Skip to main content

முடிச்சுகள் - சிறுகதை




தாணிப்பாறையை நோக்கி பயணம். இங்கிருந்து ஸ்ரீவி. ஸ்ரீவியிலிருந்து கிருஷ்ணன் கோவில். அங்கிருந்து வத்ராப்பு, அடுத்து தாணிப்பாறை. இப்படித்தான் இதற்குமுன்பு அங்கு போய் வந்திருந்தவர்கள் வழி கூறினார்கள். வழிதவறிப் போனாலும் பெரிய பாதகமில்லை. வண்டியை நிறுத்தி அருகில் இருக்கும் பெட்டிக்கடை ஒன்றில் வழி கேட்டால் சொல்லிவிடுவார்கள்.

கடந்த ஒரு வாரத் தேடலுக்கு இன்றாவது விடை கிடைக்குமா என்றெனக்குத் தெரியவில்லை. எங்கோ ஆரம்பித்து இன்று சித்தர் ஒருவரைத் தேடிய பயணத்தில் வந்து நிற்பதைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. தகவல் பகுப்பாய்வில் முனைவர்ப் பட்டம் என்பது மொட்டைத் தலை என்றால், சோழிச் சித்தரைத் தேடிய பயணம் முழங்கால் தானே. இரண்டுக்கும் முடிச்சுப் போடப் பணித்திருப்பதற்குப் பெயர் என்ன என்பதுதான் இப்போது வரை விளங்கவில்லை.

"இன்றைய தேதியில் ஆராய்ச்சிப் படிப்புக்கு நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு மிக முக்கியமானது. உலகமே தகவல்களை முன்வைத்துச் சுழன்று கொண்டிருக்கிறது. உலகில் இன்றைக்கு தங்கம், வெள்ளியைவிட மதிப்புமிக்க பொருளொன்று உண்டென்றால் அது தகவல் தான். கொட்டிக் கிடக்கும் தகவல்களை முறைப்படுத்தி வியாபாரமாக்கும் வித்தையைக் கற்று வைத்திருப்பவர்கள் எல்லாம் இன்று பணம் தின்று கொழிக்கிறார்கள். 'ஆப்-டைனமிக்ஸ்'-னுடைய நிறுவனர் ஜோதி பன்சால் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்ள் தானே? உங்களின் ஆளுமைக் குறிப்பைப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருக்கிறது. நாம் முறையாகத் தொடங்கும் முன்னர் உங்களுக்குச் சின்ன வேலை ஒன்று தருகிறேன். உங்கள் குடும்பத்தின் மூன்று தலைமுறை பற்றியத் தகவல்களைச் சேர்க்க வேண்டும். அவற்றை முறைப்படுத்தி 'ப்ரசண்டேஷன்' ஒன்று தர வேண்டும். மற்றதை பிறகு பேசிக் கொள்ளலாம்." பொறியியலில் தகவல் தொழிற்நுட்பப் பிரிவை எடுத்தும் மற்றவர்களைப் போல் அல்லாமல், கிடைத்த பன்னாட்டு நிறுவன வேலையை உதறிவிட்டு, அதிலேயே மேற்படிப்பு. அதோடு நிறுத்தியிருக்கலாம். 'தகவல் பகுப்பாய்வில்' ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர விரும்பி பேராசிரியர் ஜோஷியிடம் வந்து நின்றேன். எனக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு ஒப்புக் கொள்ளுமுன் அவர் கொடுத்த முன்வேலை இது. ஆரம்பத்தில், மிகச் சுலபமான வேலை என்று தவறாக எடை போட்டுவிட்டேன். ஆனால் பேராசிரியர் ஜோஷி ஏன் இந்த வேலையைக் கொடுத்தார் என்பது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விளங்குகிறது. இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன. அதற்குள் கிடைத்த