Skip to main content

எம்.கோபாலகிருஷ்ணனின் 'பிறிதொரு நதிக்கரை'




தபால் தலைகள் சேகரிப்பதைப் போல, விதவிதமான நாணயங்கள் சேகரிப்பதைப் போல, நான் எனக்க்குப் பிடித்த எழுத்தாளர்களின் நூலாக்கம் பெற்ற முதல் படைப்புகளை வாசித்துவிடுவது என்று வைத்திருக்கிறேன். குறிப்பாக சிறுகதைகளை இப்படிச் சேகரித்து, அவர்களின் சமீப கால எழுத்துக்களோடு ஒப்பிட்டு வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். உண்மையில் இதை ஒரு பயிற்சியாகவே செய்து வருகிறேன். இப்படி ஒப்பிட்டு வாசிக்கும் போது, முதல் தொகுதியிலிருந்து இன்றைய எழுத்து வரை அதே அடர்த்தியுடனும் வீரியத்துடனும் எழுதி வருபவர்கள், எங்கோ ஆரம்பித்து எப்படியோ வந்து நிற்பவர்கள், குறிப்பிடத்தக்க படைப்புகளை முதல் தொகுதியில் கொடுத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சம் தங்களை புடம் போட்டு முக்கியமான படைப்பாளிப்பாய் வளர்ந்து நிற்பவர்கள் என்று பல்வேறு தரிசனங்களை இத்தகைய வாசிப்பின் மூலம் கண்டடைய முடிகிறது.

இப்படியான வாசிப்பின் தொடர்ச்சியாக எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் 'பிறிதொரு நதிக்கரை' தொகுப்பை வாசிக்க எடுத்தேன். இப்போது வாசித்து முடித்து இதை எழுதும் போது மேலே சொன்ன கடைசி வகைமையில் இவரை வைக்கத் தோன்றுகிறது.

அடிப்படையில் கவிதையில் இருந்து உரைநடைக்கு வந்தவர் என்பதால் அதன் தாக்கம் முதல் தொகுப்பு கதைகளில் சற்று அதிகமாகவே தெரிகிறது. தற்போதைய கதைகளில் இப்படியான இறுக்கமான மொழியைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அற்புதமான மொழி நடை கொண்ட எழுத்து இவருடையது.  "கோட்டை" போன்று வரலாற்று பின்னணியில் சொல்லப்பட்ட சிறுகதைக்கு இவரின் பிரத்யேகமான மொழி அழகாகப் பொருந்துகிறது. அதில் வரும் நிர்வாண ஓவியம் பற்றி வரும் ஒரு வரி - "அவளின் முகத்தில் அப்பியிருந்த சோகத்தின் இழைகள் அவளின் நிர்வாணத்தை மறைத்திருந்தன"

இவரது இந்த முதல் தொகுப்பு 2000 ஆம் வெளியாகியிருக்கிறது. இவற்றில் பெரும்பாலான கதைகள் எளிய மனிதர்களின் வாழ்வியல் சிக்கலைப் பேசுகின்றன. சமூக வாழ்வின் அபத்தத்தை எடுத்துரைக்கின்றன.




பொருள்வயின் பொருட்டு தற்தம் சொந்த மண்ணை விட்டு நகரங்களில் குடியேறியவர்களின் நினைவுகளில் ஊர் திரும்புதல் குறித்த ஏக்கம் நிறைவேறாத கனவாகவே அமிழ்ந்து போயிருக்கும். அக்கனவை நினைவாக்கும் வாழ்க்கை வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அது சாத்தியப்படாதவர்கள் கிடைக்கிற இலுப்பைப்பூக்களில் திருப்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான். அப்படியான பெரும்பான்மைகளில் ஒருத்தியின் கதைதான் "இருப்பு".

எளிய மனிதர்களின் அன்றாட பாடுகளை ஒரு நெசவாளர் வாழ்க்கைப் பின்னணியில் கொண்டு அழகாக எழுதப்பட்ட கதை "லச்சம்". எதிரே சாவு வீட்டை வைத்துக் கொண்டு சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் நடுவீட்டில் சீட்டு விளையாடும் அந்தக் கும்பல் அபத்தத்தின் உச்சம்.

