வரும் வார இறுதியில் நடைபெறவிருக்கும் 'விஷ்ணுபுரம் விருது' விழாவுக்குச் செல்வதன் நிமித்தம் சில படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கற்ற வாசிப்பைவிட இது போன்ற ஒப்புக்கொள்ளப்பட்ட அர்பணிப்புடன் கூடிய வாசிப்பு அதுவரை அறிந்திறாத பல புதிய திறப்புகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது. இப்படியில்லையென்றால் சீ.முத்துசாமி, ஜெனியஸ் பரியத் போன்ற பெயர்களையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டேன் என்பதே உண்மை. தமிழ் இலக்கியத்தில் கவிதை, நாவல் போன்ற வடிவங்களைக் காட்டிலும் சிறுகதைப்பரப்பில் மிகப் பெரிய அளவில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இப்போது புதிதாக எழுத வருபவர்களின் வரமும் சாபமும் அதுதான். இதுவரை சொல்லப்படாத கதைகளை அல்லது குறைந்தபட்சம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்காத முறையில் எழுத வேண்டிய நிர்பந்தம் இன்றைக்கு எழுத வருபவர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் இவ்விரண்டையும் பூர்த்தி செய்யும் சில கதைகளை உள்ளடக்கி வந்துள்ளது தூயனின் 'இருமுனை' தொகுப்பு (யாவரும் வெளியீடு). இவரின் பெரும்பாலான சிறுகதைகள் மனித மனதின் நுட்பான அகச்சிக்கல்களை அலசுகின்றன. தொகுப்பின் தலைப்புக் கதையான ...