தகவல்களையெல்லாம் பட்டியலிட்டுத் தொகுத்து வழங்க வேறு வேண்டும். தகவல்களைச் சேகரிப்பதைவிட அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவே அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அப்பா வழித் தாத்தாவைப் பற்றியத் தகவல் சேகரிப்பே ஆகப்பெருஞ் சவாலாய் இருக்கிறது. அவருடைய பெயர் நமச்சிவாயம். என் அப்பாவுக்கு பத்து வயது நடக்கும் போதே வீட்டைவிட்டு விலகிப் போய்விட்டார். ஒரு வேளை இப்போது உயிரோடிருந்தால் அவருக்கு எழுப்பதைந்து வயது இருக்கக் கூடும். அவரின் நினைவாக அப்பத்தாவுடன் எடுத்த ஒரே ஒரு புகைப்படம் மட்டும் உண்டு. அதையுடம் கூட ராசியில்லாத புகைப்படம் என்று கூறி அப்பத்தா அவளுடைய ட்ரங்குப் பெட்டிக்குள் பொதித்து வைத்திருக்கிறாள். ஒருமுறை அப்பாவின் 'பியூசி' சான்றிதழை நகலெடுக்க பெட்டியைப் பரணிலிருந்து இறக்கிய போதுதான் அப்புகைப்படத்தைப் பார்த்தேன். அதில் அவர் நாற்காலியில் தன் இடது காலின் மேல் வலது காலைப் போட்டு ராணுவ அணிவகுப்பில் நிற்பவன் போல் நாடியைச் சற்றுத் தூக்கி, முறைத்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பார். கறுப்பு நிற கோட்டும் வேட்டியும் அணிந்திருப்பார். பக்கத்தில், அப்பத்தா கொசுவம் வைத்துக் கட்டிய கண்டாங்கிச் சேலையை இழுத்துப் பிடித்தவாறு கூச்சத்துடன் நின்று கொண்டிருப்பாள். சிறுவயதில் தாத்தாவைப் பற்றி அப்பத்தாவிடம் விசாரிக்கும் நேரங்களில் எல்லாம் பேச்சை மடைமாற்றி ஏதேனும் கதை சொல்ல ஆரம்பித்துவிடுவாள். அவள் சிருஷ்டிக்கும் உலகுக்குள் நுழைந்து வெளிவரும் போது பொல பொலவென்று விடிந்து போயிருக்கும். அதன் பிறகு ஒரு நாள் அப்பா நல்ல மனநிலையில் இருக்கும் போது இதைப் பற்றிக் கேட்டிருக்கிறேன். அந்தக் காலத்தில் அவர் தொட்ட தொழிலெல்லாம் நட்டம். கடன் கழுத்தை நெரிக்க ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்பதாகக் கூறினார். நீங்கள் யாரும் தேடிப் போகவில்லையா என்று கேட்டதற்கு 'போயிருக்கலாம்' என்பதாகவே பதிலிறுத்தார். பின்பு அப்பாதான் தலையெடுத்து, இருந்த கடன்களை அடைத்து, தன் இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார். இப்போது அப்பத்தாவையும் உடன் வைத்துப் பார்த்துக் கொள்கிறார். ஆனாலும், அது பற்றிய சலிப்போ வருத்தமோ, தன் அப்பாவின் மேல் கோபமோ அவர் கண்களில் ஒருபோதும் தென்பட்டதில்லை. இப்படி அங்குமிங்கும் கிடைத்த தகவல்களைத் தவிர, பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு விசயம் என்னிடம் மறைக்கப்படுவதாக உள்ளுணர்வு மட்டும் எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது. சின்ன அத்தை