிக் கொண்டிருந்த பெண்களில் ஒருத்திக்கு அப்படியே மல்லி சித்தியின் சாயல். தலைக்கு குளித்து சடையைப் பின்னாமல் கடைசியில் ஒரு முடிச்சுப் போட்டு இருந்தாள். மேலே சூட்டப்பட்டிருந்த கையகல கனகாம்பரமும் அவளைப் போலவே.

ஆறு மாதங்களுக்குப் பின் ஊருக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனாலும் யாரிடமும் முகம் கொடுத்துப் பேசப் பிடிக்கவில்லை. போனமுறை ஊருக்கு வந்திருந்த போது கூட அத்தை வீட்டுக்குப் போயிருக்கவில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு போய் நிற்பது? ஆனால் இந்த முறை அப்படி இருந்துவிட முடியாது. அது முறையுமல்ல.

சின்னத்தாயி கிழவிதான் கூப்பிட்டாள். அவளுக்குத்தான் அப்படியொரு கட்டைக் குரல் உண்டு. சிறு வயதில் அவள் வீட்டு முன் இருந்த சிறிய பொட்டலில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். அப்படி ஒரு நாள்  விளையாடிக் கொண்டிருந்தபோது நான் அடித்த பந்து, தன் வீட்டு வாசலையொட்டித் தெருவில் பாய் விரித்து இராட்டை சுற்றிக் கொண்டிருந்த அவளின் பாம்படத்துடன் காதைப் பதம் பார்க்க, அவள் என் மொத்த குடும்பத்தையும் திட்டித் தெருவில் வைத்தாள். அதன் பிறகான நாட்களில் அஞ்சி நடுங்க வைத்த அதே குரலில் தான் கூப்பிட்டாள்.

"யாருய்யா.. லதா மவனா போறது?"

"இல்ல ஆத்தா.. அது என் தம்பில. நான் அவுக அக்கா பரமேஸ்வரி பையன்."

"அட.. எனக்கு எல்லாம் ஒண்ணுதாம்ய்யா..  எங்க.. நம்ம மதியைப் பாக்கப் போறியோ? நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு வாய்யா. எப்படியாப்பட்ட பொண்ணு அது. உனக்குத்தான் கொடுத்து வைக்கல. அவளுக்கும் இப்படி வந்து சேர்ந்துருச்சே. ம்ம்...நேரமும் காலமும் அப்படியிருந்தா நீயும் நானும் மட்டும் என்ன செய்ய முடியும் சொல்லு "

எதன் பொருட்டு ஊர்ப்பக்கம் வராமலிருந்தேனோ, எதைக் கேட்க விரும்பாமல் விலகி ஒதுங்கி ஓடினேனோ, எது நடுச்சாமங்களில் முள்ளாய் தைக்கிறதோ அதே இடத்தில் ஒரே அடியாக அடித்தாள். சரியாகச் சாட்டையைச் சுழற்றினாள். இந்த முறை பந்து இடம் மாறியிருந்தது.

வேகமாக நடந்தால் அதுவே தனியான கவனத்தைக் கோரும் என்பதால், இயல்பாக இருப்பது போன்ற பாவத்தையும், அதற்கேற்ப நடையின் வேகத்தையும் மட்டுப்படுத்திக் கொண்டேன். வீட்டிலிருந்து நாலாவது தெருதான் என்றபோதும் நடக்க நடக்க பாதை நீண்டு கொண்டே செல்வதைப் போலிருந்தது. அன்று வீட்டுக்கு வந்து திரும்பிய அத்தைக்கும் இந்தப் பாதை இதே போல நீண்டு போயிருக்கும்தானே?

மீசையில் துருத்திக் கொண்டிருந்த முடிகளை கண்ணாடியைப் பார்த்து கத்தரித்துக் கொண்டிருந்தேன். நான், அதீத சிரத்தை எடுத்துக் கொள்ளும் காரியங்களில் ஒன்று. அப்போதுதான், அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த அத்தையின் குரல் காதில் விழுந்தது. அப்பாவுடன் பிறந்த மூன்று பேர்களில் தனம் அத்தைதான் இளையவள். அப்பாவுக்கும் அவளுக்கும் பதினைந்து வருட இடைவெளி இருக்கும். அதன் பொருட்டோ என்னவோ அவளிடத்தே அப்பாவின் மேல் பெரிய மரியாதையும் அதே நேரத்தில் பெண்பிள்ளைகளுக்கு தகப்பன்களிடத்தில் மட்டுமே இருக்கும் ஒருவித குழைவும் நேசமும் இருக்கும்.

