Skip to main content

தூயனின் இருமுனை - ஒரு வாசிப்பனுபவம்


வரும் வார இறுதியில் நடைபெறவிருக்கும் 'விஷ்ணுபுரம் விருது' விழாவுக்குச் செல்வதன் நிமித்தம் சில படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கற்ற வாசிப்பைவிட இது போன்ற ஒப்புக்கொள்ளப்பட்ட அர்பணிப்புடன் கூடிய வாசிப்பு அதுவரை அறிந்திறாத பல புதிய திறப்புகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது. இப்படியில்லையென்றால் சீ.முத்துசாமி, ஜெனியஸ் பரியத் போன்ற பெயர்களையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டேன் என்பதே உண்மை.

தமிழ் இலக்கியத்தில் கவிதை, நாவல் போன்ற வடிவங்களைக் காட்டிலும் சிறுகதைப்பரப்பில் மிகப் பெரிய அளவில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இப்போது புதிதாக எழுத வருபவர்களின் வரமும் சாபமும் அதுதான்.

இதுவரை சொல்லப்படாத கதைகளை அல்லது குறைந்தபட்சம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்காத முறையில் எழுத வேண்டிய நிர்பந்தம் இன்றைக்கு எழுத வருபவர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் இவ்விரண்டையும் பூர்த்தி செய்யும் சில கதைகளை உள்ளடக்கி வந்துள்ளது தூயனின் 'இருமுனை' தொகுப்பு (யாவரும் வெளியீடு).

இவரின் பெரும்பாலான சிறுகதைகள் மனித மனதின் நுட்பான அகச்சிக்கல்களை அலசுகின்றன.  தொகுப்பின் தலைப்புக் கதையான 'இருமுனை' சிறுகதையே தூயனை ஒரு நல்ல சிறுகதையாளராக அடையாளப்படுத்துவதற்குண்டான அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆங்காங்கே தலைகாட்டும் ஆசிரியனின் குரலை சற்று மட்டுப்படுத்தியிருந்தால் மிகச்சிறப்பான கதையாக என்றைக்கும் தூயனின் பெயர் சொல்லும் கதையாக நின்றிருக்கும்.

பால்ய கால நினைவுகளைக் கிளறும் 'மஞ்சள் நிற மீன்' மனதுக்கு நெருக்கமான படைப்பாக மிளிர்கிறது. 'பேராழத்தில்' என்ற சிறுகதையில் அவரின் மொழியும் புனைவும் இணைந்து ஒரு கச்சிதமான முடிவில் குவிந்து உச்சம் பெறுகிறது. ஆனால் இதை வாசிக்கும் போது நிறைய இடங்களில் ஜெயமோகன் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியவில்லை. குறிப்பாக அவரின் 'ஆயிரங்கால் மண்டபம்' சிறுகதையை.

என்னளவில் இத்தொகுப்பின் உச்சம் என்று இதிலுள்ள 'ஒற்றைக்கை துலையன்' குறுநாவலையே சொல்வேன்.  நேர்த்தியான கதைசொல்லலின் வழியே கட்டற்ற புனைவுவெளியைத் திறக்கிறது இந்நாவல்.  அதிலும் குறிப்பாக 'அர்த்தநாரி' உள்ளே வரும் இடமும் அதற்குப்பின் உள்ள தர்க்கமும் அட்டகாசம்!

நாட்டார் கதைமரபில் 'ஒற்றைக்கை துலையன்', தொன்மத்தின் வேர் பற்றி 'பேராழத்தில்', மனோவியல் தளத்தில் 'இருமுனை', சமூகத்தின் உதிரி மனிதர்களை முன்வைத்து 'இன்னொருவன்', 'தலைப்பிரட்டைகள்' என்று வாசகனைச் சலிப்புறவிடாமல் தொகுப்பெங்கும் வேறுபாடுகள் காட்டியிருக்கிறார்.

தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் தூயன் தன் வரவை 'இருமுனை'யின் வழியே சற்று அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.