ஒருத்திதான் சிறுவயதிலிருந்தே என்னையும் சகமனிதனாக பாவித்து எதையும் மறைக்காமல் பேசுபவள். அவளின் சுபாவமே அப்படித்தான். வீட்டின் பல்வேறு நிகழ்வுகளின் காரண காரியங்களை அவள் மூலமாகவே அறிந்து வைத்திருந்தேன். சேத்தூரில் கட்டிக் கொடுத்து இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக கடந்த சில வருடங்களாக இரு குடும்பங்களுக்கும் பேச்சு வார்த்தையில்லை. ஒரு கடாவெட்டின் போது, சீட்டு விளையாட்டில் அப்பாவுக்கும் சின்ன மாமாவுக்கும் வாக்குவாதம் முற்றிவிட்டது. அன்றிலிருந்து சின்ன அத்தை இந்தப் பக்கம் வருவதேயில்லை. நாங்களும் போவதில்லை. சின்ன அத்தை வீட்டில் போய் நின்ற போது, அத்தை டி.வியில் சீரியல் ஒன்றில் லயித்தவாறே இராட்டை சுற்றிக் கொண்டிருந்தாள். பார்த்து ஐந்தாறு வருடங்களாவது இருக்கக் கூடும். ஆனாலும் அடையாளம் கண்டு கொள்வதில் அவளுக்குப் பெரிய சிரமமேதும் இருக்கவில்லை. "அடடே. வாங்க மருமகனே.. இப்போத்தேன் இந்த அத்தக்காரிய கண்ணு தெரிஞ்சதாக்கும் " என்ற சின்னக் குத்தலுடனே வரவேற்றாள். சடுதியில் இராட்டையை ஓரம் கட்டிவிட்டு, ப்ளாஸ்டிக் சேரில் படிந்திருந்த தூசை தன் முந்தானையால் துடைத்து அவனை உட்காரச் செய்தாள். "அத்தே.. நல்லா இருக்கியா. மாமா எல்லாஞ் சவுக்கியமா?" "எங்களுக்கென்ன மருமகனே காளியாத்தா புண்ணியத்துல நல்லாருக்கோம். அண்ணன் எப்படியிருக்கு?அதிசியமா காத்து இந்தப் பக்கம் அடிச்சுருக்கு. என்ன ஏதும் கல்யாண சேதியா?" "அய்யயே அப்படியெல்லாம் இல்ல அத்தே. சும்மா இந்தப் பக்கமா ஒரு சோலியிருந்துச்சு. அப்படியே உன்னையும் பாத்துட்டுப் போலாம்ன்னு வந்தேன்" "கல்யாணக்களை தான் வந்துடுச்சே எம் மருமகனுக்கு. எனக்கு ஒரு பொம்பளப் பிள்ள இருந்தா ஒத்தவரியிலே கட்டிக்கிறீயா இல்லியானுட்டு உங்க வீட்டு வாசல்ல வந்து நின்னுருப்பேன். வாச்சது இரண்டும் ஆணாப் போச்சு. ஊர் மேஞ்சுட்டுத் திரியுதுக. அய்யே.. செத்த இரு கலரு ஏதாச்சும் வாங்கியாறேன்." "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மத்தே. கொஞ்சம் கருப்பட்டிக் காபி மட்டும் போட்டுத் தாறீயா?" வெந்நீரில் தட்டிப் போடப்பட்டிருந்த கருப்பட்டி, பாகுப் பதத்துக்கு வருவதற்கும் நான் அடுப்படிக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. அத்தையின் ஒழுங்கு அடுப்படியின் ஒவ்வொரு அங்குலத்திலும் பிரதிபலித்தது. அங்கிருந்த சுவரில் தலை படாமல் சாய்ந்து கொண்டே, "யத்தே.. உங்க அப்பாரு எதுக்கு வீட்டைவிட்டு ஓடிப் போனாரு?" என்றேன். கண்களைச் சுருக்கி ஓரக் கண்ணால் என்னைப் பார்த்தவளின் அந்தப் பார்வையில் ஓராயிரம் கேள்விகள் இருந்தன. ஆனாலும் அவள் சொன்னாள் "என்ன திடீர்ன்னு தாத்தன் மேல பாசம் பொங்கிட்டு. உண்மையச் சொல்லணும்னா