மா மரக் கட்டையில் செய்த அறையின் கதவுகள் அதிக சிரமம் தரவில்லை. இழுத்து ஓங்கி அடித்ததில் தாழ்ப்பாளைப் பிணைத்திருந்த அதன் திருகாணிகள் கழன்று கொண்டன. அப்பாவின் வேட்டியினைக் கயிறாகத் திரித்துச் சுருக்கிட்டுத் தொங்கிக்கொண்டிருந்தான். எதிரே இருந்த புகைப்படத்தில் அவன் அப்பா கம்பீரமாக புன்னகைத்துக் கொண்டிருந்தார். அப்புகைப்படம் மாட்டப்பட்ட சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேசையின் மேலே, மருந்துப்புட்டியின் கீழே படபடத்த மருத்துவப் பரிந்துரைச்சீட்டின் ரீங்காரம் அந்த அறையின் அமைதியைக் குலைத்தது. அதன் அருகே ஒரு டயரியும் அதில் சில குறிப்புகளும் இருந்தன. குறிப்பு 1. வாழ்வில் ஊறிய கசப்பு முழுவதையும் உள்ளிழுத்துப் புகையாக்கி வெளித்தள்ளிக் கொண்டிருந்தேன். நான் புகைப்பது பற்றி அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். அது குறித்து அவருக்குப் புகார்கள்கூட இருந்திருக்கலாம். ஆனால் தன் வாழ்வின் கடைசிக் கணம் வரை அதைப்பற்றி ஒரு வார்த்தையும் கேட்டுக்கொண்டதில்லை. யாரிடத்தும் தனக்குத் தெரிந்ததாகக்கூட அவர் காட்டிக்கொண்டதில்லை. அவரின் பிள்ளைகளில் அவரிடம் அதிகம் பிணக்கும் சிடுக்கும் கொண்ட பிள்ளையாக நானே இருந்திருக்கிறே...