த பால் தலைகள் சேகரிப்பதைப் போல, விதவிதமான நாணயங்கள் சேகரிப்பதைப் போல, நான் எனக்க்குப் பிடித்த எழுத்தாளர்களின் நூலாக்கம் பெற்ற முதல் படைப்புகளை வாசித்துவிடுவது என்று வைத்திருக்கிறேன். குறிப்பாக சிறுகதைகளை இப்படிச் சேகரித்து, அவர்களின் சமீப கால எழுத்துக்களோடு ஒப்பிட்டு வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். உண்மையில் இதை ஒரு பயிற்சியாகவே செய்து வருகிறேன். இப்படி ஒப்பிட்டு வாசிக்கும் போது, முதல் தொகுதியிலிருந்து இன்றைய எழுத்து வரை அதே அடர்த்தியுடனும் வீரியத்துடனும் எழுதி வருபவர்கள், எங்கோ ஆரம்பித்து எப்படியோ வந்து நிற்பவர்கள், குறிப்பிடத்தக்க படைப்புகளை முதல் தொகுதியில் கொடுத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சம் தங்களை புடம் போட்டு முக்கியமான படைப்பாளிப்பாய் வளர்ந்து நிற்பவர்கள் என்று பல்வேறு தரிசனங்களை இத்தகைய வாசிப்பின் மூலம் கண்டடைய முடிகிறது. இப்படியான வாசிப்பின் தொடர்ச்சியாக எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் 'பிறிதொரு நதிக்கரை' தொகுப்பை வாசிக்க எடுத்தேன். இப்போது வாசித்து முடித்து இதை எழுதும் போது மேலே சொன்ன கடைசி வகைமையில் இவரை வைக்கத் தோன்றுகிறது. அடிப்படையில் கவிதையில் இருந்...