பணம் பற்றிய பரிவர்த்தனைகளைப் பேசும் போது அத்தை அதற்கென்று தனிக்குரல் வைத்திருப்பாள். அம்மாவொன்றும் கொடுக்கிற கையைத் தடுக்கிறவள் இல்லை என்றாலும் காலம் காலமாக அது அப்படித்தான் இருந்தது. ஆனால் இந்த முறை அது பணம் குறித்தல்ல என்பதை அப்பா என்னைக் கூப்பிட்டனுப்பிய போதே புரிந்துவிட்டிருந்தது.

மதியழகியை மணம் முடிப்பது குறித்தான எண்ணம் எனக்குக் கிஞ்சித்தும் இல்லை. மேலும், உறவில் பெண் எடுப்பது அறிவியல் ரீதியாக அத்தனை சரியான முடிவும் இல்லை என்பதைக் விளக்கிக் கூறிமுடித்தபோது அத்தையின் முகம் வதங்கியும், அம்மாவின் முகம் மலர்ந்தும், அப்பாவின் முகம் சலனமற்றும் இருந்தது.

மதி என்னைவிட மூன்று வயது இளையவள். பெரியவளாகும் நாள் வரை எங்கள் வீட்டைத்தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பாள். அப்பா எனக்கு வாங்கித்தரும் எல்லாவற்றிலும் அவளுக்கு ஒரு தனிப்பங்கு எப்போதும் உண்டு. அது குறித்து ஆரம்ப நாட்களில் எனக்கு நிறைய வருத்தம் இருந்தது. அப்பா உற்சாகமிகுதியில் இருக்கும் சமயங்களில் என்னையும் மதியையும் எங்கள் ஊரின் பிரதான கடைத்தெருவில் இருக்கும் ஜாக்கி பேக்கரிக்குக் கூட்டிப் போவார். அவர் தனக்கு ஐம்பது கிராம் பாதாம் அல்வாவும், கொஞ்சம் முந்திரி பக்கோடாவும் வாங்கிக் கொள்வார். எங்கள் இருவருக்கும் ஆளுக்கொரு ஃபளூடா ஐஸ்கிரீம் வாங்கித் தருவார். வெள்ளை, பச்சை, மஞ்சள், சிகப்பு என்று அடுக்கடுக்காக ஐஸ்கிரீம்களுக்கிடையே நடுவில் நேர்த்தியாக நறுக்கப்பட்ட பழத்துண்டுகளால் நிரப்பப்பட்டு ஒயிலான கண்ணாடிக் கோப்பையில் வரும் அந்த ஃபளூடாவைப் பார்ப்பதற்கே அத்தனை கவர்ச்சியாக இருக்கும். கடைசி மேலடுக்கில் முந்திரி பாதாம் பிஸ்தா கலவையோடு சாக்லேட் துகள்களும் சேர்ந்து அதற்கு ஒருவித தேவருசியை கொண்டுவந்து சேர்த்தன.

குற்றாலம், திருச்செந்தூர் என்று ஊர் சுற்றும் சமயங்களில் எல்லாம் எப்போதும் அவளும் எங்களுடன் இருப்பாள். புதிதாகப் பார்ப்பவர்கள் அவளை என்னுடைய தங்கை என்றே நினைத்துக் கொள்வார்கள். அப்போதெல்லாம் நான் மட்டும் ஒவ்வொருமுறையும் அவள் என் அத்தை பெண் என்பதைக் கூறித் திருத்திக் கொண்டிருப்பேன்.

இவையெல்லாம் ஒரு நாள் திடீரென்று நின்று போனது. விசேஷ நாட்களைத் தவிர அவள் எங்கள் வீட்டுப்பக்கம் வருவதேயில்லை. அப்பாவின் முன்னால் கால் மேல் கால்போட்டு அமர்பவள், அவர் வந்தால் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ளப் பழகியிருந்தாள்.

அம்மாவும் அத்தையும் கல்யாண விருந்தொன்றுக்குச் செல்ல நேர்ந்த நாளில் அவளுக்குத் துணையாக என்னை அத்தை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டுப் போயிருந்தார்கள். சோபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவள் என்னை முதன் முதலாக "மச்சான்" என்று முறையிட்டு அழைத்தாள். எனக்குக் கூச்சம் பிடுங்கித் தின்றது.