அவர் மொகம் கூட எனக்கு நெனவுல இல்லலே. அவர் எங்கள விட்டுட்டுப் போகும் போது எனக்கு நாலு வயசு. உங்க பெரியத்தைக்கு ஆறு வயசு. அவரு பண்ணாத தொழிலே இல்லயாம்டா. கொஞ்ச நாள் காபிக் கடை வச்சுருக்காரு. அப்புறம் பழ வியாபாரம். கொஞ்ச நாள் அரிசிக் கடை. இப்படி ஏகப்பட்ட தொழிலு. கொஞ்ச நாள் சாராயம் கூட வித்தாருன்னு சொல்லுவாக. எல்லாம் அவரு நேரம். எதுவும் சரியா வரல. அதோட அவருக்கு தீராத காசம் இருந்துச்சுப் போல. எப்பவும் இருமிக்கிட்டே இருப்பாராம். எங்க பிள்ளைகட்குத் தொத்திக்குமோன்னு வீட்டை விட்டுப் போயிட்டாராம். இதெல்லாம் எங்க மாமியாக்காரியோட அக்கா ஒருத்திச் சொன்னா. இதுல எம்பூட்டு நெசமோ தெரியாது. எங்களுக்கு எங்கண்ணன் தாம்லே அப்பா. அப்புறம் ஏன் இம்பூட்டு வீம்புன்னு கேக்குறியா. அது அப்படித்தான். அந்தக் கணக்கெல்லாம் உங்களுக்குச் சொன்னாலும் புரியாது." - இதைச் சொல்லிவிட்டு கண்களை இடுக்கிச் சிரித்ததால் தான் அந்தக் கண்ணீர் வந்திருக்கும் என்றுதான் நானும் நம்ப விரும்பினேன். விடைபெற்றுக் கிளம்பும் போது அத்தை சொன்னாள் "ஏய் மருமகனே.. அடுத்த தடவயாவது அத்தையை பாக்க மட்டும் இந்தப் பக்கம் வந்துட்டுப் போங்க" "ஒழுங்காப் பிடிச்சு ஒண்ணுக்குப் போகத் தெரியாத காலத்துல இருந்தே நானும் உங்க தாத்தனும் ஸ்நேகிதம். ஊர்ல ஆயிரம் சொல்லுவாய்ங்க. அதெல்லாம் உண்மையில்ல. அவனுக்கு வியாபாரம் சரிப்படல. மனசு மொத்தம் கருணைய வச்சுட்டு ஒருத்தன் நுறுவிசா வியாபாரம் பண்ணி ஜெயிச்சுட முடியும்முன்னு நினைக்கிறயா? ஆளுக்கு ஏத்தமாதிரி பேச்ச மாத்தணும். விறைப்பா இல்லாம வளையணும். வேண்டப்பட்டா குனியணும். அதததுக்குன்னு ஒரு நேக்குப் போக்கு இருக்கு. இதெல்லாம் அவனுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது தெரியுதா. தனக்கு வரவேண்டிய காசை திரும்பக் கேக்கவேக் கூச்சப்பட்டு கொளஞ்சவன் அவன். தலையில தட்டி நாந்தான் வாங்கிக் கொடுத்தேன். இந்தக் காலத்தில நல்லவனா இருந்தாப் பத்தாது நாசூக்கா இருந்தாத்தான் பிழைக்க முடியும்.. சரிதான!" இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அப்பழுக்கேறியிருந்த வேட்டியில் சுருட்டி வைத்திருந்த ஈரப்புகையிலையைக் கிள்ளி எடுத்து வாயில் ஒரு பக்கமாய் ஒதுக்கிக் கொண்டார் அருணாச்சலம் பாட்டையா. மெதுவாகச் சாறை விழுங்கிவிட்டுத் தொடர்ந்தார். இப்போது முன்பை விட அவர் குரல் தாழ்ந்திருந்தது. கண்களால் ஒருமுறைச் சுற்றி நோட்டம் விட்டுக் கொண்டார். "யாருக்கும் தெரியாத.. ஏன் உங்க அப்பத்தாவுக்குக் கூடத் தெரியாத ரகஸ்யம் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க. காரியாப்பட்டியில உங்க தாத்தனுக்கு ஸ்நேகிதி ஒருத்தி இருக்கா. ஆமா.. ரகசிய