Skip to main content

பதினான்காவது அறை - ஹிட்ச்காக் தொகுத்த மர்மக் கதைகள் (தமிழில் யூமா வாசுகி)



பெரும்பாலானோர் மர்மக் கதைகளை துப்பறியும் கதைகளோடு குழப்பிக் கொள்கிறார்கள். மர்மக் கதைகளில் அவை ஒரு வகை மட்டுமே. மனோதத்துவ பின்புலத்தில் எழுதப்பட்ட மர்மக் கதைகள் எனக்கு எப்போதும் உவப்பானவை. அவை மனித மனங்களின் இருண்மைப் பக்கங்களைப் பேசுவதன் மூலம் முக்கியத்துவம் பெருகின்றன. 

தமிழில் மர்மக் கதைகளுக்கான இடம் என்ன? இங்கு, அவை பெரும்பாலும் ஆரம்ப கட்ட வாசகனுக்கான நுழைவு வாயிலாகவே இருக்கின்றன. இன்றைய தேர்ந்த படிப்பாளிகள் பலரும் அங்கிருந்துதான் தனது வாசிப்பைத் தொடங்கியிருப்பார்கள்.

தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் எத்தனை பேர் மர்மங்களின் அழகியலை முன் வைத்து கதைகள் எழுதியிருக்கிறார்கள் என்று யோசித்தால் அவர்களையும், அவர்கள் எழுதிய கதைகளையும் விரல்விட்டு எண்ணிவிட முடியும் என்பதுதான் உண்மை. என்னால் உடனடியாக புதுமைப் பித்தன், சுஜாதா மற்றும் ஜெயமோகன் (உலோகம்) போன்றவர்களைத்தான் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது. சுஜாதா எழுதிய மர்மக் கதைகளின் தொகுப்பு ஒன்றினை உயிர்மை வெளியிட்டு இருப்பதாக ஞாபகம். 

புதுமைப் பித்தனின் "காஞ்சனை" இந்த வகையில் மிக முக்கியமான கதை.  அவரது மற்ற மர்மக் கதைகள் கொலைகாரன் கை (மாபஸானின் கதை ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது), டாக்டர் சம்பத், குற்றவாளி யார், ஒரு கொலை அனுபவம் போன்றவையெல்லம் என்னளவில் சுமாரான கதைகளே; பெரிதும் பேசப்படாதக் கதைகளும் கூட. 

இத்தொகுப்பில், மர்மத் திரைப்படங்களின் மன்னனான ஹிட்ச்காக் தொகுத்த அறுபதுக்கும் மேற்பட்ட மர்மக் கதைகளிலில் இருந்து ஏழு கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தமிழாக்கியிருக்கிறார்கள். அவரை பற்றிப் பேசுவதற்கு இந்தச் சின்னக் கட்டுரையில் இடம் போதாது. அன்னாரைப் பற்றித் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு சைக்கோ, வெர்டிகோ, தி பர்ட்ஸ், ரியர் விண்டோ (சமீபத்தில் வெளியாகி அதிகம் பேசப்பட்ட மணிகண்டனின் 'குற்றமே தண்டனை' படம் கூட இதன் பாதிப்பில் எடுக்கப்பட்டதே) போன்ற அவரது திரைப்படங்களையே பரிந்துரைக்கிறேன். 

மர்மக் கதைகளின் ஆதாரமே அவற்றின் எதிர்பாராத திருப்பங்களில்தாம் பொதிந்திருக்கிறது. அப்படியொரு அற்புதமான திருப்பத்தைக் கொண்டமைந்த சிறுகதை 'கறுப்புத் தொப்பி'. மேம்போக்கான கதைசொல்லலில் இப்படியான திருப்பங்கள் சாத்தியமில்லை. ஏனென்றால், கதைக்குள் நுழையாத வாசகன் எப்போதும் விழிப்புடனே இருக்கிறான். அதன் காரணமாக அவனுக்கு எதிர் வரும் திருப்பங்களை யூகிப்பது எளிதாகி விடுகிறது. எனவே நல்ல திருப்பு முனை கொண்ட கதைகளுக்கு வாசகனைத் தன்னுள் கரைத்துக்குள்ளும் வித்தை அவசியம். அப்படியானதொரு சிறுகதை தான் 'கறுப்புத் தொப்பி'.

ஒரு நல்ல மர்மக் கதையில் அதன் முடிவைப் பற்றிய குறிப்புகள் கதை நெடுகிலும் கொடுக்கப் பட்டிருக்கும் (இதே உத்தியை மர்மத் திரைப்படங்களிலும் காணலாம்). கதையின் முடிப்பு, அந்த குறிப்புக் கண்ணிகளை இணைக்கும் விதமாய் அமைக்கப்பட்டிருக்கும். அது வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக அமைவதுதான் அந்தக் கதையை உயிர்ப்புடன் வைக்கிறது. அந்த வகையில் முக்கியமான ஒரு கதை, இத்தொகுப்பில் இருக்கும் "விலங்குப் பயிற்சியாளர்".

 நல்ல த்ரில்லர் குறும்படம் எடுக்க விரும்பும் நண்பர்கள் இந்தப் புத்தகத்தின் தலைப்புக் கதையாக இருக்கும் 'பதினான்காவது அறை' சிறுகதையை பரிசீலிக்கலாம். சரியான 'மேக்கிங்' அமைந்தால் மிகச் சிறப்பான குறும்படமாக வருவதற்கான எல்லா அம்சங்களும் அந்தச் சிறுகதையில் பொதிந்துள்ளன. ஏற்கனவே இதில் இடம்பெற்றுள்ள, ராபர்ட் கோல்வி எழுதிய "மரண மணி" என்னும் சிறுகதை, "குற்றமே தண்டனை" என்னும் படமாக இயற்றப்பட்டு படம் பெரிதும் பேசவும் பட்டது. அதனால் தானோ என்னவோ அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் கதை, திரைக்கதைக்கு யார் பெயரையும் போடவில்லை. 

இந்தத் தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கதையாக ' நேரடி சாட்சி' சிறுகதையைக் கூறுவேன். சமீபத்தில் அராத்துவின் நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயமோகன் ( நன்றி : ஷ்ருதி டிவி நண்பர்கள்), அறம் எனப்படுவதற்கு முற்றிலும் எதிர் நிலையில் நின்று எழுதப்படுகிற எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்தக் கதை, அந்த வகையைச் சாரும். இந்தக் கதையை வாசித்து முடித்ததும், திரும்ப இந்தத் தொகுப்பை எடுப்பதற்கு எனக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டன. 

விமலாதித்த மாமல்லன் "தி இந்து"-வில் எழுதிய 'புனைவு என்னும் புதிர்' பத்தியில் இப்படி எழுதியிருப்பார் -  "எழுத்தாளனால் அவன் காணாத உலகத்தின் பாத்திரமாய் எப்படி ஆக முடிகிறதோ அதே போல, தேர்ந்த வாசகன் அவனுக்குக் காட்டப்படும் உலகை, அதுவரை பார்த்திராத போதிலும் சட்டெனப் பிடித்துக்கொள்கிறான்."

இத்தொகுப்பிலுள்ள கதைகளை வெறும் மர்மக் கதைகள் என்பதைத் தாண்டி, கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டு அதன் நுட்பங்களை உணர முட்படும் வாசகனுக்கு மிகச் சிறந்த வாசிப்பனுபவம் காத்திருக்கிறது. யூமா வாசுகி, தனது இடரலற்ற செம்மையான மொழிப்பெயர்ப்பின் மூலம் அதைச் சாத்தியமாக்கியிருக்கிறார். 

தமிழிலும், இவை போன்று மனதின் ஆழங்களைப் பேசும் மர்மக் கதைகளை யாராவது தேடித் தொகுத்தால் சிறப்பாக இருக்கும். 


