அன்றுதான் ஷிஃப்ட் மாறியிருந்தது. முதல் நாள் பகலிரவு முடித்துவிட்டு உடனடியாக மறுநாள் அதிகாலை ஷிஃப்ட் எடுக்க வேண்டும். ஒரே ஷிஃப்ட் மூன்று மாதங்களுக்கோ, குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கோ தொடர்ந்தால்கூட சற்று பரவாயில்லாமலிருக்கும். வாரத்துக்கு ஒரு முறை மாறுவதும் ஆட்பற்றாக்குறையின் பொருட்டு ஒருவர் வராது போனாலும் அதையும் சேர்த்து எடுத்துப் பார்ப்பதும் உடலின் இயங்குவிதிகளுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம். ஆனால், வேறு வழியில்லை. பிழைப்பு இப்படி. ஷிஃப்ட் மாற்றத்தால் அதிகாலை சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டும் என்ற பரபரப்பிலேயே தூக்கம் சரியாககூடவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டு ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பித்தேன். கவனத்தை எண்களில், அவற்றின் வளைந்து நெளிந்த வடிவங்களில் குவிப்பதன் மூலம் சலனத்தைக் கட்டுப்படுத்தித் தூக்கத்தை வரவழைக்கும் உத்தி. பெரும்பாலான சமயங்களில் சரியாகவே வேலை செய்யும். சில நேரங்களில் ஆயிரங்களைத் தாண்டி எண்ணிக்கை மட்டும் ஓடிக்கொண்டிருக்கும். அன்று, அது சரியாக ஒத்துழைக்க, அப்போதுதான் சற்று கண்ணயர்ந்திருப்பேன். அழைப்பு மணி அடித்தது. பக்கத்திலிருந்த புவனாவை முழங்கையால் மெதுவாக இடித்தேன்...