சக உயிர்களின் மீதான பரிவு குறித்தும் ஆனாலும் தக்க சமயத்தில் அதை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத மனிதனின் இயலாமை குறித்தும் பேசும் "ஒற்றைச் சிறகு" சிறுகதை இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை என்று சொல்வேன்.  ஒரு கதைக்குத் தேவையான சூழலை ஒரு தேர்ந்த நெசவாளியின் லாவகத்துடன் இழையிழையாக பின்னி இணைக்கும் கலை முழுமையாக கைகூடப்பெற்ற கதையாக இதையே பார்க்கிறேன். இவர் தம் எழுத்து செல்ல வேண்டிய திசையை தீர்மானித்த கதையாக் இதுவே இருக்கக் கூடும் என்று இன்றைய கதைகளை வாசிக்கும் போது தோன்றுகிறது.

தனிமனித வாழ்விலும் அதன் பிரதிபலிப்பாக சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் மதிப்பீடுகளின் வீழ்ச்சியைப் பற்றியும், கால மாற்றங்களின் கேலிக் கூத்துகளை பற்றியும் பேசும் கதைகளாக "விடுதலை", "தேர்" ஆகிய கதைகளைக் கூறலாம். முன்னதில் கதையின் தலைப்பு முற்றிலும் வேறொரு பரிமாணத்தை அக்கதைக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. பின்னதில் தேரே பேசுவதாக கொண்ட உத்தி சுவாரஸ்யமாக இருக்கிறது. இவ்விரு கதைகளும் தாராளமய மாக்கலுக்கு பிந்திய கதைகள் என்பதுடன் இணைத்து வாசிக்கும் போது கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

அதே காலகட்டத்தில் இவருக்கு மாய எதார்த்தக் கதைகளின் மீது தனியொரு கவர்ச்சி இருந்ததை, "கோட்டை", "வலியின் நிறம்", "கையில் அடங்காத தாமரை" போன்ற கதைகளின் வழியே அறிய முடிகிறது. இதில் "கையில் அடங்காத தாமரை" கதை எனக்கு விமலாத்தித்த மாமல்லனின் "சிறுமி கொண்டு வந்த மலர்" சிறுகதையை நினைவு படுத்துகிறது.

எம்.கோ-வின் எழுத்து நடையிலும், எடுத்துக் கொள்ளும் கதைச் சூழல்களிலும் தற்போது எழுதி வரும் கதைகளில் முதல் தொகுப்பு கதைகளிலிருந்து நிறைய மாற்றங்களை உணர முடிகிறது.  இத்தகைய மாற்றங்களும் புதியவற்றுக்கான தேடலும், போதாமைகளைப் போக்கிக் கொள்ளும் முனைப்புமே அவரை தமிழின் குறிப்பிடத் தகுந்த புனைவெழுத்தாளராக நிலை நிறுத்தியிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.


O

Comments

Popular posts from this blog

மிருகம்

    அதிகாலையில் வரும்  வாட்ஸப்   குறுஞ்செய்திகளின்   கீச்சிடல்கள்   எரிச்ச லை க் கிளப்பத்   தொடங்கியிருந்தன . அவை  எதைப்   பற்றியதாக  இருக்கும் என்று  லஸண்ட்ராவுக்குத்  தெரியும்.  அப்பார்ட்மண்ட்டின்   அசோஸியேஸன் குழுமத்திற் கென்றே   தனியாகப்  பிரித்து  எலி   சத்தமிடுவதைப்   போல க்   கீச்சிடு ம் ஒலியைத்  தேர்ந்தெடுத்து  வைத்திருந்தாள்.    காலை யி லேயே   அதைப்  பார் த்து அன்றைய  தினத்தைக்   கெடுத்துக்கொள்ள வேண்டாம்  என்று முடிவு  செய் தவளாக ,   படுக்கை யை  உதறி  எழுந்தாள் . வானம்  மேகமூட்டமாயிருந்தது .  இரவில்  வரைந்து வைத்திருந்த  அக்ரலிக்  ஓவியத்தைப் பார்த்தாள்.  கருப்பு ,  மஞ்சள் ,  சாம்பல்  வண்ணங்களில்   தீட்டப்பட்ட   அரூப உருவங்க ள் பின் இருக்க ,  முன்னே  மரத்தாலான   ஒரு  பழைய   நாற்காலியை வரைந்து வைத்திருந்தாள்.  அது  ஒருவிதமான ...