O

Comments

Popular posts from this blog

மிருகம்

    அதிகாலையில் வரும்  வாட்ஸப்   குறுஞ்செய்திகளின்   கீச்சிடல்கள்   எரிச்ச லை க் கிளப்பத்   தொடங்கியிருந்தன . அவை  எதைப்   பற்றியதாக  இருக்கும் என்று  லஸண்ட்ராவுக்குத்  தெரியும்.  அப்பார்ட்மண்ட்டின்   அசோஸியேஸன் குழுமத்திற் கென்றே   தனியாகப்  பிரித்து  எலி   சத்தமிடுவதைப்   போல க்   கீச்சிடு ம் ஒலியைத்  தேர்ந்தெடுத்து  வைத்திருந்தாள்.    காலை யி லேயே   அதைப்  பார் த்து அன்றைய  தினத்தைக்   கெடுத்துக்கொள்ள வேண்டாம்  என்று முடிவு  செய் தவளாக ,   படுக்கை யை  உதறி  எழுந்தாள் . வானம்  மேகமூட்டமாயிருந்தது .  இரவில்  வரைந்து வைத்திருந்த  அக்ரலிக்  ஓவியத்தைப் பார்த்தாள்.  கருப்பு ,  மஞ்சள் ,  சாம்பல்  வண்ணங்களில்   தீட்டப்பட்ட   அரூப உருவங்க ள் பின் இருக்க ,  முன்னே  மரத்தாலான   ஒரு  பழைய   நாற்காலியை வரைந்து வைத்திருந்தாள்.  அது  ஒருவிதமான ...

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்

மாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம் -- குள்ளச்சித்திரன் சரித்திரம், வெளியேற்றம் நாவல்களை முன்வைத்து -- “சொல்லித் தீர்ந்துவிட்டன எல்லாக் கதைகளும். மறு கூறலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் புனைவு, சொல்லலின் நூதனத்தில் மட்டுமே  தன் உயிரை வைத்திருக்கிறது” – பகடையாட்டம் பின்னுரையில். இங்கே உள்ள கதைகள் அத்தனையும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன; புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை, சொல்லும் விதத்தில் மட்டுமே இனி புதிதாக ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியும் என்பதை யுவன் தீவிரமாக நம்புகிறார் என்பதை அவரின் புனைவுகளை தொடர்ந்து வாசிப்பதன் வழியே புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப் புதிதாக தன் கதைகளைச் சொல்வதற்கான ஓர் உத்தியாக மாற்றுமெய்மையைக் கையாள்கிறார். அவரின் முதல் நாவலான குள்ளச்சித்திரன் சரித்திரமும், வெளியேற்றமும் அத்தளத்தில் எழுதப்பட்ட  அவரின் முக்கியமான படைப்புகள் எனலாம்.  எது மாற்றுமெய்மை? முதலில் எது மெய்மை? மெய்மை என்பதை எளிமையான புரிதலுக்காக யதார்த்தம் என்று கொள்வோம். பெளதீக ரீதியாக, அறிவியலின் தர்க்கத்திற்கு உட்பட்டு நிகழும் யாதொன்றையும் யதார்த்தம் அல்லது மெய...

இரு கோப்பைகள்

ஞா யிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தேன்.  முதலில் அந்தச் சத்தம் பக்கத்து வீடுகளில் யாரோ மெதுவாக சுவரில் ஆணியடிப்பதைப் போன்று கேட்டது. அடுத்த முறை அந்தச் சத்தம் நொய்டாவின் தெருவோர தேநீர்க் கடைகளில் சூடான தேநீருக்கு இஞ்சியைத் தட்டிப் போடுவதற்காக தட்டுவதைப் போன்று 'தொப் தொப்'பென்று கேட்டது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை இரவு பதினோறு மணிக்கு இவை இரண்டுமே சாத்தியமில்லை. அதுவும் இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊரடங்கிப் போய்விடுகின்ற, பொதுப் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட அடுத்தவர்களுக்கு கேட்டுவிடாத கிசுகிசுக் குரலில் பேசும் மக்கள் வாழ்கின்ற சிட்னி போன்ற ஒரு பெரு நகரத்தில்  சுவர் ஆணிக்கோ, இரவுத் தேநீருக்கோ இந்நேரத்தில் வாய்ப்பு மிகவும் குறைவு.  "யாரோ கதவத் தட்டுற மாதிரியில்ல" என்று பக்கத்தில் படுத்திருந்த காவ்யா கேட்கும் போதுதான் அதை உணர்ந்தேன். எங்கள் ...