தா ணிப்பாறையை நோக்கி பயணம். இங்கிருந்து ஸ்ரீவி. ஸ்ரீவியிலிருந்து கிருஷ்ணன் கோவில். அங்கிருந்து வத்ராப்பு, அடுத்து தாணிப்பாறை. இப்படித்தான் இதற்குமுன்பு அங்கு போய் வந்திருந்தவர்கள் வழி கூறினார்கள். வழிதவறிப் போனாலும் பெரிய பாதகமில்லை. வண்டியை நிறுத்தி அருகில் இருக்கும் பெட்டிக்கடை ஒன்றில் வழி கேட்டால் சொல்லிவிடுவார்கள். கடந்த ஒரு வாரத் தேடலுக்கு இன்றாவது விடை கிடைக்குமா என்றெனக்குத் தெரியவில்லை. எங்கோ ஆரம்பித்து இன்று சித்தர் ஒருவரைத் தேடிய பயணத்தில் வந்து நிற்பதைப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. தகவல் பகுப்பாய்வில் முனைவர்ப் பட்டம் என்பது மொட்டைத் தலை என்றால், சோழிச் சித்தரைத் தேடிய பயணம் முழங்கால் தானே. இரண்டுக்கும் முடிச்சுப் போடப் பணித்திருப்பதற்குப் பெயர் என்ன என்பதுதான் இப்போது வரை விளங்கவில்லை. "இன்றைய தேதியில் ஆராய்ச்சிப் படிப்புக்கு நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு மிக முக்கியமானது. உலகமே தகவல்களை முன்வைத்துச் சுழன்று கொண்டிருக்கிறது. உலகில் இன்றைக்கு தங்கம், வெள்ளியைவிட மதிப்புமிக்க பொருளொன்று உண்டென்றால் அது தகவல் தான். கொட்டிக் கிடக்கும் தகவல்களை முறைப்படுத்தி...