அ ம்மா மிகச் சாதாரணமாகத்தான் இந்தச் செய்தியைக் கூறினாள். இரவுச் சாப்பாட்டுக்கு சோள தோசையும், மல்லிச் சட்னியும் வைத்திருக்கிறேன். உனக்குக்கூட ரொம்பப் பிடிக்குமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையில் நிறுத்தி விசயத்தைச் சொன்னாள். வசந்தா அக்கா இறந்துவிட்டாளாம். அதுவும் தற்கொலையாம் என்றாள். அவ்வளவுதான் அதற்குப் பிறகு அவள் பேசிய எதுவுமே என் காதில் விழவில்லை. மலர்விழியிடம் ஹிமாலயா என்றெழுதியிருந்த ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு, கட்டியிருந்த கைலியிலிருந்து ட்ராக்சுக்கு மாறினேன். ஒரு மாதிரி புழுக்கமாக இருக்கிறது. கடற்கரை வரையில் ஒரு நடை போய்வருகிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு, செருப்பையணிந்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினேன். கிரைண்டரில் ஆட்டி வைத்திருந்த மாவை வழித்துக் கொண்டிருந்தவள், நெற்றியில் வந்து விழுந்த முடியை புறங்கையால் ஒதுக்கிவிட்டு 'சரி' என்றாள். இறங்கி நூறடி நடந்தால் கடற்கரை வந்துவிடும். மனது சஞ்சலப்பட்டுப் போகும் தருணங்களில் எல்லாம் முகத்தில் காற்று பட கொஞ்சம் தூரம் கடலைப் பார்த்து நடந்து வந்தால் போதும் எனக்கு. வீடு திரும்பும் போ...