ஸ்நேகிதிதேன். பேச்சி அவ பேரு. அவளப் போயிப் பார்த்தயினா மேற்கொண்டு ஏதும் விபரம் கிடைக்கலாம்" மொத்தமாக மூன்றே தெருக்கள் மட்டும் கொண்ட காரியாப் பட்டியில் பேச்சியம்மாள் பாட்டியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் அத்தனை சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. நமச்சிவாயம் தாத்தாவின் பெயரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதும் வாஞ்சையாக கன்னத்தைத் தழுவி முத்தமிட்டுக் கொண்டாள். அப்பாவையும், அத்தைகளையும் பற்றி விசாரித்தாள். அவர்களுக்கு இவளைத் தெரியாதிருக்கலாம். ஆனால் அவர்களைப் பற்றி அனைத்தையும் பேச்சிப் பாட்டி தெரிந்து வைத்திருந்தாள். கிளம்பும்போது உப்பிட்டு அவித்த நிலக்கடலையும், பனங்கிழங்குக் கட்டொன்றும் கொடுத்தனுப்பினாள். "வியாபாரம் நொடிச்சுப் போனதுல ஆளு கொஞ்சம் தொவண்டுதேந் போயிட்டார். பிள்ளையள எப்படியாவது கரையேத்துணுமேங்கற கவலை அவர கரையான் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா அரிச்சுத் தின்ன ஆரம்பிச்சது. அப்போவெல்லாம் திடீர்ன்னு எங்காவது இரண்டு மூணு நா ஆளே காணாமப் போயிடுவார். கேட்டா இந்தக் கோவிலுக்குப் போனேன் அந்தச் சாமியாரப் பார்த்தேன்னு சொல்லுவார். அதுக்கு மேல அவர என்ன கேட்க. கொஞ்சம் கொஞ்சமா அவரு என்னவிட்டு விலகிப் போறார்ன்னு மட்டும் புரிஞ்சுட்டு. அப்போவெல்லாம் அடிக்கடி சதுரேரி மலைக்குப் போயிட்டு வந்தார். அங்க இருக்குற சோழிச் சித்தர் தான் தன்னோட குருன்னு சொல்லிட்டு இருப்பார். ஒவ்வொரு மாசமும் அம்மாவசை பெளர்ணமிக்கு அவரோட சேர்ந்து சதுரேரி மலையில காளிப் பூசைக்குப் போயிடுவார். இதோ இங்கதேன் கயத்துக் கட்டில்ல படுத்துக்கிட்டு இருந்தார். ஏ பேச்சி.. வெக்கையா இருக்கு, தாளல. நந்தவனத்துப் பக்கம் போயிட்டு தலைக்கு நாலு சொம்பு தண்ணி விட்டுட்டு வர்றேன்னு கிளம்புனவர். அதுதான் அவர நான் கடைசியாப் பாத்தது." தாணிப்பாறையை அடையும் போது மணி ஐந்தைத் தொட்டிருந்தது. சமீபத்திய மழையால் தாணிப்பாறையை நிறைத்து ஆறு ஓடிக்கொண்டிருந்தது. குரங்குகளின் சலசலப்பில் மரங்கள் எழுப்பியச் சத்தம் காடெங்கும் எதிரொலித்தது. பெளர்ணமி என்பதால் மக்கள் போக்கு வரத்து கொஞ்சமிருந்தது. ஆனால் எல்லாம் மலை இறங்கும் கூட்டம். மாலை ஆறு மணிக்கு மேல் பொதுவாக யாரும் மலையேறுவதில்லை. கொஞ்ச நேரம் அங்கிருந்த பாறை ஒன்றில் அமர்ந்து ஆற்றின் குளிர்ந்த நீருக்குக் காலைக் கொடுத்து அமர்ந்திருந்தேன். அங்கிருந்தவர்களிடம் வழி கேட்டு ஏற ஆரம்பிக்கும் போது மெதுவாக இருட்டத் தொடங்கியிருந்தது. எனக்கு காடும் மலையும் அத்தனை பரிச்சயமில்லை. ஆனாலும் ஏதோ குருட்டுத் தைரியத்தில் ஏறத் தொடங்கியிருந்தேன். ஒருவழியாக