இரு கோப்பைகள்

ஞா யிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தேன்.  முதலில் அந்தச் சத்தம் பக்கத்து வீடுகளில் யாரோ மெதுவாக சுவரில் ஆணியடிப்பதைப் போன்று கேட்டது. அடுத்த முறை அந்தச் சத்தம் நொய்டாவின் தெருவோர தேநீர்க் கடைகளில் சூடான தேநீருக்கு இஞ்சியைத் தட்டிப் போடுவதற்காக தட்டுவதைப் போன்று 'தொப் தொப்'பென்று கேட்டது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை இரவு பதினோறு மணிக்கு இவை இரண்டுமே சாத்தியமில்லை. அதுவும் இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரடங்கிப் போய்விடுகின்ற, பொதுப் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட அடுத்தவர்களுக்கு கேட்டுவிடாத கிசுகிசுக் குரலில் பேசும் மக்கள் வாழ்கின்ற சிட்னி போன்ற ஒரு பெரு நகரத்தில்  சுவர் ஆணிக்கோ, இரவுத் தேநீருக்கோ இந்நேரத்தில் வாய்ப்பு மிகவும் குறைவு.  "யாரோ கதவத் தட்டுற மாதிரியில்ல" என்று பக்கத்தில் படுத்திருந்த காவ்யா கேட்கும் போதுதான் அதை உணர்ந்தேன். எங்கள் ...

ஒளிரும் பச்சைக் கண்கள்

1 அன்று மதியம் நன்கு தூங்கிவிட்டிருந்தேன். கண் விழித்துப் பார்க்கும்போது இரவாகியிருந்தது. சட்டென்ற ஒரு கணத்தில் இது இரவா பகலா என்றொரு குழப்பம். மெல்ல நிதானித்து நினைவுக்கு மீண்டேன். இரவு, பகல், கிழமை என்று மொத்த காலமும் கிளை பற்றித் தொங்கும் இருட்டு வவ்வாலைப் போல தலைகீழாய்ப் போயிருந்தது. உணவு பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. காலை உணவு மதியத்துக்கும் மதிய உணவு மாலைக்கும் இரவுணவு நள்ளிரவுக்கும் தள்ளிப் போயிருந்தது. சில நாட்களில் இரு வேளைகள், அரிதாக சில பொழுதுகளில் ஒரே வேளை என்றும் சுருங்கிற்று. அன்றாடத்தின் சகல ஒழுங்குகளும் கலைக்கப்பட்டுவிட்டன. இரவாகியிருந்தபோதும் ஹாலில் விளக்கேதும் போடப்பட்டிருக்கவில்லை. கையிலிருந்த மொபைலில் டார்ச்சினை ஒளிரவிட்டு கவனமாக அடியெடுத்து படுக்கையறையிலிருந்து வரவேற்பறைக்குச் சென்றேன்.  கண்கள் மெதுவாக வெளிச்சத்துக்குப் பழகின. சுவரில் மாட்டப்பட்டிருந்த தூசு படிந்த திருமணப் புகைப்படத்துக்குப் பின்னால் பல்லியொன்றின் வால் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. டி.வி இருக்கும் டேபிளின் மேலே மீராவின் ஒற்றைக் கம்மல் கழற்றி வைக்கப்பட்டிருந்தது. ஸ்கூட்டி சாவி மரத்தால் செய்ய...