"ஏய்ய்.. என்னது மச்சான் கிச்சான்னு...ஒழுங்கா பேரைச் சொல்லியே கூப்பிடு"

"இல்ல.. அம்மா இனிமே இப்படித்தான் கூப்பிடணுன்னு சொல்லிருக்கு.. இல்லன்னா வைய்யும்"  இதைச் சொல்லும் போது என் முகத்தைப் பார்க்காமல் டி.வி.யைப் பார்த்தபடியே பேசினாள்.

திரும்ப அவள் அப்படிக் கூப்பிட்டுவிடாமல் இருக்கும் பொருட்டே அவளிடம் பேசுவதை முற்றிலுமாய் தவிர்க்க ஆரம்பித்தேன்.

ஆனால் அத்தை இப்படி ஒரு நாள் கேட்டு வருவாள் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. மதிக்கும் இதில் துளியும் விருப்பம் இருந்திருக்காது. அத்தைதான் அவளைக் கலக்காமல் தானாய் வந்து கேட்டிருப்பாள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். மதியின் திருமணத்துக்கு மறு நாள் பலகார பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்த போது சித்திதான் அதைக் கூறினாள். மதியின் விருப்பத்தின் பேரில்தான் அன்று அத்தை வந்து கேட்டுப் போனதாம்.

தனம் அத்தை தன் வீட்டில் செங்கல் ஒன்றை நகர்த்தி வைக்கக்கூட அப்பாவிடம் வந்து அபிப்பிராயம் கேட்பவள், மதி திருமணத்துக்கு பத்திரிக்கை அடித்து பின் அதைக் கொடுக்க வரும் போதுதான் கல்யாண சேதியையேக் கூறினாள். என் பொருட்டு அண்ணன் தங்கைக்குள் மனத்தாங்கலாகிப் போனது.

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து ஒரு வார்த்தை கூட மதியிடம் நான் பேசியிருக்கவில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இந்த நான்கு வருடங்களில் ஓரிருமுறை ஊர்த்திருவிழாவின் போது மதியை புருசனோடு பார்த்தது. மதிக்குப் பார்த்திருந்த பையன் அவளுடைய அப்பா வழியில் தூரத்துச் சொந்தம். உயரம், உடல்வாகு, நிறம் என எல்லாவற்றிலும் மதியழகிக்குப் பொருத்தமாகவே இருந்தான். எல்லாம் பொருந்தியிருந்தும் கல்யாணமாகி நான்கு வருடங்களாக குழந்தை உண்டாகியிருக்கவில்லை. அதுவே பெரும் குறையாக இருந்தது அவர்களுக்கு.  எல்லா வேண்டுதலுக்குப் பின்னர் பிறந்த குழந்தைதான் விஷக் காய்ச்சல் கண்டு முந்தின நாள் இறந்தும் போய்விட்டிருந்தது. நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை முழுதாக நாலு மாதங்கள் கூட மண்ணில் தங்கவில்லை.

ஏனோ இந்தச் செய்தி கேட்டதும் இருப்பு தங்கவில்லை. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று பொய்க் காரணம் சொல்லி விடுப்பெடுத்துக் கொண்டு வந்து நிற்கிறேன். டுரோண்டோ, பேருந்து என முப்பது மணி நேரத்துக்கும் மேலான பயணக் களைப்பையும் மீறி மதியைப் பார்க்கவே அவள் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். எனக்கே இது புதிதாய் இருந்தது.

வாசலில் செம்பருத்திப்பூக்கள் உதிர்ந்து வருவோர் போவோர் கால்களில் மிதிபட்டு நைந்து போயிருந்தன. செருப்பை வெளியே கழற்றிவிட்டு வலதுகால் பாதத்தை ஒரு பக்கமாய் மடக்கி, சிதறியும் சிதைந்துமிருந்த செம்பருத்திப்பூக்களை மேலும் யார் காலிலும் படாதவாறு மெதுவாக ஓரமாய்த் தள்ளினேன்.

கம்பிகளின் இடைவெளியில் நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் லாவகமாய் நுழைத்து தாழ்பாளை எம்பித் தள்ளி சாத்தியிருந்த கிரில் கதவைத் திறந்துவிட்டேன். ஒரு முறை 'கிரீச்சிட்டு' கதவு திறந்து கொண்டது. வேட்டியை ஒருமுறை தளர்த்தி, பின் இறுக்கிக் கட்டிக்கொண்டேன். உள்ளங்கைகள் வியர்த்திருந்தன. வேட்டியில் இழுவி உலர்த்தினேன்.