முழுவதும் இருள் கவியும் முன் காளி பீடத்தை வந்தடைந்தேன். கரடி துரத்தித் தப்பி வந்தவர்கள் கதை வேறு நினைவுக்கு வந்து போனது. இருள் சூழச் சூழ சிறிய இலையசைப்பு கூட அதீத பயத்தைத் தருவதாய் இருந்தது. அவர் வருவதற்கான சாத்தியம் பற்றிய நிகழ்தகவு குறித்தெல்லாம் கவலைப்படாமல், சோழிச் சித்தருக்காகக் காத்திருந்தேன். நேரம் ஆக ஆக பயம் பனி போல மூடத் தொடங்கியது. இலைகளின் இடுக்கின் வழி வந்து விழுந்த நிலவொளியில் பட்டு அங்கிருந்த காளியின் சிலை இன்னும் அச்சமூட்டுவதாகத் தோன்றியதது. பூச்சிகளின் இரைச்சலால் காடு நிறைந்திருந்தது. அதோடு, தூரத்தில் ஓடும் ஆற்றின் சலசலப்பும் சேர்ந்து அவ்விடத்தின் அமானுஷ்யத் தன்மையைக் கூட்டிக் காட்டியது. எவ்வளவு நேரம் அந்தப் பனியிலும், பயத்திலும் கழிந்தது என்று தெரியவில்லை. திடீரென சுற்றியிருந்த புதர்ச் செடிகள் அசையும் ஓசை கேட்டது. கரடி பற்றிய பயத்தில் அந்தக் குளிரிலும் எனக்கு உள்ளங்கைகள் வியர்த்துவிடத் தொடங்கியிருந்தன. நீண்ட தாடியும், காவி வேட்டியுமணிந்த அந்த உருவம் வெளிப்பட்ட போது என் இதயத்தின் ஓசை காதுகளை எட்டியது. பீடத்துக்கு கீழ் ஒரு கல்லில் அமர்ந்திருந்த என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, காளி சிலையை தான் கொண்டு வந்த எண்ணெய்யால் துடைத்தார். அங்கிருந்த விளக்கை ஏற்றினார். பின்னர் கமண்டலம் போலிருந்த ஒன்றிலிருந்து நீரை ஊற்றிக் கழுவினார். மடியில் கட்டியிருந்த குங்குமத்தை பெருவிரலில் எடுத்து சிலையின் நெற்றியில் அப்பினார். மிச்சமிருந்ததை நாமம் போல் தனக்கும் இட்டுக் கொண்டார். கையோடு கொண்டு வந்திருந்த காட்டுப்பூக்களை சிலையின் காலருகே படைத்தார். அப்படியே அங்கே முதுகை நிமிர்த்தி கண்களை மூடி அமர்ந்தார். ஒரு நிமிடம் காளி நிஜமாகவும் எதிரே அமர்ந்திருந்த அவர் சிலையாகவும் மாறிவிட்டது போல் எனக்குத் தோன்றியது. காளி சிலையின் முன் எரிந்து கொண்டிருந்த தீபம் காற்றுக்கு அசைவது அவ்விடமே அதோடு சேர்ந்து அசைவதைப் போன்று இருந்தது. அவரின் இடது புருவத்திலிருந்து நெற்றிக்கு குறுக்காக வெட்டுக் காயமொன்று இருந்தது. கண்களைத் திறந்தவர் என்ன வேண்டும் என்பதைப் போலப் என்னைப் பார்த்தார். விசயத்தைக் கூறினேன். அவரிடமிருந்து பதிலேதுமில்லை. மீண்டும் கண்களை மூடி மெளனமானார். "சாமி.. எங்க தாத்தாவப் பத்தி ஏதும்.." என்று நான் பேசி முடிக்கும் முன்னரே என்னைப் பார்த்து "முதல்ல போடா இங்கேயிருந்து" என்று உக்கிரம் கொண்டு முழங்கினார். அப்போதுதான் எரியும் ஜோதி பிரதிபலித்த அந்தக் கண்களைப் பார்த்தேன். அவை, எனக்கு நன்கு பரிச்சயமான கண்களை போல் இருந்தன.
O

Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால