Skip to main content

டொரினா - சிறுகதை





ம்மா மிகச் சாதாரணமாகத்தான் இந்தச் செய்தியைக் கூறினாள். இரவுச் சாப்பாட்டுக்கு சோள தோசையும், மல்லிச் சட்னியும் வைத்திருக்கிறேன். உனக்குக்கூட ரொம்பப் பிடிக்குமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையில் நிறுத்தி விசயத்தைச் சொன்னாள். வசந்தா அக்கா இறந்துவிட்டாளாம். அதுவும் தற்கொலையாம் என்றாள். அவ்வளவுதான் அதற்குப் பிறகு அவள் பேசிய எதுவுமே என் காதில் விழவில்லை. 

மலர்விழியிடம் ஹிமாலயா என்றெழுதியிருந்த ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு, கட்டியிருந்த கைலியிலிருந்து ட்ராக்சுக்கு மாறினேன். ஒரு மாதிரி புழுக்கமாக இருக்கிறது. கடற்கரை வரையில் ஒரு நடை போய்வருகிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு, செருப்பையணிந்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினேன். கிரைண்டரில் ஆட்டி வைத்திருந்த மாவை வழித்துக் கொண்டிருந்தவள், நெற்றியில் வந்து விழுந்த முடியை புறங்கையால் ஒதுக்கிவிட்டு 'சரி' என்றாள்.

இறங்கி நூறடி நடந்தால் கடற்கரை வந்துவிடும். மனது சஞ்சலப்பட்டுப் போகும் தருணங்களில் எல்லாம் முகத்தில் காற்று பட கொஞ்சம் தூரம் கடலைப் பார்த்து நடந்து வந்தால் போதும் எனக்கு. வீடு திரும்பும் போது, கோடைக்கால வானம் போல மனம் தெளிந்து போயிருக்கும். 

செருப்பை மணலில் களைந்துவிட்டு, அலைவந்து கால் வருடும்படி, நிலவொளி பட்டு ஒளிரும் கடலையும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். அலைபட்டு உள்ளங்காலில் ஏறிய குளுமை வசந்தா அக்காவின் உள்ளங் கைகளை நினைவு படுத்தியது.

அக்கா தன் இருபதுகளில் ஜொலித்துக் கொண்டிருந்த நேரம் நான் என் பதின்களை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். அவள் வீடும், எங்கள் வீடும் இருப்பது ஒரே வளவுதான். நான் குழந்தையாய் இருந்ததிலிருந்து என்னைத் தூக்கிக் கொஞ்சியவள் தான் என்றாலும், அவள் 'ச்ச்சமத்து' என்று என் கண்ணங்களை அள்ளும் போது கழுத்தைக் குனிந்து, உடல் குறுகி கூச்சத்தில் நெளிவேன். அப்போது அவள் அம்மாவிடம் சொல்வாள் 'அக்கா, பிள்ளைக்கு மீசை முளைக்க நேரம் வந்துடுச்சு' என்று கூறி என்னைப் பார்த்து கண் சிமிட்டுவாள். நான் மீண்டும் நெளிவேன். 'அடிப் போடி இவளே.. இன்னும் படுக்குற பாயில உச்சா போயிட்டு திரியுதான். இவனுக்கு மீசை ஒண்ணுதான் கேடு' என்று அம்மா அங்கலாய்ப்பாள். 

என்னால் இப்போதும் அந்தக் கைகளின் குளுமையை உணர முடிகிறது. நினைவுகளைப் போல, என்னால் எப்படியோ உணர்வுகளையும் மீட்டெடுக்க முடிகிறது. ஆயிரம் மலர்களுக்கிடையேயும், கோகுல் சாண்டல் பவுடர், கழுத்து வியர்வை நனைந்து எழும் அவளின் பிரத்யோக வாசனையை என்னால் இப்போதும் பிரித்து உணர முடியும். 

வசந்தா அக்கா நன்றாக ஓவியம் வரைவாள். அவளது ஓவியங்களால் ' நன்று - மிக நன்று' குறிப்புகளை வாங்கி  நிறைந்தன என் ஓவியப் பயிற்சிப் புத்தகங்கள். என் வீட்டின் சிவப்பு சிமெண்ட் பாவிய தரையில், அப்பாவின் எழுத்து மேசையை இழுத்துப் போட்டுக் கொள்வாள். எனக்கும் அவளுக்கும் மட்டுமே கேட்கும் ஒலியில் 'மோகன்' நடித்தப் படப் பாடல்களைப் பாடிய படியே, எனக்கான படங்களைப் போடுவாள். வராண்டாவில் மாட்டப் பட்டிருக்கும் குண்டு பல்பின் ஓளியில், நெற்றியிலிருந்து அவளின் கழுத்துக்கு இறங்கும் வியர்வைக் கோடுகளின் மினுமினுப்புகளை ரசித்துக் கொண்டிருப்பேன். 

சட்டென்று வரைவதை நிறுத்தி, ஓரக் கண்ணால் பார்த்து, 'என்னலே' என்பது போல, ஒரே ஒரு புருவத்தை மட்டும் தூக்குவாள். நான் வெட்கிக் குனிந்து, வெட்டுப்படப் போகும் ஆடுபோல தலையை ஆட்டுவேன். அதைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொள்வாள். 

அவளின் சிறு வயதிலேயே அப்பா தவறிவிட்டார். அம்மா மட்டும் தான். சொஸைட்டிக்கு தறி நெய்து கிடைக்கும் கூலியில் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார். ஆனாலும் எப்படியோ உருட்டிப் பிரட்டி அக்காவை பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்துவிட்டார். குடிகார அண்ணனைத் தவிர அவள் அம்மாவுக்கும் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள நாதியில்லை. அவர்களின் எல்லா சுக துக்கத்திலும் அம்மாதான் தோள் கொடுத்து நின்றிருக்கிறார். 

* * * 

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. அக்கா என்னைத் துணைக்கு அழைத்துக் கொண்டாள். நானும் அவளும் மட்டும் பெண்கள் அமரும் பகுதியில் அமர்ந்து 'காதல் கோட்டை' படம் பார்த்தோம். அவள் வீட்டில் இன்னும் சில தோழிகளும் உடன் வருவதாய்ச் சொல்லியிருந்தாள். ஆனால் அப்படி யாரும் வரவில்லை. இடைவெளியில் அரிசி முறுக்கு வாங்கிக் கொடுத்த போது, 'ஏலே.. கூட என் ப்ரண்டுக யாரும் வரலேன்னு அம்மாக்கிட்ட போயி சொல்லிடாதே என்ன' என்றாள். 

எங்க அம்மாகிட்டயா.. உங்க அம்மாகிட்டயா..

ரெண்டு பேர்கிட்டயும் தான். 

படம் முடிந்து திரும்பி வரும் போது, 'படம் பிடிச்சதாலே.. அஜித் சூப்பரா இருக்காம்ல' என்றாள்.  அக்காவுக்கு இன்னொரு ஆணையும் பிடிக்கிறது. அதுவும் அவள், அவனை ரசிக்கவெல்லாம் செய்கிறாள் என்று உணர்ந்த போது நான் அஜித்தை முற்றிலுமாக வெறுக்கத் தொடங்கியிருந்தேன்.

நடந்து வந்து கொண்டிருந்த எங்களின் பின்னால், சரியாக மூன்று முறை சைக்கிள் பெல் கேட்டது. இந்தச் சத்தம் எனக்குப் பழக்கமான ஒன்று. நான் மட்டும் திரும்பிப் பார்த்தேன். கலர் கதிரேசன் அண்ணன் தான் தனது லோடு சைக்கிளை அழுத்தி வந்து கொண்டிருந்தார். இந்த முறை காலிப் பெட்டி தான் இருந்தது. அண்ணன் தான் எங்கள் ஊரில் உள்ள பெட்டிக் கடைகளுக்கு கலர், சோடா முதலியன சப்ளை செய்வார். தீவிரமான ரஜினி ரசிகர். அப்போது கூட முத்துப் பட ரஜினி போல வெள்ளை ஜிப்பா, கழுத்தில் ஒரு சிவப்புத் துண்டு, நெற்றியில் குங்குமம் என்று வைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

ஒவ்வொரு வருடமும் ரஜினி பிறந்த நாளுக்கு, பெரிய தட்டி கட்டி, ஸ்பீக்கர் வைத்து, நாள் முழுக்க ரஜினி பாட்டுகளை ஒலிக்க வைத்துக் கொண்டிருப்பார். என்னைப் போன்ற பிள்ளைகளுக்கு நோட்டும் பேனாவும் கொடுப்பார். அப்படியே நாங்களும் ரஜினி ரசிகர் ஆனோம். ஆனால், அக்காவுக்கு ஏனோ கமல் தான் பிடிக்கும். 

வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் பிள்ளையார் கோவில் தெரு முக்கு வரை பின்னாலேயே வந்தார். மீண்டும் மூன்று முறை பெல் அடித்து இந்த முறை எங்களுக்கு சைடில் வந்து சைக்கிளை நிறுத்தினார்.  ஒரு காலை சைக்கிளின் பெடலிலும், மறுகாலைத் தரையிலும் ஊன்றிய படி நின்று கொண்டு, 'என்னடா சரவணா.. நீ கூட நான் டொரினா வாங்கித் தந்தா குடிக்க மாட்டியோ' என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மலங்க மலங்க அக்காவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

'இதெல்லாம் ஒரு படமால்லே.. அடுத்த வருசம் எப்படியும் தலைவர் படம் வந்துடும். அப்போ வாடே நான் உன்னக் கூட்டிட்டுப் போறேன். தலைவரு படத்த முதல் நாள் பாத்திருக்க மாட்டேல்ல.. நம்ம மாரியம்மன் கோவில் திருவிழா மாதிரி இருக்கும் டே' என்றார். 

அக்கா, என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். 'யார்ட்டயும் சொல்லிடாதே சரியா' என்றாள். எதைச் சொல்கிறாள் என்பது புரியாத போதும், எதையுமே சொல்லக் கூடாது என்பதாக முடிவெடுத்துக் கொண்டேன். 

* * *

பன்னிரெண்டாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு பரிட்சை நடந்து கொண்டிருந்த நேரம். அக்காவும் பன்னிரெண்டாம் வகுப்பு தான் எழுதினாள். பெரிய பரிட்சை ஆதலால், என்னைப் போன்ற சிறு வகுப்புப் பிள்ளைகள் சத்தம் போட்டுவிடக் கூடாது என்பதால் எங்களுக்கெல்லாம் விடுமுறை விட்டிருந்தார்கள்.

விளையாடுவதற்காக வண்ண வண்ண கோலிக் குண்டுகளை டவுசரின் இரண்டு பைகளிலும் திணித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். அங்கே, சம்முகம் தாத்தாவின் பெட்டிக் கடையின் முன்னர் கதிரேசன் அண்ணனின் லோடு சைக்கிள் நின்று கொண்டிருந்தது. அவரது சைக்கிளை அடையாளம் காண்பது மிகவும் எளிது. அண்ணாமலை படத்தில் ரஜினி சைக்கிள் போலவே இருக்கும். அதில் இருக்கும் முருகேசன் என்ற பெயர் கூட அண்ணாமலை படத்தின் டைட்டில் போலவே எழுதப் பட்டிருக்கும்.  சைக்கிளின் இரண்டு பக்கங்களிலும் கோலி சோடா, கலர் மற்றும் டொரினாக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

கதிரேசன் அண்ணன் அங்கேதான் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். நான் வருவதைப் பார்த்ததும் சிகரெட்டை அணைத்துவிட்டு, 'டேய் சரவணா.. இங்க வாடா' என்றார்.

'அண்ணே.. கோலி விளையாடப் போறேண்ணே' 

'அடப் போகலாம் இருடா.. டொரினா குடிக்கியா' 

விளையாட்டெல்லாம் மறந்து ' சரியண்ணே' என்றேன்.

முதலில் தன் சைக்கிள் பெட்டியிலிருந்து எடுக்கப் போனவர், பின்னர் சம்முகம் தாத்தாவிடம் சொல்லிவிட்டு ஐஸில் குளிர வைக்கப்பட்டிருந்த டொரினா ஒன்றை எடுத்து வந்தார். அதன் மூடியை அத்தனை லாவகமாக தன் பற்களாலேயே திறந்தார். பின்னர் ஒரு முறை நானும் அது போலவே முயற்சித்து வாய் கிழிந்து இரத்தம் வந்தது தனிக் கதை.

அதுவரை ஒரு முழு டொரினாவைக் குடித்ததேயில்லை. வீட்டுக்கு விருந்தினர்கள் வரும் போது, நான் கடையிலிருந்து வாங்கி வருவேன். அப்போது, அதிலிருந்து ஒரு டம்பளரில் பாதிவரை ஊற்றி அம்மா தருவாள். டொரினாவை டம்பளரில் ஊற்றிக் குடிப்பதே தனிக்கலை. அதை ஊற்றும் போது, புஸ் புஸ் என்ற ஒலியுடன் வரும் கேஸ் போய் விடுமுன் மெதுவாகக் குடிக்கத் தொடங்க வேண்டும். ஆனால், உடனே தீர்ந்து போய் விடவும் கூடாது. வைத்து வைத்துக் குடிக்க வேண்டும். குடித்து முடித்ததும் அந்த ஆரஞ்சு வண்ணமும் சுவையும் நாக்கில் நெடு நேரம் நிலைக்க வேண்டும். எனவே உடனடியாக வேறு எதையும் குடிக்கவோ, திங்கவோ கூடாது.

அரை டம்பளர் டொரினாவையே அரைமணி நேரம் குடிப்பவனுக்கு, அண்ணன் ஒரு முழு டொரினா பாட்டிலை வாங்கிக் கொடுத்திருந்தார். உண்மையில் என்னால் குடிக்க முடியவில்லை. ஒவ்வொரு வாய் குடித்து முடித்ததும் அதன் அளவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தீர்ந்தபடியே தெரியவில்லை. குடிக்க முடியவில்லை என்று சொல்வதோ ஆகப் பெரிய அவமானம். அதனால் முக்கி முக்கி குடித்துக் கொண்டிருந்தேன்.

' நல்லா இருக்காலே' என்றார்.

'சூப்பர்ண்ணே' என்று தலையாட்டினேன். 

'ஏன்டா.. உங்க அக்காளுக்கு மட்டும் டொரினா பிடிக்காதோ' 

'தெரியல்லண்ணே.. அது அம்மா அதுக்கு வாங்கிக் கொடுத்து நான் பார்த்தேயில்லண்ணே'

'ஓ.. அவுக அம்மா வாங்கிக் கொடுத்தாதான் மகாராணி குடிப்பாகளோ' 

அக்காவை, 'மகாராணி' என்றழைத்த போது இருந்த நக்கல் என்னை எரிச்சல் படுத்தியது. ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. அப்போதுதான் சரியாக அக்கா பரிட்சை எழுதி முடித்து வந்து கொண்டிருந்தாள். வழக்கமாக வரும் அவளது தோழிகள் முன்னே செல்ல இவள் மட்டும் இரண்டடி பின்னால் வந்து கொண்டிருந்தாள். அவள் தூரத்திலிருந்தே எங்களைப் பார்த்துவிட்டாள்.

அப்போது சரியாக அண்ணன் தன் சைக்கிளில் இருந்து பாட்டொன்றை ஒலிக்க விட்டார் 'போகும் பாதை தூரமே, வாழும் காலம் கொஞ்சமே' என்று பாதியில் இருந்து பாட ஆரம்பித்தது. நான் அதன் ஆரம்ப வரிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இருந்தேன்.

அக்கா எங்களைக் கடந்து செல்லும் போது, அண்ணன் ஒரு டொரினாவை எடுத்து அக்காவின் பக்கம் நீட்டி, வேண்டுமா என்பது போல் தலையை அசைத்தார்.

அவள் இல்லையென்பதாக தலையாட்டினாள். அப்போது அவள் தலையில் இருந்து விழுந்த மல்லிகைப் பூக்களை நான் கவனித்தேன். அவள் லேசாகச் சிரித்தது போலத் தான் தெரிந்தது. கதிரேசன் அண்ணன் முன்னால் சிலுப்பியவாறு இருந்து முடியை உள்ளங்கையால் கோதி மேலே இழுத்துவிட்டுச் சிரித்தார். 

* * *

அன்று நான் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது, அடுக்களைக்குள் அம்மாவும், அக்காவின் அம்மாவும் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. 

'வசந்தாவ முருகேசன் கலியாணம் முடிக்கணும் ஆசைப்படுறாப்புலயாம்.  நேத்து சொஸைட்டிக்கு சீலைய வரவு வைக்கப் போயிருந்தப்ப வழியில பார்த்தேன் அந்தப் பையன. காசு பணம் ஒண்ணும் பெரிசா எதிர்ப்பார்க்கலைக்கா. முடிஞ்சதப் பண்ணுங்க. பொண்ணு மேல படிக்கணும்ன்னு ஆசைப்பட்டாலும் கலியாணம் பண்ணிட்டு நான் படிக்க வைக்கிறேன்னு சொன்னாப்புல. பார்த்தா நல்ல பையனாத்தான் தெரியுறாப்ல.  இருந்தாலும் நம்ம அண்ணாச்சிக்கிட்ட சொல்லி ஒரு வார்த்தை விசாரிக்க சொன்னா நல்லாருக்கும். ஆம்பிளைங்க பழக்க வழக்கமெல்லாம் அவுகனா கரெக்க்ட்டா சொல்லிப் பொடுவாப்புல'

'இதையெல்லாம் சொல்லுணுமா பொன்னக்கா. நாளைக்கே விசாரிக்கச் சொல்லுவோம். பையன் ரொம்பத் தெளிவுதேன். ஊர் காரியத்துலகூட அப்பப்போ முன்னாடி வந்து எடுத்துப் பண்ணப்போ பார்த்துருக்கேன். நம்ம வசந்தாவுக்கு ஏத்த சோடிதேன்.'

அடுத்த ஒரு வாரத்தில் எல்லாம் கூடி வந்தது. அக்காவுக்கு அன்று 'பூ வைக்க' கதிரேசன் அண்ணன் வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தார்கள். அன்றைக்கு அக்கா கிளிப்பச்சை நிற பட்டுப் புடவையில் அத்தனை அழகாக இருந்தாள். காதில் கம்மல் மாட்டி, தலை நிறைய பூ சூடி, அம்மாவின் நெக்லஸ் ஒன்றை வாங்கி அணிந்திருந்தாள். அது அம்மாவை விட அக்காவுக்குத்தான் அத்தனை பொருத்தமாக இருந்தது.

அவர்கள் வீடு சிறியது என்பதால், எங்கள் வீட்டில் வைத்துத்துதான் எல்லாம் நடந்தது. அங்கு வந்த கதிரேசன் அண்ணன் என்னைக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார். 

அடுத்த வைகாசியில் திருமணத்தைக் குறித்தனர். எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தது. அந்தச் சந்தோசம் எல்லாம் இரண்டே வாரம்தான். அந்த வெள்ளிக் கிழமை, முருகேசன் அண்ணனின் அப்பா, கடையைச் சாத்திவிட்டு இரவில் சைக்கிளில் வரும்போது கீழே விழுந்துவிட்டார். விழுந்தவர் இதயம் நின்று போய்விட்டது. அதோடு அக்காவின் கல்யாணமும்.

அதற்குப் பிறகு அக்கா வீட்டை விட்டு வெளியே வருவதையே நிறுத்திக் கொண்டார். அடுத்த வருடம் முருகேசன் அண்ணனுக்குக் கலியாணமாகி அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள் என்றான போதும் கூட, அக்காவுக்கு கல்யாணப் பேச்சே கூடி வரவில்லை.

பள்ளி முடிந்து நான் கல்லூரி செல்லும் போது 'நல்ல பிள்ளையா போய்ட்டு வாடா சரவணா' அவள் என் தலையைக் கோதிய போதும் அதே குளுமைதான் இருந்தது. 

எங்கள ஊரில் நடக்கும் மாரியம்மன் திருவிழா சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் விசேஷம். பொதுவாக ஏப்ரல், மே மாத கோடையில் வரும். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைக் காலம். ஆதலால், பொருள்வயின் பொருட்டு வெளியூரில் இருப்பவர்கள் கூட அனைவரும் கூடிய மட்டும் ஊருக்கு வந்துவிடுவர். ஊர் முழுவதும் உற்சாகம் நிரம்பி வழியும்.

காலையில் பூச்சப்பர பவனி. தெருவையே கூட்டித் தெளித்து, புத்தாடைகள் கட்டி, தேங்காய் பழத்துடன் அனைவரும் தெருவில் குழுமியிருந்தோம். கோவில் யானை எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அடுத்து, இளவட்டங்கள் சுற்றிலும் ஆடிவர கொட்டு மேளம் ஒலித்து வந்ததது. கொளுத்தி வைக்கப்பட்ட பத்திக்கட்டின் மணமும், தொடுத்து வைக்கப்பட்டிருந்த மல்லிகை மாலையின் மணமும், ஏற்றி வைக்கப்பட்ட மாவிளக்கிலிருந்து நெய் எரிந்து வரும் காந்தார வாசமும் சுற்றியெங்கும் கமழ்ந்து கொண்டிருந்தது. 

தீபாராதனை காட்டியபடி கோவில் பூசாரி வந்து கொண்டிருந்தார். வியர்வை மழையில் குளித்தவாறே மேளக்காரர்கள், உடல் அதிர, உள்ளோடும் குருதி கொதிக்க கொட்டடித்துக் கொண்டிருந்தனர். 

அருகில் நின்று கொண்டிருந்த வசந்தா அக்கா, தனது உடலை மெதுவாக முறுக்கி, முன்னும் பின்னுமாய் நெளியத் தொடங்கினார். அவரின் மூச்சு சர்ப்பமாய் சீறிற்று. பற்களை நரநர வென்று கடித்தவாறு சாமியாடத் தொடங்கியிருந்தார். எங்கிருந்து தான் வந்ததோ அவ்வளவு சக்தியும். தரையில் புரள எத்தனித்தவரை, அருகிலிருந்த பெண்கள் இருவர், தாங்கிப் பிடித்துக் கொண்டனர். கூட்டத்தின் கவனம் முழுவதும் அவரிடம் சென்றது. என்னைப் போன்ற சிறுவர்கள் எல்லோரும் வெருண்டு ஒதுங்கிக் கொண்டோம். 

சுற்றியிருந்த வயதான பாட்டிமார்கள் சிலர், 'உனக்கு என்னத்தா வேணும்.. வயசுக்கு வந்த புள்ளய இப்படிப் படுத்துறியே.. இது உனக்கே நியாமா?.. அவளுக்கு நாளைக்கு கல்யாணம் காட்சின்னு பாக்க வேணாமா' என்று அந்த அக்காவிடம் வேறு யாரிடமோ பேசும் தோரணையில் பேசிக் கொண்டிருந்தனர்.

சிலப் பல மிரட்டல்களுக்கும், வேண்டுகோள்களுக்கும் பிறகு, அதிரும் குரலில் அக்கா 'இப்ப எனக்குக் குடிக்க டொரினா வேண்டும்' என்றார். அருகிலிருந்த ஒருவர் சம்முகம் தாத்தாக் கடையில் இருந்து ஐஸில் வைக்கப்பட்ட இரண்டு டொரினாக்களை வாங்கி வந்து உடைத்துக் கொடுத்தார். இரண்டையும் சொட்டு மிச்சம் வைக்காமல் குடித்து முடித்து அவர் மீண்டும் அக்காவானார்.

கடந்த முறை மகியின் முதல் மொட்டைக் கூப்பிட அவளை விட்டுவிட்டேன். அப்போதும் அவள் வந்து அவன் கைகளில் நூறு ரூபாயைத் திணித்து, 'உங்கப்பன மாதிரி நீயும் இந்த அத்தையை மறந்துடாதேல..' என்று அவனை அள்ளி முத்தமிட்டுச் சென்றாள்.

மகியும் கூட அந்தக் கைகளின் குளுமையை உணர்ந்திருப்பானாயிருக்கும்.

இப்போது, இறுக்கம் சற்று குறையவே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். மலர் விழி, ' இடியாப்பம் செஞ்சு ஹாட் பாக்ஸில் வச்சுருக்கேன். முகம் கழுவிட்டு வந்தீங்கன்னா சாப்பிட ஆரம்பிக்கலாம்' என்றாள். 

அவளை மறித்து நிறுத்திவிட்டு, என் போனை எடுத்து, நான் மீண்டும் அம்மாவுக்கு அழைத்தேன் ' அம்மா.. வசந்தக்கா எப்படிச் செத்தா?' என்றேன். 'டொரினால பூச்சி மருந்த கலந்து குடிச்சுருக்கா பாதகத்தி..' என்றாள்.


O

Comments

Popular posts from this blog

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய்மை என்று வரைய

ரயில் புழு

வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட

கேண்மை

  தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றுக்காக நேர்காணல் வேண்டுமென்று அழைத்திருந்தார்கள். அழைத்தவர் தமிழின் முக்கியமான கவி. பக்கத்து மாநிலம் ஒன்றில் வசிக்கிறார். நேர்காணலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் வரவேண்டும். சிரமப்பட வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் விடாப்பிடியாக வருவதாகக் கூறிவிட்டார். முந்தைய சந்திப்பில் அவர் குறிப்பிட்டுப் பேசிய புத்தகம் ஒன்றை அவருக்குப் பரிசாக அளிப்பதற்காகப் புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் தடித் தடியான புத்தகங்களை எடுத்துத் தூக்கவும் அவற்றை இடம் மாற்றி வைப்பதுமே அயர்ச்சியாக இருக்கிறது. கவனமாகக் கையாள வேண்டியிருக்கிறது. மூப்பின் காரணமாக விரல்களில் வலுவில்லை. அப்போதுதான் புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்துக்குப் பின்னாலிருந்த அந்தக் கடிதம் கண்ணில் பட்டது.   அப்பாவின் ஸ்நேகிதரும் என்னுடைய பழைய முதலாளியுமான வரதராஜன் சாரிடமிருந்து வந்த கடிதம் அது. நேரடியாக என் பெயர் போட்டே வந்திருந்தது. அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே பூர்விகம். மாயவரம் பக்கத்தில் சிறு கிராமம். பால்யகால ஸ்நேகிதம். இருவரும் பிற்கால