கைகடிகாரத்தில் மணி பன்னிரெண்டைத் தொட்டிருந்தது. மேகம் விலகி வெயில் உச்சியில் இறங்கியது. கண்ணில் பட்ட பொருட்களிலெல்லாம் ஒளி பட்டுச்சிதறியது. ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவை லேசாகத் திறந்து "மதி" என்று குரல் கொடுத்தேன். உள்ளே விடிவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. ஜன்னல் எல்லாம் அடைக்கப்பட்டு இந்த மதியத்திலும் இருள் கவிந்து இருந்தது. வயர் வைத்துப் பின்னப்பட்ட மரசோபாவில் தலைக்கு கையை அண்டங்கொடுத்து மதி தூங்கிக் கொண்டிருந்தாள். அடுத்த அழைப்புக்கு வெடுக்கென எழுந்தவள் "மச்சான் வாங்க வாங்க" என்றவாறு கதவைத் திறந்தாள்.  இருகையையும் உயர்த்தி தலையைப் அள்ளி முடிந்தவள், சேலையை இழுத்து சரி செய்து கொண்டாள். அழகாக இருந்தாள்.

ஜன்னலில் தொங்கவிடப்பட்டிருந்து திரைச்சீலைகளை அகற்றியவாறே, "அவுக டெத் சர்ட்டிஃபிக்கேட் வாங்க யாரையோ பாக்க போயிருக்காங்க. இப்ப வந்துருவாங்க. நீங்க உக்காருங்க"

அங்கிருந்த சோபாவை ஒட்டிப் போடப்பட்டிருந்த தனி நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்தேன். என்ன பேசுவது எங்கே ஆரம்பிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். வீடு துடைத்து வைத்ததைப் போல சுத்தமாக இருந்தது. மதியுடைய கல்யாணப் புகைப்படம் உள் வாசல் நிலைக்கு மேல் ஆணியில் தொங்கவிடப் பட்டிருந்தது. தேவைக்கு அதிகமாக ஒரு பொருள் இல்லை. அங்கே குழந்தை ஒன்று இருந்ததற்கான சிறு தடயமும் கண்ணில் படவில்லை.

எங்கள் இருவருக்குமிடையே அந்த அறையெங்கும் படர்ந்திருக்கும் மவுனத்தை ஊடறுக்கும் ஒரு சொல்லைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன். அவளே பேசினாள் "என்ன மச்சான்.. லீவுக்கு வந்திருக்கீங்களோ?" அவள் இயல்பாகக் கேட்டாலும் எனக்குக் குத்தியது. அவளின் பொருட்டு வந்திருக்க மாட்டேன் என்ற அசாத்திய நம்பிக்கை அவளுக்கு. "வேட்டியெல்லாம் கூட கட்டுறதுண்டோ?" அந்தக் கேள்வியில் முறைப்பெண்களுக்கே உரித்தான் ஒரு நக்கல் இருந்தது.

"ஆமா.. எப்பவாச்சு.. இப்படி ஊர்ப்பக்கம் வந்தா கட்டுறதுண்டு" பதில் சொல்லிவிட்டு எப்படி ஆரம்பிக்கலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அணிற்பிள்ளையொன்று மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பாயினுள் இருந்து எட்டிப் பார்த்தது.

"நீங்க தங்கியிருக்கிற எடத்துல இருந்து ஆக்ராலாம் பக்கமாமே.. தாஜ்மஹால்லாம் பாத்துட்டீங்களா? " என்று கண்கள் விரிய ஆச்சர்யமாய்க் கேட்டாள். அது எனக்குச் சுத்த அபத்தமாய்ப் பட்டது.

"ம்.. போயிருக்கேன்.. பெரிசா சொல்லிக்கிற மாதிரி அப்படியொண்ணுமில்ல"

"அத்த சொல்லிருக்கு வெயில்ல அலையிற வேலைண்ணு. ஆளுதான் கொஞ்சம் கறுத்துப்போயிட்டீக.. மெலியவும் தெரியுது" உண்மையிலேயே கரிசனப்பட்டாள்.

"ம்ம்..." - எனக்கு மனது பாரமாக இருந்தது. படபடவென்று அடித்தது.

"நேத்து இராப்போதுக்கும் அத்தை இங்கதான் இருந்தாக. ஆனா நீங்க வர்றதப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்ல"

"மறந்துருப்பாங்க"

"என்ன மச்சான் இப்படி அளந்தளந்து பேசுறீங்க!"

"அ...அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.."

"ஒரே நிமிசம் இருங்க டீ போட்டு எடுத்து வாறேன்."

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம் விடு பிள்ள.."

காதில் வாங்கிக் கொள்ளாமல் அடுக்களைக்குள் சென்றவள், திரும்பிப் பார்த்து ஒரு முறை புன்னகைத்தாள். பெரிய டம்ளர் நிறைய மோரை நிறைத்துக் கொண்டு வந்திருந்தாள்.

"அடிக்கிற வெயிலுக்கு இதமாக இருக்கும். வயித்துக்கும் குளிச்சி" என்று டம்ளரைக் கொடுத்துவிட்டு என் நாற்காலிக்கு எதிரேயிருந்த நிலையில் சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்து கொண்டாள்.

குடிக்க மனமொப்பாமல் கையில் வைத்துக் கொண்டே வீட்டையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். "ம். குடிங்க" என்று விரட்டினாள். ஒரே மிடறுதான் என்றாலும் அமிலமாக உள்ளிறங்கியது.

ஒருவழியாக எங்கே தொடங்குவது என்று கண்டு கொண்டேன், "பேரு என்ன வச்சுருந்தீங்க?"

"அகரன்.. பேரு நல்லாருக்கில்ல. அவங்க குலதெய்வம் பேரு வர்ற மாதிரி வைக்கணும்ன்னு அவுக அம்மா ஒத்தக்கால்ல நின்னாக. இவுங்க தி.க.யில்ல. முடியாதுன்னுட்டு இப்படிப் பேரு வச்சாக. ஆனாலும் எங்க அத்தை இப்ப வரைக்கும் அகர கருப்பன்னுதான் கூப்பிட்டிட்டு இருந்தாக. இது கூட ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கில்ல. நான் கூட சேட்டை பண்ணும் போதும் கொஞ்சும் போது டேய் கருப்பான்னுதான் கூப்பிடுவேன்" மறுபடியும் "அகர கருப்பன்" என்று கூறி மீசையை முறுக்கிவிடுவது போல பாவனை செய்து சிரித்துக் கொண்டாள்.

"நல்ல பேரு"

என்னால் அங்கிருக்க இயலவில்லை. என்னை வெகுவாக எதுவோ தொந்தரவு செய்தது. அங்கு எதுவுமே இயல்பாக இருக்கவில்லை. சகல ஒழுங்குடன் நேர்த்தியாக இருந்த அந்த வீடு என்னை அதற்கு மேல் அங்கேயிருக்க அனுமதிக்கவில்லை. விரட்டியது! அங்கிருந்து எப்படியாவது தப்பி வந்துவிட்டால் போதுமென்றிருந்தது. கூடவே ஆத்திரமும் கோபமும் பொங்கிப் பொங்கி வந்தது.

"சரி மதி.. நான் அப்புறம் வர்றேன். அவர் வந்தாருன்னா வந்துட்டுப் போனேன்னு தகவல் சொல்லிடு"

"செத்த இருங்க மச்சான். அவரு இப்போ வந்துடுவாறு"

"இல்ல பரவாயில்ல.. பத்து நாள் இங்கதான் இருப்பேன். அடுத்து வர்றேன்" என்று சொல்லி எழ முற்பட்டேன்.

எனக்கு அங்கே ஒரு நிமிடம் கூட இருக்கப் பிடிக்கவில்லை. அவளை ஓங்கி கன்னத்தில் நான்கைந்து அறைவிட்டால் என்ன? அப்படியேதேனும் அசம்பாவிதம் அரங்கேறும் முன் நான் அங்கிருந்து வெளியேறிவிடுதலே இருவருக்கும் நலம் என்று பட்டது.

வாசலில் அப்போதுதான் உதிர்ந்தது போல் செம்பருத்தி ஒன்று கிடந்தது. கிரிலைத் திறந்து வெளியேறும் போது நீண்ட காலத்துக்குப் பிறகு என்னை ஒருமையில் பெயர் சொல்லி அழைத்தவள், "அடுத்து வீட்டுக்கு வரும் போது ஜாக்கில இருந்து ஒரு ஃபளூடா வாங்கிட்டு வர்றியா. என்னமோ.. சாப்பிடணும் போல இருக்கு" என்றாள்.

தெருவில் இறங்கி நடந்து கொண்டிருந்தபோது எல்லாம் மறந்து போய் வாசலில் அவள் கேட்டது மட்டும் திரும்பத் திரும்ப காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அந்த பத்து நாட்களில் அடுத்து அவள் வீட்டுக்குப் போகவேயில்லை. இனி எப்போதும் போகப் போவதாகவும் இல்லை.


O

Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால