வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றால் சத்தம் வருவது நிற்கவில்லை. பொங்கல் விடுமுறை முடிந்து அன்றுதான் அலுவலகம் திரும்ப வேண்டும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை. வெளியில் எங்கும் செல்லவில்லை. சோபாவிலிருந்து படுக்கைதான் நான் இந்த நாட்களில் அதிகம் நடந்த தொலைவு. சுகமாய்ச் சோம்பிக் கிடந்தேன். நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் என்றே மூன்று நாட்களைக் கடத்திவிட்டேன். ஊருக்குப் போக முடியாது. இங்கே நண்பர்களைப் பார்த்தாலும் அவர்களுடைய கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அறிவேன். இன்றும்கூட அலுவலகம் போனதும் எல்லோரும் விசாரிப்பார்கள். பொய் சொல்ல வேண்டும். சலிப்பாக இருந்தது. மொபைலை எடுத்தேன். பார்ப்பதற்கு எதுவுமிருக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்துச் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து கையில் பிரஷை எடுப்பதற்கு என்னை நானே பிடித்துத் தள்ள வேண்டியதாக இருந்தது. முந்தைய நாள் இரவு வரவேற்பறையின் ஜன்னல்களைச் சாத்தாமலேயே உறங்கிப் போய்விட்டேன். சாப்பிட்டுவிட்ட...