சூ ரியனை மேகங்கள் மறைத்து நின்றன. வெம்மையும் புழுக்கமும் உள்ளுக்குள் இருந்ததைப் போலவே வெளியேயும் வியாபித்திருந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. வழமை போலவே கிழவிகள் பட்டியக்கல்லில் அமர்ந்து ஊர்க்கதைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளை பள்ளிக்குக் கிளப்பி, கணவனை அலுவலகத்துக்கோ கடைக்கோ அனுப்பிவைத்துவிட்டு குளித்துக் கிளம்பி கோவிலுக்குப் போய்த் திரும்பிக் கொண்டிருந்த பெண்களில் ஒருத்திக்கு அப்படியே மல்லி சித்தியின் சாயல். தலைக்கு குளித்து சடையைப் பின்னாமல் கடைசியில் ஒரு முடிச்சுப் போட்டு இருந்தாள். மேலே சூட்டப்பட்டிருந்த கையகல கனகாம்பரமும் அவளைப் போலவே. ஆறு மாதங்களுக்குப் பின் ஊருக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனாலும் யாரிடமும் முகம் கொடுத்துப் பேசப் பிடிக்கவில்லை. போனமுறை ஊருக்கு வந்திருந்த போது கூட அத்தை வீட்டுக்குப் போயிருக்கவில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு போய் நிற்பது? ஆனால் இந்த முறை அப்படி இருந்துவிட முடியாது. அது முறையுமல்ல. சின்னத்தாயி கிழவிதான் கூப்பிட்டாள். அவளுக்குத்தான் அப்படியொரு கட்டைக் குரல் உண்டு. சிறு வயதில் அவள் வீட்டு முன் இருந்த சிறிய பொட்டலில்தா...