O

Comments

Popular posts from this blog

இரு கோப்பைகள்

ஞா யிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தேன்.  முதலில் அந்தச் சத்தம் பக்கத்து வீடுகளில் யாரோ மெதுவாக சுவரில் ஆணியடிப்பதைப் போன்று கேட்டது. அடுத்த முறை அந்தச் சத்தம் நொய்டாவின் தெருவோர தேநீர்க் கடைகளில் சூடான தேநீருக்கு இஞ்சியைத் தட்டிப் போடுவதற்காக தட்டுவதைப் போன்று 'தொப் தொப்'பென்று கேட்டது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை இரவு பதினோறு மணிக்கு இவை இரண்டுமே சாத்தியமில்லை. அதுவும் இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரடங்கிப் போய்விடுகின்ற, பொதுப் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட அடுத்தவர்களுக்கு கேட்டுவிடாத கிசுகிசுக் குரலில் பேசும் மக்கள் வாழ்கின்ற சிட்னி போன்ற ஒரு பெரு நகரத்தில்  சுவர் ஆணிக்கோ, இரவுத் தேநீருக்கோ இந்நேரத்தில் வாய்ப்பு மிகவும் குறைவு.  "யாரோ கதவத் தட்டுற மாதிரியில்ல" என்று பக்கத்தில் படுத்திருந்த காவ்யா கேட்கும் போதுதான் அதை உணர்ந்தேன். எங்கள் ...

மிருகம்

    அதிகாலையில் வரும்  வாட்ஸப்   குறுஞ்செய்திகளின்   கீச்சிடல்கள்   எரிச்ச லை க் கிளப்பத்   தொடங்கியிருந்தன . அவை  எதைப்   பற்றியதாக  இருக்கும் என்று  லஸண்ட்ராவுக்குத்  தெரியும்.  அப்பார்ட்மண்ட்டின்   அசோஸியேஸன் குழுமத்திற் கென்றே   தனியாகப்  பிரித்து  எலி   சத்தமிடுவதைப்   போல க்   கீச்சிடு ம் ஒலியைத்  தேர்ந்தெடுத்து  வைத்திருந்தாள்.    காலை யி லேயே   அதைப்  பார் த்து அன்றைய  தினத்தைக்   கெடுத்துக்கொள்ள வேண்டாம்  என்று முடிவு  செய் தவளாக ,   படுக்கை யை  உதறி  எழுந்தாள் . வானம்  மேகமூட்டமாயிருந்தது .  இரவில்  வரைந்து வைத்திருந்த  அக்ரலிக்  ஓவியத்தைப் பார்த்தாள்.  கருப்பு ,  மஞ்சள் ,  சாம்பல்  வண்ணங்களில்   தீட்டப்பட்ட   அரூப உருவங்க ள் பின் இருக்க ,  முன்னே  மரத்தாலான   ஒரு  பழைய   நாற்காலியை வரைந்து வைத்திருந்தாள்.  அது  ஒருவிதமான ...

பெயரெச்சம்

அன்றுதான் ஷிஃப்ட் மாறியிருந்தது. முதல் நாள் பகலிரவு முடித்துவிட்டு உடனடியாக மறுநாள் அதிகாலை ஷிஃப்ட் எடுக்க வேண்டும். ஒரே ஷிஃப்ட் மூன்று மாதங்களுக்கோ, குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கோ தொடர்ந்தால்கூட சற்று பரவாயில்லாமலிருக்கும். வாரத்துக்கு ஒரு முறை மாறுவதும் ஆட்பற்றாக்குறையின் பொருட்டு ஒருவர் வராது போனாலும் அதையும் சேர்த்து எடுத்துப் பார்ப்பதும் உடலின் இயங்குவிதிகளுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம். ஆனால், வேறு வழியில்லை. பிழைப்பு இப்படி. ஷிஃப்ட் மாற்றத்தால் அதிகாலை சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டும் என்ற பரபரப்பிலேயே தூக்கம் சரியாககூடவில்லை.  கண்களை இறுக மூடிக்கொண்டு ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பித்தேன். கவனத்தை எண்களில், அவற்றின் வளைந்து நெளிந்த வடிவங்களில் குவிப்பதன் மூலம் சலனத்தைக் கட்டுப்படுத்தித் தூக்கத்தை வரவழைக்கும் உத்தி. பெரும்பாலான சமயங்களில் சரியாகவே வேலை செய்யும். சில நேரங்களில் ஆயிரங்களைத் தாண்டி எண்ணிக்கை மட்டும் ஓடிக்கொண்டிருக்கும். அன்று, அது சரியாக ஒத்துழைக்க, அப்போதுதான் சற்று கண்ணயர்ந்திருப்பேன். அழைப்பு மணி அடித்தது. பக்கத்திலிருந்த புவனாவை முழங்கையால் மெதுவாக இடித்தேன்...